ஐபிஎல் சீசன் 5-ன் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கிறிஸ்டியன் பந்துவீசினார். முதல் பந்தை ஃபிராங்க்ளின் பவுண்டரிக்கு அனுப்பி, இரண்டாவது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
எஞ்சிய 3 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நான்காவது பந்தில் சிக்ஸர் விளாசினார், ரோஹித் ஷர்மா. ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது, அவர் விளாசிய சிக்ஸரில் மும்பை த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தது.
ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். பொல்லார்டு 24 ரன்களையும், ராயிடு 19 ரன்களையும் எடுத்தனர்.
முன்னதாக, டெக்கான் சார்ஜர்ஸ் தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக, தவான் 41 ரன்களையும், கிறிஸ்டியன் 39 ரன்களையும், ஒயிட் 30 ரன்களையும் எடுத்தனர்.
மும்பை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முனாப் படேல் 4 விக்கெட்டுகளையும், மலிங்கா 3 விக்கெட்டுகளையும், பொல்லார்டு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்தம் 3 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பைக்கு இது 2-வது வெற்றியாகும். டெக்கானுக்கு இது இரண்டாவது தொடர் தோல்வி.