இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ரெஸ்ட் போட்டிக்கான அணியில் இலங்கை அணியின் துணைத்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ரெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்த அன்ஜலோ மத்தியூஸ், போதிய உடற்தகுதி இன்மை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட வேண்டி ஏற்பட்டது.
அன்ஜலோ மத்தியூஸ் நீக்கப்பட்டதன் காரணமாக மாற்று வீரராகக் அணியில் சேர்க்கப்பட்டிருந்த சாமர சில்வா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அன்ஜலோ மத்தியூஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், தனித்து துடுப்பாட்ட வீரராக மாத்திரம் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது வாழ்வின் மிகச்சிறந்த ஃபோர்மில் காணப்படும் சாமர சில்வா, இப்பருவகாலத்தில் 1000 முதற்தரப் போட்டி ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளதுடன், இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் வேகமான 163 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
எனினும் ரெஸ்ட் அணி அறிவிக்கப்படும் போது அணியில் சேர்க்கப்பட்டிராத சாமர சில்வா, அன்ஜலோ மத்தியூஸிற்கு மாற்று வீரராக அணியில் பின்னர் சேர்க்கப்பட்டார்.
தற்போது அன்ஜலோ மத்தியூஸ் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில் சாமர சில்வா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, ஆரம்பப் பந்துவீச்சாளர் சானக வெலகெதரவிற்கு அடிவயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வெலகெதரவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷமின்ட எரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு ஒக்ரோபரில் பாகிஸ்தானுக்கெதிரான ரெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டு அதன் பின்னர் அவரது முழங்கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அத்தொடரிலிருந்து விலகிய எரங்க, அதன் பின்னர் அணியில் இணைத்துக் கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது ரெஸ்ட் போட்டி நாளை (03) கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளது.
