About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 5, 2012

உடல் மெலிந்தாலும் உறுதி தளராத பழ.நெடுமாறன் அவர்கள்.! – செண்பகத்தார்

பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்று நூலின் ஆசிரியர் பழ நெடுமாறன் பற்றிய மேலதிக தகவல்களை அறிய உலகத் தமிழர்கள் ஆவலாக உள்ளனர். அவர் தன்னை புலிகளின் நெடுநாள் ஆதரவாளன் என்று வெளிப்படையாகக் கூறுபவர். இதற்கான விலையை அவர் கொடுத்து வருகிறார்.

மத்திய மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்பினர் அவரை நிழல் போல் தொடர்கின்றனர். அவருடைய இயல்பு வாழ்க்கை தடம் பிரண்டுள்ளது. அவர் சிறை செல்ல நேர்ந்தது. உறுதிக்கு உதாரணமாக விளங்கும் அவர் புலிகளின் குரலாகவும் எழுத்தாகவும் திகழ்கிறார்.

பழ நெடுமாறன் மதுரையில் 1933 மார்ச்சு 10ம் நாள் பிறந்தவர். தந்தை பழனியப்பர் மதுரை தமிழ் சங்கச் செயலராகவும் மதுரை திருவள்ளுவர் சங்க நிறுவனராகவும் தமிழ்ப் பணி செய்தவர். தமிழறிஞர்களுக்கு ஆதரவு வழங்குவதை வாழ்க்கை நோக்காகக் கொண்டவர்.

பழ.நெடுமாறன் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர். அவர் இந்திய தேசிய காங்கிரசின் மதுரை மாவட்ட இளைஞர் அணி இணைப்பாளராக 1964ம் ஆண்டு செயற்பட்டார். 1970ம் ஆண்டு அவர் மதுரை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கிளைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ் நாடு அமைப்பின் பொதுச் செயலராக 1973 – 1979 காலத்தில் பணியாற்றினார். 1979 தொடக்கம் இன்று வரை அவர் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைமைப் பதவி வகிக்கிறார். 1980 – 1984 காலத்தில் தமிழ் நாடு சட்ட சபை உறுப்பினராக இருந்தார்.

நேர்மைக்கும் வாழ்க்கைத் தூய்மைக்கும் இலக்கணமான பெருந் தலைவர் காமராஜருடன் பழ.நெடுமாறன் அவர்கள் மிகவும் நெருக்கமானவர். இதனால் அவர் இந்திரா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்புக்களைப் பெற்றார். காமராசர் மறைவுக்குப் பிறகு இலக்கு இழந்த காங்கிரசை விட்டு நெடுமாறன் விலகிவிட்டார்.

2002ம் ஆண்டு தொட்டு அவர் உலகத் தமிழர் பேரமைப்பின் (World Tamil Confederation)நிறுவனராகவும் தலைவராகவும் (Founder President) இயங்கியவாறு உலகத் தமிழினத்திற்கு விழிப்பூட்டி அணி திரட்டும் அரும்பணி ஆற்றுகிறார்.

இந்திரா காந்தி 1978ம் ஆண்டு மதுரைக்கு வந்தபோது கறுப்புக் கொடி காட்டுவது என்ற போர்வையில் திமுகவினர் அவர் மீது கல்வீசிக் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். அந்தப் படுகொலை முயற்சியில்; இருந்து பழ.நெடுமாறனும் வேறு சிலரும் கூட்டாக அவரைக் காப்பாற்றினார்கள்.

திமுகவினர் வீசிய கற்களை நெடுமாறன் தனது உடலில் தாங்கிக் கொண்டார். இதனால் இந்திரா காந்தியின் உயிர் காப்பாற்றப்பட்டது. நெடுமாறனைத் தனது முதல் மகன் என்று இந்திரா காந்தி பலமுறை இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குறிப்பிட்டுள்ளார்.

இன்று போல் 1981ம் ஆண்டிலும் நக்சலைற்றுகளுக்கு எதிரான என்கவுன்டர் (Encounter)தாக்குதல் மூலம் தமிழ் நாடு காவல்துறையினர் தருமபுரி மாவட்டத்தில் பல படுகொலைகளை நடத்தினர். விவசாயத் தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் எழுப்பிய உரிமைக் குரலை அடக்குவதற்கு நிலப் பிரபுக்கள் காவலை ஏவலாகப் பயன்படுத்தினார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நெடுமாறன் காவல்துறையின் அராஜகத்தை அம்பலப் படுத்தினார். அதற்குப் பிறகு படுகொலைகள் நிறுத்தப்பட்டன.

பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டில் விசேட தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட போது அந்த விவகாரத்தை நெடுமாறன் நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றார். இந்திய மனித உரிமை ஆணையத்திலும் முறைபாடு செய்தார். அதன் பிறகு அந்த இளைஞர்களுக்கு விமோசனம் கிடைத்தது.

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நிறுவப்பட்ட பூனாமல்லி தடா விசேட நீதிமன்றத்தில் 26 தமிழர்களுக்கு (13 தமிழகத்தோர் 13 ஈழத் தமிழர்) மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய உச்ச நீதி மன்றம் இதை “நீதியின் பெயரில் படுகொலை” (Judicial murder)என்று வர்ணித்தது.

26 தமிழர்களைக் காப்பாற்ற ஒரு குழுவை நெடுமாறன் உருவாக்கினார். இதில் 80 வரையான அமைப்புக்கள் இணைந்தன. தமிழர்களிடமும் அனுதாபிகளிடமும் பெருநிதி திரட்டி அவர் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து உச்ச நீதி மன்றத்தில் போராடினார்.

26 பேரில் 19 பேரை உச்ச நீதி மன்றம் விடுதலை செய்தது. மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக அது குறைத்தது. இந்த வழக்கின் முடிவு இன்னும் எட்டப்படவில்லை. தீர்க்கப்படாத எச்சமாகத் தொடர்கிறது. இந்திய நீதித் துறையின் கையறு நிலையை அது எடுத்துக் காட்டுகிறது.

விடுதலை செய்யப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு அவர் இந்திய நாட்டில் சுற்றுப் பயணம் செய்து காவல்துறையின் வன்முறை அராஜகத்தை வெளிப்படுத்தினார். இதற்குப் பிறகு ‘மரண தண்டனை ஒழிப்பு’ ஒரு தேசிய இயக்கமாக வளர்ச்சி பெற்றது. இது தொடர்பாக அவர் ஒரு கோடி ஒப்பங்களைத் திரட்டினார்.

யாழ்ப்பாணத் தமிழர்களின் பசி பட்டினியைப் போக்குவதற்காக 2007ல் பழ.நெடுமாறன் ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான உணவு மற்றும் மருந்தை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்புவதற்கு இந்திய அரசிடம் மனுச் செய்தார். அது மறுக்கப்பட்ட போது சேகரிப்புக்கள் வீணாகின.

1981ல் யாழ்ப்பாணம் பொது நூலகம் சிங்களப் பொலிஸ் படையால் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட பிறகு நெடுமாறன் அதைப் பார்வையிட்டு யாழ் மக்களுக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்றார். மலையகத் தமிழர்கள் வாழும் இரத்தினபுரியில் சிங்களக் காடையர்களால் தமிழர் குடியிருப்புக்கள் தீயிடப்பட்டன. அங்கும் சென்று பார்வையிட்டார்.

இந்தச் சுற்றுப் பயணங்களைத் தொடர்ந்து அவர் புது டில்லி சென்று இந்திரா காந்தியிடம் இலங்கை நடப்புக்கள் பற்றிய அறிக்கையை வழங்கினார். 1983ல் இலங்கை அரசின் திட்டமிட்ட வன்முறை மூலம் பெரும் எண்ணிக்கையில் தமிழர் உயிரும் சொத்தும் அழிக்கப்பட்டன.

பல தமிழ்க் குடும்பங்கள் இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடம்பெயர நேர்ந்தது. புலம் பெயர் ஈழத் தமிழர்கள் என்ற குறியீடு இதன் பிறகு வழமைக்கு வந்தது. தமிழர்களின் அவலத்தை உலகின் கவனத்திற்குக் கொண்டு வரும் தலையாய பொறுப்பை நெடுமாறன் இன்று வரை சுமக்கின்றார்.

1985ல் அவர் ஈழத் தமிழர் வாழும் இலங்கைத் தீவின் பகுதிகளுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டார். இலங்கைப் படைகளின் மூர்க்கத் தனமான தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமிழர்களின் சடலங்கள் அடங்கிய வீடியோ படச் சுருளைத் தயாரித்தார். அவற்றை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற நெடுமாறன் இலங்கை இனப் படுகொலையை உலகிற்கு அறிவித்தார்.

