மழை விட்டும் தூறல் விட்ட பாடில்லை என்று சொல்வார்கள். உலகின் மிகப் புதிய நாடு தெற்கு சூடான் தோன்றினாலும் அதன் அகதிப் பிரச்சனை முடிவதற்கு மாறாகத் தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதிக்கு உத்தரவாதம் வழங்கப்படுவதாகக் கூறும் அரசு தமிழர்களை ஓசை படாமல் தாக்குவதில் ஈடுபடுகிறது.

தெற்கு சூடானை உருவாக்கும் போது தெற்கு சூடானுக்கு ஆதரவாகப் போரிட்ட நூபா(Nuba) மக்கள் வாழும் தெற்கு கொர்டோபன் (South Kordofan) மலைப் பிரதேசம் தெற்கு சூடானுடன் இணைக்கப்படவில்லை. சென்ற யூலை (2011) புதிய நாடு தொடங்கியபோது நூபா மக்கள் மீதான தாக்குதலை சூடான் அரசு தீவிரப் படுத்தியது.
சூடான் தலைவர் ஓமார் அல் பஷீர் இந்த மக்களைத் தாக்கி அழிப்பதில் ஈடுபடுகிறார். டாப+ர் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சு, தரைத் தாக்குதல், பாலியல் வல்லுறவு அத்தனையும் இப்போது நூபா மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
அல் பஷீரின் ஆயுதப் படைகள், துணை ஆயுதக் குழுக்கள், இரகசியப் பொலிஸ் என்பன தெற்கு கொர்டோபன் தலைநகர் கடுக்கிலி (Kadugli) தெருக்களில் பொது மக்களைக் கொன்று சடலங்களை வீசியுள்ளதாக வெளியேறும் அகதிகள் தெரிவிக்கின்றனர்.
நூபா போராட்டக் குழுக்களை அழிக்க முடியாத சூடான் அரச படைகள் பொது மக்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்துகின்றன. உணவு வழங்கல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. நூபா மக்கள் தெற்கு சூடானுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். ஜநா அதிகாரிகளின் மதிப்பீடுகளின்படி 400,000 வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
சூடானில் முன்பு பணியாற்றிய ஜநா மனிதநேயப் பணியாளர் முக்கேஷ் கபிலா (Mukesh Kap) கருத்துத் தெரிவிக்கையில் “மீண்டுமொரு டாபூர் களமுனை திறக்கப்பட்டுள்ளது” என்றார். தெற்கு சூடானின் வடக்கு எல்லை ஓரமாகத் திறக்கப்பட்ட யீடா (Yida) அகதி முகாமில் 30,000 வரையான நூபா மக்கள் கால்நடையாக வந்துள்ளனர்.
இவர்களிற் பெரும்பாலானோர் பெற்றாரை இழந்த சிறுவர்கள். இவர்களுடைய பராமரிப்பு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சென்ற ஏப்ரல் 2012ல் மாத்திரம் 7000 அகதிகள் வந்துள்ளனர். இன்னும் வந்தபடி இருக்கின்றனர். சுகாதாரப் பிரச்சனைகளால் பல சிறுமிகள் அகதி முகாமில் இறந்துள்ளனர்.
யீடா அகதி முகாமுக்கு உதவ ஜநா அகதிகள் ஆணையம் தயக்கம் காட்டுகிறது. எல்லைக்கு அண்மையாக இருப்பதால் சூடான் விமானத் தாக்குதல் ஆபத்து இருக்கிறது. இரு சிறிய அகதி முகாம்களை அகதிகள் ஆணையம் நாட்டின் உட்புறத்தில் அமைத்துள்ளது.
அங்கு செல்ல அகதிகள் மறுத்துள்ளனர். அந்த முகாம்கள் மரங்கள் இல்லாத சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதலானது. இதை மறைப்பதற்கு அகதிகள் ஆணையம் ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குகிறது.
