சிறைச்சாலையில் உள்ள ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்குக் கைதிகள் திட்டமிட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்தார்.
இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியின்றி கைதிகளால் தனித்து இவ்வாறானதொரு பாரிய குற்றச்செயலில் ஈடுபட முடியாது. எனவே, இவ்வாறான குழப்பங்களுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கைதிகளின் நலனோம்புகை தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் அதனைத் தெரிவிப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு இவ்வாறான களேபரங்கள் உகந்ததல்ல.
சிறைச்சாலை நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு கோரும் அதிகாரம் கைதிகளுக்குக் கிடையாது.
அவர்களின் குழப்பங்களால் அதிகாரத்தை அவர்களிடம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.