அமைதிப் படை என்ற பெயருடன் இந்திய ஆக்கிரமிப்புப் படை 1987ல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழர் பகுதிகளுக்குச் சென்ற பின்னர் ஈழத்தமிழின அழிப்பு புது வேகம் எடுத்தது. 1987ம் ஆண்டு தியாகி திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது நெடுமாறன் நேரடியாக யாழ்ப்பாணம் சென்று பார்வையிட்டார்.

1991ம் ஆண்டு அவர் மீண்டும் இலங்கையின் தமிழர் தாயகத்திற்குச் சென்று இந்திய இராணுவத்தின் படுகொலைகள், பாலியல் வன்முறைகள், சொத்தழிப்புக்கள் ஆகியவற்றை உலகறியச் செய்தார். இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்தார்.

சதாசிவம் கிறிஷ்ணகுமார் (கிட்டு) என்ற மூத்த புலிப் போராளியும் அவருடைய சகாக்களும் பயணித்த கப்பலை இந்திய கடற்படை சர்வதேச கடற் பரப்பில் வழிமறித்து முழ்கடித்தது. கிட்டுவும் சக போராளிகளும் எதிரியிடம் பிடிபடாமல் தமது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

இந்தச் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் 1993ல் நடைபெற்றது. இந்திய கடற்படை மேற்கூறிய கப்பல் மாலுமிகள் ஒன்பது பேரைக் கைது செய்து இந்தியா கொண்டு வந்தது. அவர்கள் மீது இந்திய கடல் எல்லையை மீறியது உட்படப் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இந்த ஒன்பது பேரின் விடுதலைக்காக உழைக்க நெடுமாறன் முன்வந்தார். இந்த விவகாரத்ததை அவர் இந்திய உச்ச நீதி மன்றம் வரை எடுத்துச் சென்று அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார்.

ஈழத் தமிழர்களின் துணைவனாக நின்ற காரணத்திற்காக அவர் ஜனநாயக இந்தியாவின் ஆளும் வர்க்கம் நிறைவேற்றிய பயங்கரவாதத்திற்கு எதிரான தடாச் (Terrorists and Disruptive Activities Act – Tada) சட்டடத்தின் கீழ் 1993ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களை விசாரித்த தடா விசேட நீதிமன்றம் அவை ஆதாரமற்றவை என்பதைக் கண்டு அவரை விடுதலை செய்தது. 2002ம் ஆண்டு புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொடா என்ற சட்டத்தில் (Prevention of Terrorrism act –Pota) அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. அவர் 18 மாதங்கள் சிறை வாழ்வை அனுபவித்தபின் விடுதலை ஆனார். ஆனால் விடுதலைக்குப் பிந்திய இன்னொரு 18 மாத காலம் பொது மேடையில் பேசக் கூடாது, நேர்காணல் வழங்கக் கூடாது என்ற நிபந்தனை அவர் மீது விதிக்கப்பட்டது.

உலகம் பார்த்திருக்க ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் இலங்கை இந்திய கூட்டுச் சதியில் இன அழிப்புச் செய்யப்பட்ட ஆண், பெண், முதியோர், இளையோர், குழந்தைகள் நினைவாக பழ நெடுமாறன் தலைமையில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவாலயம் அமைக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் இருக்கிறது.

சமகால நிகழ்வுகளை மிகவும் கூர்மையாக உள்நுளைந்து நோக்கும் கூர்மதியாளரான பழ.நெடுமாறன் அவர்கள் இலங்கை தொடர்பான இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் தோல்வியை நூல்கள், ஆய்வுரைகள், மேடைப் பேச்சுக்கள் மூலம் நிரூபித்துள்ளார்.

இந்து மாகடலிலும் அதில் நடுநாயகமாக இருக்கும் இலங்கைத் தீவிலும் ஆதிக்கம் செலுத்த 1980 தொடக்கம் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள்; ஆதிக்கப் போட்டி நடத்துகின்றன. இதில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது என்ற நெடுமாறன் வழங்கிய தீர்ப்பை அரசியல் நோக்கர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள், இரு வரலாற்று நாவல்கள், எண்ணற்ற அரசியல் கட்டுரைகள் என்பனவற்றைப் படைத்த பழ.நெடுமாறன் அவர்கள் தமிழகத்தின் சிறந்த அரசியல் அறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, ஈழத் தமிழர்களின் பாதுகாவலன் என்ற பன்முக ஆளுமையுடன் திகழ்கிறார்.

senpagam@hotmail.com

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்