தன்னை இயக்கிய வல்லரசுப் புலனாய்வாளர்களின் தாளத்திற்கு இணங்க உருத்திரகுமாரனின் டில்லிப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவரது உதவியாளரான வழுதி ஈடுபட்டிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கி, ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டமொன்றை செயற்படுத்தும் முடிவு 12.12.2008 அன்று டில்லியிலும், வோக்ஷிங்டனிலும் திரைமறைவில் எடுக்கப்பட்டிருந்தது.
இம்முடிவுக்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்தியதில் முக்கிய பாத்திரத்தை அமெரிக்கத்துணை அமைச்சர் ஒருவரே வகித்திருந்தார். அவர் வேறு யாருமல்ல: ‘சிறீலங்காவின் உற்ற நண்பன்’ என்று அமெரிக்க ஊடகவியலாளர்களால் வர்ணிக்கப்படுபவரும், பேராசிரியர் தேவரஞ்சன் ஊடாக உருத்திரகுமாரன் குழுவினருடன் தொடர்பைப் பேணியவருமான ஜேம்ஸ் கிளாட் அவர்களே அந்தத் துணை அமைச்சராவார். 2008 நவம்பர் மாதம் 22ஆம், 23ஆம் நாட்களில் கொழும்பில் தங்கியிருந்து கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா, வைஸ் அட்மிரல் வசந்த கர்ணகொட ஆகியோரை சந்தித்துவிட்டு அங்கிருந்து பிறிதொரு தென்னாசிய நாட்டைச் சென்றடைந்த கிளாட் அவர்கள், 26.11.2008 அன்று இடம்பெற்ற மும்பைத் தாக்குதல்களை அடுத்து தான் தங்கியிருந்த நாட்டிலிருந்து டிசம்பர் முதல் வாரத்தில் டில்லிக்கு புறப்பட்டிருந்தார்.
மும்பைத் தாக்குதல்களின் எதிரொலியாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிகழவிருந்ததாக அப்பொழுது அஞ்சப்பட்ட ‘எல்லைப்போரைத்’ தடுத்து நிறுத்துவதே கிளாட் அவர்களின் டில்லிப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தாலும்கூட, தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கான திட்டமொன்றை இந்திய ஆட்சியாளர்களிடம் முன்வைத்து அதற்கான இணக்கப்பாட்டை பெறுவதற்கு இப்பயணம் கிளாட் அவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது. கிளாட் அவர்களின் இத்திட்டத்திற்கு ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியிருந்ததோடு, இத்திட்டத்தின் உள்ளடக்கம் எரிக் சொல்கைம் உட்பட நோர்வே அனுசரணையாளர்களுக்கும் தெரிந்திருந்தது. டில்லியில் கிளாட் அவர்கள் முன்வைத்த அத்திட்டம் சாராம்சத்தில் ஒன்பது விடயங்களை உள்ளடக்கியிருந்தது:
“1. ஆயுதப் போராட்டத்திற்கோ அல்லது தமிழீழத் தனியரசுக் கோரிக்கைக்கோ ஒருபொழுதும் உலக நாடுகள் அங்கீகாரம் அளிக்கப் போவதில்லை என்ற செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு சந்தேகத்திற்கு இடமின்றி தெரியப்படுத்துதல்.
2. சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்று, அரசியல் கட்சியாக மாறி, அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டால் அதற்கு உலக நாடுகள் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தல்.
3. ஆயுதப் போராட்டத்தை முடிவுக் கொண்டுவந்து ஆயுதங்களை அமெரிக்காவிடம் அல்லது அனைத்துலக தரப்பு ஒன்றிடம் ஒப்படைப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளை இணங்க வைத்தல்.
