அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மே மாதம் முதல் வாரமளவில் இந்தியாவுக்கு அவசரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 5ம் நாள் முதல் 8ம் நாள் வரை பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை ஹிலாரி கிளின்ரன், மேற்கொள்ளவுள்ளதாக வொசிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது ஹிலாரி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில், பிராந்திய மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்தே கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அதனடிப்படையில் சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம் இந்த எதிர்பார்ப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை.
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், இருநாடுகளினதும் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் முதலாவது சந்திப்பாக இது அமைகின்றது.
மே மாதம் 18ம் நாள் ஹிலாரி கிளின்ரனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்திக்கவுள்ள நிலையில், ஹிலாரியின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்நததாகக் கருதப்படுகிறது.
அத்துடன், இந்திய நாடாளுமன்றக் குழு சிறிலங்கா வந்து தமிழ் மக்கள் தொடர்பில் பல தரப்புக்களுடன் ஆராய்ந்து சென்றது. அது தொடர்பில் மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது. தமிழ் மக்களுக்கான, அரசியல் தீர்வு விடயத்தில் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியாவுடன் ஆராயும் நோக்கில் ஹிலாரியின் பயணம் அமைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.