வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நடைபெற்ற இச்சம்பவத்தினையடுத்து பொதுமக்கள் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டு இளைஞர்கள் ஊர்தியினை சேதப்படுத்தியதினை தொடர்ந்து படையினர்குவிக்கப்பட்டு இளைஞர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.
இன்று மட்டக்களப்புக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களை பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்துக்காக சென்றுள்ளனர்.இந்த நிலையில் வந்தாறுமூலை அம்பலத்தடிக் கருகில் வீதியைக் கடக்க முனைந்த தாய் மற்றும் இரு பிள்ளைகள் மீது அந்த தொடரணியில் வந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதன்போது குறித்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் இரு சிறுமிகளும் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்ட வேளையில் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதனால் சில இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காபடையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.