4. அமெரிக்காவின் அனுசரணையுடன் சிறீலங்கா அரசிடம் சரணடைந்து, ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் இந்தியா முன்னெடுக்கும் சட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், வழக்கை எதிர்கொள்வதற்குமான உத்தரவாதத்தை தலைவர் பிரபாகரன் அவர்களிடமிருந்தும், பொட்டம்மானிடமிருந்தும் பெறுதல். இதற்கு தேவையான சட்ட உதவிகள் தலைவருக்கும், பொட்டம்மானுக்கும் கிடைப்பதையும், அவர்களின் மனித உரிமைகள் பேணப்படுவதையும் அமெரிக்கா உறுதி செய்தாலும், வழக்கில் முடிவில் இருவருக்கும் வழங்கப்படும் தீர்ப்பிலும், தண்டனையிலும் அமெரிக்கா தலையிடாது என்ற தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்துதல்.
5. கொழும்பு உட்பட தென்னிலங்கையில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் - போராளிகளை சிறீலங்கா அரசிடம் சரணடைய வைத்து, தமது ‘குற்றங்களை’ ஏற்று நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட வைத்தல்.
6. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய போராளிகள் அனைவருக்கும் சிறீலங்கா அரசு பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்துப் பின்னர் அவர்களை விடுதலை செய்வதற்கு ஆவனபுரிதல்.
7. வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்த மக்களை திருகோணமலைக்கு அழைத்துச் சென்று, முதலில் அவர்களை வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்க வைத்து, பின்னர் கட்டம் கட்டமாக அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துதல்.
8. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளையும், மக்களையும் திருகோணமலைக்கு கொண்டு சென்று சிறீலங்கா அரசிடம் ஒப்படைப்பதற்கு தேவையான கப்பல் வசதிகளை அமெரிக்க கடற்படையின் தென்னாசிய - பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் ஊடாக வழங்குதல். இதற்குத் தேவையான பிராந்திய மட்ட உதவிகளை இந்தியாவிடமிருந்து பெறுதல்.
9. சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு போராளிகளினதும், பொதுமக்களினதும் விபரங்களும் அமெரிக்க கடற்படையினரால் பதிவுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கு மேற்குலக நாடுகளால் உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரியப்படுத்துதல்.” தனது டில்லிப் பயணத்தின் பொழுது கிளாட் அவர்களால் முன்வைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு உடனடியாக இந்திய ஆட்சியாளர்களால் பச்சைக்கொடி காட்டப்படவில்லை. அத்திட்டம் டில்லி ஆட்சியாளர்களால் ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் மும்பை தாக்குதல்களின் தொடர்ச்சியாக பாகிஸ்தானுடன் வெடிக்கவிருந்த ‘எல்லைப்போரைத்’ தடுத்து நிறுத்துவதற்கு கிளாட் அவர்களும், ஏனைய அமெரிக்க இராசதந்திரிகளும் அப்பொழுது எடுத்த முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் டில்லி வழங்கியிருந்தது. இதனையடுத்து டில்லிக்கும், இஸ்லாமாபாத்திற்கும் இடையில் கிளாட் அவர்களும், ஏனைய அமெரிக்க இராசதந்திரிகளும் மாறி மாறிப் பறந்தனர்.