“நாங்கள் கழிப்பிட வசதிகளை எமது பொறுப்பில் இருக்கும் இரு முகாம்களிலும் செய்து கொடுத்துள்ளோம். உணவு வழங்கலையும் தாராளமாகச் செய்கிறோம்” என்ற அகதிகள் ஆணைய அதிகாரிகளின் கூற்றை தன்னார்வத் தொண்டர்கள் நம்புவதற்கு மறுக்கின்றனர்.
நூபா மக்கள் யீடா அகதி முகாமை மாத்திரம் நாடுகின்றனர். இதை அதிகாரபூர்வமான அகதி முகாமாகப் பிரகடனப் படுத்தாவிட்டால் சூடான் குண்டு வீச்சு விமாணங்களுக்கு அகதிகள் இலக்காகும் ஆபத்து இருக்கிறது. அண்மைக் காலமாக ஜநா அகதிகள் ஆணையம் காட்டும் தடுமாற்றமும் விவேகமின்மையும் கண்டிக்கத் தக்கதாக அமைகின்றன.
ஜனவரி 2007ம் ஆண்டில் மாத்திரம் 21.018.589 அகதிகளை ஆணையம் பொறுப்பேற்றுள்ளது. 2008ம் ஆண்டு கிடைத்த தகவலின்படி ஜநா அகதிகள் ஆணையத்தின் பணியாளர் எண்ணிக்கை மாத்திரம் 6,351 இவர்கள் 117 நாடுகளில் பணியாற்றுகிறார்கள்.
2012ம் ஆண்டில் அகதிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தகவல் இல்லை. ஜநா அகதிகள் ஆணையத்தின் நிதி ஆதாரம் ஜநாவின் பொது நிதியில் இருந்து கிடைப்பதில்லை. செல்வந்த நாடுகள் கொடுக்கும் நன்கொடைகளில் ஆணையம் தனது இயக்கத்திற்குத் தங்கியுள்ளது.
இதன் காரணமாக ஆணையத்தால் திறம்படச் செயற்பட முடியவில்லை. கொடையாளி நாடுகளின் வெளியுறவுக் கொள்கைக்கு அமைவாகச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஆணையத்திற்கு இருக்கிறது. அதாவது அமெரிக்கா, ஜக்கிய இராச்சியம், போன்ற கொடையாளி நாடுகளின் சொற்படி நடக்க வேண்டிய கட்டாயம் ஆணையத்திற்கு இருக்கிறது.
அகதிகள் ஆணையத்தின் பலவீனம் இது தான். மேற்கு நாடுகளைப் பொறுத்தளவில் தெற்கு சூடான் என்ற புதிய நாட்டின் உதயத்தோடு சூடான் பிரச்சனை முடிந்த முடிவாகி விட்டது. ஆனால் அதே மேற்கு நாடுகள் புதிய நாட்டின் எல்லைக் கோட்டைக் கீறும் போது நூபா மக்களைக் கணக்கில் எடுக்கத் தவறியுள்ளன.
இலங்கை அகதிகள் நிலவரமும் கிட்டத்தட்ட அதே மாதிரித் தான் இருக்கிறது. 2009ம் ஆண்டுடன் மேற்கு நாடுகள் விரும்பியதைப் போல் அரச படைகள் வெற்றி பெற்றுள்ளன. அமைதி திரும்பி விட்டது என்று சொல்லியபடி மேற்கு நாடுகள் தஞ்சமடைந்த தமிழர்களைத் திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளன.
திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு என்ன விதமான வரவேற்பு கிடைக்கிறது என்பது பற்றி அவை கவலைப்படுவதில்லை. இலங்கைக்குச் செல்லும் அகதிகள் கைது செய்து விசாரணை செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள். காணாமற் போகச் செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளன.
மேற்கு நாடுகளுக்கு இது பற்றிய கவலை கிடையாது. ஜநா அகதிகள் ஆணையத்தின் நிலைப்பாடும் அதுவாகத் தான் இருக்கிறது. 1951ம் ஆண்டின் ஜநா அகதிகள் உடன்படிக்கையும் 1967ம் ஆண்டின் அதற்கான திருத்தமும் வலுக்காட்டாயமாகத் திருப்பி அனுப்புவதைத் தடுக்கின்றன.
