ஸ்ராஸ்பூர்க் நகர மையப்பகுதியில் மே-18ன் போர்க்குற்ற நாள் நிகழ்வு இன்று காலை 08.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் ஸ்ராஸ்பூர்க்வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டனர். மேலும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் தொடருகின்ற தமிழினப்படுகொலை தொடர்பாகவும் அனைத்துலக விசாரணைக்கான நடவடிக்கைகளைப் பிரான்ஸ் அரசு முன்னெடுக்க வேண்டுமெனக் கோரி, பிரெஞ்சு மக்களிடம் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
பின்னர் மாலை 17.00மணியளவில் உண்ணாநோன்பை நிறைவுசெய்வதற்காக வருகைதந்த பிரான்சுப் பாராளுமன்ற உறுப்பினர் திரு அர்மான்ட் யுங் அவர்களின் உதவியாளரிடம் மனு கையளிக்கப்பட்டது. அத்துடன் வருகை தந்திருந்த உதவி மேயர் அவர்களால் பழச்சாறு வழங்கி அடையாள உண்ணாநோன்பு நிறைவுசெய்யப்பட்டது. மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்தும் தமது நீதிக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் கூறினார்.