இவ்வாறு கிளாட் அவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் டில்லியில் ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே 08.12.2008 அன்று நியூயோர்க்கில் இந்திய இராசதந்திரி எஸ்.பி.சிங் அவர்களை உருத்திரகுமாரன் சந்தித்திருந்தார். இச்சந்திப்பில் ஆராயப்பட்டதற்கு இணங்க தனிப்பட்ட பயணமாக உருத்திரகுமாரன் டில்லி செல்வதற்கு 11.12.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே, உருத்திரகுமாரனின் உத்தேச டில்லிப் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கான கடிதத்தை 12.12.2008 அன்று வன்னிக்கு அவரது உதவியாளர் வழுதி எழுதியிருந்தார். வழுதியின் கடிதம் வன்னியை சென்றடைந்த அதே நாளிலேயே, தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுபாணிகளாக்கி ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கிளாட் அவர்கள் முன்வைத்த திட்டத்திற்கு டில்லியிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து பேராசிரியர் தேவரஞ்சன் அவர்களுடன் தொடர்பு கொண்ட கிளாட், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுடன் தான் தொலைபேசியில் உரையாட விரும்புவதாகவும், இதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து தருமாறும் கோரியிருந்தார். கிளாட் அவர்களின் இக்கோரிக்கை உடனடியாக உருத்திரகுமாரனுக்கும், அவரது உதவியாளர் வழுதிக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உரையாடுவதில் கடந்த தடவைகளில் கிளாட் அவர்கள் ஆர்வம் காட்டியிருந்தாலும்கூட, இம்முறை இதற்கான முயற்சிகளில் அவர் அதிக தீவிரம் காட்டினார் என்றே கூறவேண்டும். 20.01.2009 அன்று நிகழவிருந்த பராக் ஒபாமாவின் பதவியேற்பு வைபவத்துடன் தனது பதவிக்காலம் முடிவுக்கு வரவிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வெற்றிகரமாக அரங்கேற்றி, தனது இடத்திற்கு நியமிக்கப்படவிருந்த அடுத்த துணைப் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு முதிசமாகக் கையளிப்பதன் ஊடாக தென்னாசியாவில் இயங்கிய வலிமை வாய்ந்த ஆயுத எதிர்ப்பியக்கம் ஒன்றை இராசரீக வழிகளில் முடிவுக்கு கொண்டு வந்தவராக அமெரிக்க வரலாற்றில் தனது பெயர் பொன்னெழுத்துக்களால் பதியப்படும் என்று கிளாட் அவர்கள் கருதினாரோ தெரியவில்லை.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உரையாடுவதில் கிளாட் அவர்கள் காட்டிய அவசரத்தை அன்று மாலை உருத்திரகுமாரனின் உதவியாளர் வழுதி வன்னிக்கு எழுதிய கடிதம் பிரதிபலித்திருந்தது:
“அன்பு அண்னை:
பாதுகாப்புச் செயலர் நாட்டிற்குத் திரும்பிவிட்டார். கடந்த வாரம்தான் வந்து சேர்ந்தாராம். ஆனாலும் அண்மையில் மும்பையில் நிகழ்ந்த சம்பவம், மற்றும் அதில் பாகிஸ்தானின் ஈடுபாடு பற்றிய பிரச்சனைகளால் அவர் படு பிசியாக இருக்கின்றார். விரைவில் மீண்டும் இங்கிருந்து புறப்பட இருக்கின்றார். இருந்தாலும் உங்களோடு கதைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை நேரம் ஒதுக்கித் தருவதாகச் சொல்லியுள்ளார். அநேகமாக - இங்கு காலை - உங்கள் நேரம் ஞாயிறு மாலை சுமாராக 6.00 மணிமுதல் 10.00 மணிக்குள் இருக்கலாம். எல்லாவற்றையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தயவுசெய்து மறக்காமல் உங்கள் நேரம் சனிக்கிழமை காலை என்னை ஒரு முறை அழையுங்கள். தொலைபேசியில் அழைத்துச் சொன்னால் நான் மற்றையதில் வரமுடியும். அண்ணை, நீங்கள் அவருடன் கதைப்பீர்கள் என்று அவரிடம் நாம் சொல்லி இப்போது இரண்டு மாதங்கள் வரை ஆகிவிட்டது. உங்களுக்கு இருக்கும் சிரமங்களையும் நான் அறிவேன். அதே சமயம் இந்தத் தடவை அவர் நேரம் ஒதுக்கிய பின்பும் நீங்கள் அவருடன் கதைக்க முடியாமல் போனால், எமது அக்கறை பற்றி அவர் ஏதும் தவறாக நினைத்து விடுவாரோ என்றும் நான் கவலைப்படுகின்றேன். இரண்டு விடயங்கள் உள்ளன:
1. இங்கு அடுத்து அமைய இருக்கும் அரசிற்கு தென்னாசிய பிராந்தியம் பற்றிய தனது பாதுகாப்புப் பரிந்துரைகளை அவர் இப்போது எழுதிக்கொண்டு இருக்கின்றார். இந்த நேரத்தில் நீங்கள் அவருடன் கட்டாயம் கதைக்க வேண்டும். எம்மைப் பற்றிய நல்ல விடயங்களை அவர் எழுதுவதற்கு அது பெரிதும் உதவும். எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை கூட அவர் முன்வைக்கலாம்.
