ஓன்றுபடும் வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்று கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இரு நிறங்களுக்கு இடையில் சமத்துவம் ஏற்படலாம் என்ற எண்ணம் இரு பகுதியிடமும் இல்லை. 53 விழுக்காடு வெள்ளையர்கள் 88 விழுக்காடு கறுப்பர்கள் அமெரிக்காவில் கல்வி, வேலை வாய்ப்பு, நீதி பரிபாலனம் ஆகிய துறைகளில் பாகுபாடு காட்டப்படுவதாக நம்புகின்றனர்.
கறுப்பனை நாட்டின் அதியுயர் பதவிக்குத் தெரிவு செய்வது மூலம் கறுப்பு வெள்ளையர்களுக்கு இடையிலான உறவுகளில் நல்ல மாற்றம் ஏற்படலாம் என்று நான்கு வருடங்களுக்கு முன்பு பல மில்லியன் அமெரிக்கர்கள் நம்பினார்கள். ஒபாமா பதவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை.
வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பின அமெரிக்கரை இருத்தியதால் கறுப்பு வெள்ளை இன விரிசல் பெருத்து விட்டதாக நம்புவோர் எண்ணிக்கை உயர்வடைகிறது. அவர் தெரிவு செய்யப்பட்ட 2008ம் ஆண்டு கணிப்பீடுகளில் 52 வீதமான அமெரிக்கர்கள் இன உறுவில் மேம்பாடு ஏற்படும் என்று நம்பினார்கள்.
இப்போது 2012ம் ஆண்டு கணிப்பீடுகள் வித்தியாசமாக இருக்கின்றன. 32 வீதமானோர் மாத்திரம் இன உறவில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக நம்புகின்றனர். 60 வீதமானோர் 2008க்கு முந்திய நிலவரம் இப்போதும் தொடர்வதாக நம்புகின்றனர். ஒபாமாவால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை இவர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.
கறுப்பு வெள்ளை இன முரண்பாடுகள் கூடுதலாக அமெரிக்கத் தென் மாநிலங்களில் காணப்படுகின்றன. வெள்ளை இன மேலாதிக்க வாதிகள் (White supremacists) தென் மாநிலங்களில் (Southern States) கூடுதலாக வாழ்கின்றனர்.
தோல் நிறத்தின் ஒற்றைக் காரணத்திற்காக கறுப்பர்கள் வேட்டை ஆடப்படும் சம்பவங்கள் நெடுங்காலமாக இங்கு தான் நடக்கின்றன.
கறுப்புத் தோல் மீது வெள்ளைத் தோலர்கள் கடும் வெறுப்பைக் காட்டுகின்றனர். இதற்கு எதிராகச் சிவில் உரிமை எதிர்ப்புக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகக் கறுப்பர்களாலும் இனச் சமத்துவத்தில் நம்பிக்கை உள்ள வெள்ளையர்களாலும் நடத்தப்படுகின்றன.
இதன் மூலம் பல குறிப்பிடத்தக்க உரிமைகளைக் கறுப்பர்கள் வென்றுள்ளனர். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் 2008ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமாவின் வெற்றி அமைந்தது. ஆனால் வெள்ளையர்களின் காழ்ப்பு உணர்வு மாறிவிட்டதா?
இன வெறுப்புக் குற்றச் செயல் தடுப்புச் சட்டம் 2009 (Hate Crimes Prevention Act of 2009 )ன் கீழ் டெரில் டெட்மன் (Deryl Dedmon) 19 வயது, ஜோன் ஆரன் றைஸ் (John Aaron Rice) டைலன் பட்லர் (Dylan Butler) ஆகிய மூன்று இளைஞர்களும் யூன் 2011ல் கொலைக் குற்றஞ் சாட்டப்பட்டனர்.
பிரான்டன், மிசிசிப்பியில் (Brandon Mississippi) 47 வயது கறுப்பரை வாகனத்தால் அடித்து வீழ்த்தி அவர் மேல் வாகனத்தை ஏற்றிப் படுகொலை செய்த கொலைக் குற்றத்திற்காக இவர்கள் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இந்த மாநிலம் கறுப்பர்கள் மீது வெறுப்பை காட்டும் படுகொலைகளுக்குப் பெயர் பெற்றது. மேற்கூறிய மூவரும் மதுபோதையில் இனந்தெரியாத கறுப்பர்களை வேட்டையாடக் கிளம்பினார்கள் போகும் போது வழியில் தென்பட்ட கறுப்பர்கள் மீது வெற்று மதுப் போத்தல்களை எறிந்தனர். வேறு சிலர் மீது மோதப் போவது போல் வேகமாக வாகனத்தைச் செலுத்தினர்.
இறுதியில் ஒரு உணவகத்திற்கு அருகாமையில் 47 வயது ஜேம்ஸ் அன்டேர்சன் (James Anderson) என்ற கறுப்பினக் குடும்பஸ்தரை வாகனத்தல் தாக்கிக் கொலை செய்தனர். இந்தப் படுகொலைக் காட்சி உணவகத்தின் சிசிடிவி கமராக்களில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது.
கமராப் பதிவுகள் உலகத் தொலைக்காட்சிகளிலும், இன்ரர்நெற் போன்ற பிற ஊடகங்களிலும் ஒளிபரப்பப்;பட்டன. படுகொலைகளுக்கு எதிராக பேரணிகளும் கண்டன ஊர்வலங்களும் உலகத் தலைநகரங்களில் நடந்தன. தவிர்க்க முடியாத காரணத்திற்காக எப்பிஜ பொலிஸ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
பொழுது போக்கு வேட்டையாக நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்குத் தண்டனையாக டெரில் டெட்மனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மிகுதி இருவரும் கொலைக் குற்றம் செய்யத் துணை போனதற்காகத் தண்டிக்கப்பட்டனர்.
கறுப்பர்களும் வெள்ளையர்களும் இந்தப் தீர்ப்புப் பற்றித் திருப்தி தெரிவிக்கவில்லை. இந்தப் படுகொலையோடு வேறு பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏன் குற்றப் பத்திரிகை வழங்கப்படவில்லை என்று கறுப்பர்களும் மூவர் செய்தது அவ்வளவு பாரிய குற்றமல்ல என்று வெள்ளையர்களும் கறுவிக் கொள்கின்றனர்.
அமெரிக்காவில் நடக்கும் மிகச்சிறிய நிகழ்ச்சிகளும் அடுத்த நிமிடமே உலக அரங்கிற்கு வந்து விடுகின்றன. சென்ற மார்ச் 2012ல் வழங்கப்பட்ட மேற்கூறிய நீதி மன்றத் தீர்ப்பு அமெரிக்கா பற்றிய மாறுப்பட்ட கருத்துக்களை ஏற்படுத்துகின்றன.