ஜநா அகதிகள் ஆணையம் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதில்லை. ஆனால் அகதிகளை திரும்பிச் செல்ல வைக்கும் உத்திகளை அது தாரளமாகப் பயன்படுத்துகிறது. தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்கள் இதை நன்கு அனுபவிக்கின்றனர்.
மார்ச் 2012ல் மலேசியா அகதிகள் ஆணையக் கிளையின் அதிகாரி யான்ரே இஸ்மாயில்(Yante Ismail) வெளியிட்ட தகவலின் படி ஜனவரி 2012 வரை 97,000 அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்;ளனர். இவர்களில் 88,500 பேர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள். மிகுதி 8,200 பேரில் 4,400 பேர் இலங்கையில் இருந்தும் 1000 பேர் சொமாலியாவில் இருந்தும், 770பேர் ஈராக்கில் இருந்தும், 440பேர் ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்துள்ளனர்.
மலேசியாவில் முகாம்கள் திறக்கப்படவில்லை. அகதிகள் உலாவுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மலேசிய குடிவரவுத் திணைக்களம் மலேசிய பொலிஸ் ஆகியவற்றுடன் அகதிகள் ஆணையம் ஒப்பந்தம் செய்யாத படியால் ஆணையத்தில் பதிவு செய்த அகதிகளை நாடுகடத்த இந்த இரு அதிகார மையங்களாலும் முடியும்.
மலேசிய அகதிகள் ஆணையம் அகதி அந்தஸ்து வழங்கும் அகதிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்குகிறது. இது ஓரளவு நடமாட்டப் பாதுகாப்பை வழங்குகிறது. விண்ணப்பம் செய்வோர் அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை.
அகதிகள் ஆணைய அதிகாரிகள் விண்ணப்பதாரிகளை விசாரணை செய்கிறார்கள். இந்த விசாரணைகள் நீதி மன்ற விசாரணைக்கு நிகராகக் குறுக்கு விசாரணை, ஆதாரங்கள், உண்மைத் தன்மைப் பரிசோதனை என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது.
விசாரணைகள் பல தவணைகளாக நடத்தப்படுகின்றன. ஒரு தவணைக்கும் அடுத்த தவணைக்கும் இடையில் பல மாத இடைவெளி சிலசமயம் ஒரு வருடம் கூட ஏற்படுகிறது. விசாரணை செய்யும் அதிகாரிகளும் வௌ;வேறு நபர்களாக இடம்பெறுகின்றனர். இந்த விசாரணைகளின் நோக்கம் இரண்டு.
ஒன்று அகதியின் நினைவாற்றல் பரிசோதனை (Test of Memory). இரண்டு அகதி சொல்லும் வாக்கு மூலம் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று பார்ப்பது (Consistency)விசாரணைத் தவணைகளை நீண்ட நாட்களுக்கு ஒத்தி வைப்பதின் நோக்கம் இந்த இரண்டையும் உள்ளடக்கியது.
மனநிலை குழம்பியுள்ள அகதிகளைத் தடுமாற வைத்து அவர்களுடைய விண்ணப்பத்தை நிராகரிப்பதையே மேற்கூறிய விசாரணைகளின் குறிக்கோளாக இருக்கிறது. அகதிகளுக்கான அடையாள அட்டை மறுக்கப்பட்டவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.
அவர்களுக்கு அகதி ஆணையத்தின் பாதுகாப்பு கிடையாது. குடிவரவுத் திணைக்களம், பொலிஸ் ஆகியோரால் நாடுகடத்தப்படும் ஆபத்து அவர்களைத் தொடர்கிறது. சொந்த நாட்டிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவோர் அனுபவிக்கும் துன்பத்தை எழுத்தில் போடமுடியாது.
அகதிகள் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கொடையாளி நாடுகளின் நலனுக்கு அமைவாகச் செயற்படாமல் அகதிகளின் நலனுக்கு அமைவாகச் செயற்பட்டால் மாத்திரமே அதனால் தனது இருப்பை நியாயப்படுத்த முடியும்.