2. பக்கத்து வீட்டுக்காரனை நம்ப முடியாது: பழைய கோபம், அம்மாவுக்கு பிடிக்கவில்லை, அது... இது... என்று சொல்லி எமக்கு எதிராகவே எப்போதும் இருப்பான். ஆனால் அமெரிக்காகாரனுக்கு எம்மீது கோபங்களோ, வெறுப்போ கிடையாது. அவனுக்கு அவனுடைய நலன்கள் தான் முக்கியம். அந்த நலன்களை பாதுகாக்க நாம் உதவியாக இருந்தால் அவனுக்குச் சரி. அவனோடு நாம் ஒட்டுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அவனோடு ஒட்டுவதே எமக்கும் நல்லது. தயவு செய்து உங்கள் நேரம் சனிக்கிழமை காலை என்னை அழையுங்கள்.
நன்றி.”
இக்கடிதத்தை வன்னிக்கு எழுதிய பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கு டில்லிக்கும், வோக்ஷிங்டனுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு பற்றி வழுதியோ அன்றி பேராசிரியர் தேவரஞ்சன் அவர்களோ அறிந்திருந்தார்களா என்பதை எம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் இத்திட்டத்தின் சாராம்சம் ஏற்கனவே உருத்திரகுமாரனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இதனை உறுதிசெய்யும் வகையில் 09.12.2008 அன்று உருத்திரகுமாரனால் எழுதப்பட்டு எமது முப்பத்து நான்காவது தொடரில் வெளிக்கொணரப்பட்ட கடிதம் அமைந்திருந்தமை வாசகர்களுக்கு நினைவில் இருக்கக்கூடும்.
இதற்கிடையே, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருடன் உரையாடுவது தொடர்பாக பேராசிரியர் தேவரஞ்சன் ஊடாக கிளாட் அவர்கள் விடுத்த செய்தி உருத்திரகுமாரனையும், அவரது உதவியாளரையும் சென்றடைந்த அதே தினத்தில் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தேறியிருந்தது. அன்று உருத்திரகுமாரனின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு எடுத்த அவரது நண்பரும், ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜனின் சகபாடியுமான கனடாவில் வசிக்கும் நாராயணதாஸ் என்பவர், டில்லிப் பயணத்திற்கான ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டாம் என்றும், எம்.கே.நாராயணனின் செயலகத்திலிருந்து தனக்குக் கிடைத்த அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இச்செய்தியை தான் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இதனை உறுதிசெய்யும் நிமித்தம் முதலில் பரந்தன் ராஜனுடனும், பின்னர் எஸ்.பி.சிங் அவர்களுடனும் உருத்திரகுமாரன் தொடர்புகொள்ள முற்பட்ட பொழுது இணைப்புக் கிடைக்கவில்லை. இதனையடுத்து தன்னுடன் நியூயோர்க்கில் தொடர்பைப் பேணிவந்த இந்திய வெளியக உளவு அமைப்பான ‘றோ’ நிறுவனத்தின் அதிகாரியுடன் தொடர்புகொண்டு இதுபற்றி உருத்திரகுமாரன் வினவிய பொழுது, எம்.கே.நாராயணனின் ஆதிக்கம் இந்திய உள்ளக புலனாய்வு அமைப்பான ‘ஐ.பி’ நிறுவனத்தில் அதிகரித்துக் காணப்படுவதால் இதுபற்றி மேலதிக தகவல்களை தன்னால் பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்ற தகவல் மட்டுமே சம்பந்தப்பட்ட ‘றோ’ அதிகாரியால் உருத்திரகுமாரனுக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து அப்பொழுது ஜெனீவாவில் தங்கியிருந்த தனது நண்பரும், ‘றோ’ நிறுவனத்தின் முகவராக கருதப்படு நடராஜா இளங்கோ அவர்களுடன் உருத்திரகுமாரன் தொடர்பு கொண்டு இதுபற்றி வினவிய பொழுது, ‘ஐ.