இலக்கிய மாநாடும் நடத்துவதாக கொழும்பு தமிழ்ச் சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் அறிவித்துள்ளன. இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது என இந்த விழா குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.இது குறித்து இலங்கையில் தமிழர் என்னும் நூலின் ஆசிரியர் முனைவர் மு.குணசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாரதி இருந்தால் வசை பாடி இருப்பான்........
எதிர்வரும் இரண்டாம் திகதி கொழும்பில் உள்ள தமிழ்ச்சங்கம் புரட்சிக் கவிஞர் பாரதிக்கு விழா எடுக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ் மக்களும் பாரிய அழிவுகளைச் சந்தித்து இன்னமும் அவர்கள் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் வற்றாமல் சொரிந்த வண்ணம் இருக்கிறது. அத்துடன் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இன்னமும் அகதிமுகாம்களில் அடைபட்டுக் கிடந்து தாங்கொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

ஈழவிடுதலைக்காக ஈழமக்கள் சுதந்திரத்திற்காக வசந்தகாலங்களையெல்லாம் உதறித்தள்ளி விட்டு போராடிய இளந் தலைமுறையினா பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் சிங்கள அரசின் சிறையில் அடைபட்டு அனல் இடைபட்ட புழுக்கள் போல நித்தம் நித்தம் துடித்துத் துடித்துச் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமழ் ஈழ மண் நாளுக்கு நாள் சிங்கள ஏகாதிபத்திய வாதிகளால் பறிக்கப்பட்டு வருகிறது. தமிழ் பிரதேசங்களில் உள்ள தமிழ் கிராமங்களின் பெயர்களும் வீதிகளின் பெயர்களும் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ் பிரதேசங்களில் புத்த கோவில்கள் கட்டப்பட்ட வண்ணம் இருக்கின்றன. என்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் விதவைப் பெண்கள் தமது வாழ்க்கையைத் துளைத்து விட்டு வாழ எதுவித வழியும் இன்றி சோகக் கடலில் மூழ்கி இருக்கிறார்கள்.
தமிழ் ஈழமெங்கும் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அவர்களின் கோர பிடிக்குள் தமிழீழ மக்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டிய எவ்வளவோ பெறுப்பு படித்த தமிழ் மக்களுக்கு உண்டு.
இவைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினர் பாரதிக்கு விழா எடுப்பது ஒரு கேலிக்கூத்தான விடயமாகும். புரட்சிப்பாடல்கள் மூலம் சுதந்திரம் வேண்டி நின்ற பாரதியரின் ஆன்மா இம் மேன் மக்களின் நடவடிக்கையை கண்டு நிச்சயம் வெறுப்பும் விரக்தியும் அடையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
இவர்கள் எடுக்க இருக்கும் பாரதி விழாவானது ஈழத்தமிழர்களுக்கு எதுவித் பிரச்சினைகளும் இல்லை அவர்கள் விழா எடுத்துக் கொண்டாடும் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையே உலகத்திற்குக் காட்டி நிற்கும். இவ்வாறான தேவையற்ற விழாக்கள் சிங்கள இனவாத அரசிற்கு நிச்சயம் ஒரு சாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும். பாரதிக்கு விழா எடுப்பதன் மூலம் தமிழ் மொழியைக் காப்பாற்றி விடலாம் என்று யாராவது அறிவு ஜீவிகள் நினைப்பார்களேயானால் அதை விட பிற்போக்குத் தனம் வெறென்றாக இருக்க முடியாது.
தமிழீழத்தில் தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டிய பல்வேறுபட்ட பொறுப்புக்களும் கடமைகளும் படித்த தமிழ் மக்களுக்கு உண்டு. ஆனால் பாரதிக்கு விழா எடுத்து அதன் மூலம் தங்களுடைய புலமைசார் பசியை தீர்த்துக்கொள்வதை விட மேற்கொண்டு இவர்களால் எதையும் சாதித்து விட முடியாது. ரோம் நகரம் எரிந்து கொண்டு இருக்கும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக பாரதி விழாவைப் பார்க்க முடிகிறது.
தமிழ் மக்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் தமிழ் தேசத்தின் மீதும் உண்மையான பற்றுக்கொண்டவாகளால் இவ்வாறான விழாவை இச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடத்த முடிகிறது என்று எண்ணும் பொழுது உணர்வுள்ள எந்தத் தமிழனும் வேதனை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். எனவே இந்த பாரதி விழா இவ்வாறான ஒரு காலகட்டத்தில் தேவைதான என கொழும்புத் தமிழ் சங்கம் மிகத் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பாரதி விழாவை நடத்தி வருகின்றோம் என்பதற்காக இவ்வாறான ஒரு இக்கட்டான நிலைமையில் தமிழ் மக்கள் வாழும் பொழுது ஒரு பாரதி விழா தேவைதானா எனவும் அவர்கள் சிந்திக்க வேண்டும். பாரதி விழா நடாத்தா விட்டால் தமிழ் ஒரு போதும் அழிந்து விடாது. ஆனால் இலங்கையில் ஒவ்வொரு நாளும் தமிழ் தேசமும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் திட்டமிட்டு சிங்கள இன வாத அரசால் அழிக்கப்பட்டு வருகிறது.
அதனை எவ்வாறு தடுத்து நிறுத்தி தமிழ் தேசத்தையும், தமிழ் மொழியையும். தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முடியும் என்ற பாரிய பொறுப்பே தமிழ் சங்கத்திற்கு உரிய வரலாற்றுக் கடமையாகும். ஈழத்தமிழன் அழிந்து போனதிற்கு காரணமே போலியான சித்தாந்தங்களும் பகட்டுக்களும் அறிவியல் பூர்வம் அற்ற நடவடிக்கைகளும் தான் என்று ஒருவர் சிந்திப்பதில் தவறு இருக்க முடியாது.
சிந்தித்துச் செயலாற்றுங்கள்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.