பிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர்கள் சிலர் இன்று சிறிலங்கா திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் புகலிடம்கோரி பிரித்தானியாவுக்குச் சென்ற குறித்த இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு அந்த நாட்டின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து அவர்கள் நாடு திரும்பியதன் பின்னர் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர்களை தேசிய இரகசிய தகவல்கள் பணியகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை பிரித்தானியா இடைநிறுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஆராய்வது தொடர்பான கொள்கைகளையும் மீளாய்வு செய்ய வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் இன்று திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கண்காணிப்பகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் குறித்த தகவல்களை பிரித்தானிய அரசாங்கம் அறிந்துகொள்ளும் வரையிலாவது அவர்களை திருப்பியனுப்புவதை இடைநிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.