பி’ அமைப்பின் முகவரான நாராயணதாஸ் ஊடாக எம்.கே.நாராயணனின் செயலகத்திலிருந்து தெரிவிக்கப்படும் தகவல்களை ‘றோ’ அதிகாரிகள் ஊடாக தான் உறுதிசெய்வது கடினம் என்ற பதிலே அவரிடமிருந்தும் அளிக்கப்பட்டது. உருத்திரகுமாரனின் தொடர்பாளரான ‘றோ’ அதிகாரியும், நடராஜா இளங்கோ அவர்களும் தெரிவித்த பதில்களில் ஓரளவு உண்மை அடங்கியிருந்ததை நாம் மறுக்க முடியாது. இதற்குக் காரணம் ‘ஐ.பி’ அமைப்பிற்கும், `றோ` அமைப்பிற்கும் இடையில் நிலவிய போட்டியேயாகும். அதிலும் குறிப்பாக ‘ஐ.பி’ அமைப்பின் தலைவராக ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னர் 1992ஆம் ஆண்டு வரை வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ் ஆகியோரின் ஆட்சிக்காலத்திலும் எம்.கே.நாராயணன் அவர்கள் பதவி வகித்திருந்த நிலையில் அங்கு அவரது ஆதிக்கத்தை ‘றோ’ நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆனால் உருத்திரகுமாரனின் டில்லிப் பயணம் பிற்போடப்பட்டமைக்கு ‘றோ’ நிறுவனத்திற்கும், ‘ஐ.பி’ அமைப்பிற்கும் இடையில் நிலவிய முறுகல்களை விட பிறிதொரு காரணமும் இருந்தது. மும்பைத் தாக்குதல்களை அடுத்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து எம்.கே.நாராயணன் அவர்களை அகற்றுவதற்கான முயற்சிகளில் ‘றோ’ நிறுவனத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்ட நிலையில், டில்லியில் எம்.கே.நாராயணனின் கதிரை ஆட்டம் காணத் தொடங்கியதே இதற்கான இன்னொரு காரணமுமாகும். 30.11.2008 அன்று எம்.கே.நாராயணன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் நிராகரித்திருந்த பொழுதும்கூட, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து அவரை அகற்றுவதில் கங்கணம் கட்டியிருந்த மூத்த அமைச்சர்கள் தமது போர்க்கொடியை இறக்கவில்லை.
இவற்றைவிட மூன்றாவது முக்கிய காரணம் ஒன்றும் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கி ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கிளாட் அவர்கள் முன்வைத்த திட்டத்தை டில்லி ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டமையே இதற்கான காரணமாகவும். தனது திட்டத்திற்கு இணங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை கிளாட் அவர்கள் உறுதிசெய்யும் பட்சத்தில், உடனடியாக உருத்திரகுமாரனின் தேவை தமக்கு இருக்காது என்ற கருத்து அப்பொழுது இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்திருக்கக்கூடும். இவ்வாறு டில்லிக்கு வருமாறு ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு முன்னர் தனக்குக் கிடைத்த அழைப்பு திடீரென பிற்போடப்பட்டமை உருத்திரகுமாரனின் முகத்தில் கரிபூசிய விடயமாகவே அமைந்தது. அதிலும் தனது டில்லிப் பயணத்திற்கு முதலில் அனுமதி மறுத்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர், நீண்ட தயக்கத்தின் பின்னர் அதற்கு இணங்கிய நிலையில், அப்பயணத்தைப் பிற்போடுமாறு நாராயணதாஸ் ஊடாக டில்லியிலிருந்து கிடைத்த தகவல், தொங்குப்பாலத்தின் கயிறு அறுந்து நூலிழையில் அல்லாடிய வழிப்போக்கனின் நிலைக்கு உருத்திரகுமாரனை இட்டுச்சென்றது எனக்கூறின் மிகையில்லை.
(தொடரும்)
நன்றி: ஈழமுரசு