2011ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதினை அர்ஜென்டினாவின் மெஸ்சி 3வது முறையாக கைப்பற்றியுள்ளார். 2011ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரரை தேர்ந்தெடுப்பதற்கான விழா சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடந்தது. இதில் தேசிய அணிகளின் பயிற்சியாளர்கள், கப்டன்கள், குறிப்பிட்ட ஊடகங்கள் வாக்களித்தனர். இதில் 47.88 சதவீத வாக்குகள் பெற்று சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினா அணியின் கப்டன் லியோனல் மெஸ்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதுக்கான போட்டியில் இருந்த ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ (21.6 சதவீதவாக்கு), சக கிளப் வீரர் சேவி (9.23 சதவீத வாக்கு) ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறை இந்த விருதை பெற்றவர் என்ற மகத்தான சாதனையை 24 வயதான மெஸ்சி தட்டிச்சென்றுள்ளார். அர்ஜென்டினா அணிக்கான மெஸ்சியின் ஆட்டம் கடந்த ஆண்டு பெரிய அளவில் எடுபடவில்லை என்றாலும் ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கழகத்திற்காக அசத்தினார். சம்பியன்ஸ் லீக், லா லீக் மற்றும் கழக உலக கோப்பை ஆகியவற்றில் பார்சிலோனா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மூன்று முறை சிறந்த வீரர் விருதை மெஸ்சி பெற்றாலும், உண்மையான வீரர் என்பதை நிரூபிக்க உலக கோப்பையை அவர் வெல்ல வேண்டும் என்று பிரான்ஸ் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் மைக்கேல் பிளாட்டினி கூறியுள்ளார். உலக கோப்பையை வென்றாலும் அல்லது வெல்லாவிட்டாலும் மெஸ்சி எப்போதும் சிறந்த வீரராக இருப்பார். இருப்பினும் உலக கோப்பை என்பது சிறப்பு வாய்ந்த ஒன்று. அது தான் எப்போதும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, பெண்களுக்கான ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக ஜப்பானின் ஹோமரே சவா தேர்வு ஆனார்.