மெழுகுவர்த்தி ஒன்று தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. கலங்கரை விளக்கம் ஒன்று கண்ணுறங்கிவிட்டது. சூரிய தேவனின் பாதையில் பயணித்த தேசியச் சுடர் ஒன்று அணைந்துவிட்டது.
மனிதனாய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும், அந்தப் பிறப்பில் மனிதனாக வாழ்வதற்கு அந்த மண்ணும் மாதவம் செய்திருக்க வேண்டும். எங்கள் தேசத்தின் தவம் பிரபாகரமாக எழுச்சி கொண்ட காலத்தில், அந்தப் பேரொழியின் சங்கமத்தில் தெரு விளக்காகத் தம்மை ஆக்கிக் கொண்டவர்கள் ஆயிரம், ஆயிரம்.
வெறும் வார்த்தைகளால் இல்லாமல், சிந்தனையாலும், செயலாலும், கொண்ட இலட்சியத்தாலும் மனிதனாக வாழ்ந்த பிரான்சிஸ் மாமா இன்று எம்மோடு இல்லை என்பது இனிய நினைவுகள் சுமந்த வேதனைதான். அவர் குறித்த நினைவுகள் எல்லாம் அசாத்தியமானவை. அற்புதமானவை.
தமிழ்த் தேசியம் குறித்த அவரது தெளிவான முடிவுகளும், இலட்சிய உறுதியும் அவரது நினைவுகளுக்குத் தலை வணங்கும். அவரது சொல்லையும், செயலையும் பிரித்துப் பார்க்க முடியாது. அத்தனை தகைமையும் பெற்றதனால்தால், தன் வாழ்நாள்வரை பிரான்சிஸ் மாமா என அழைக்கப்பட்ட அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலங்களால் விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் ஓய்வுக்கு வந்தபின்னர், புலம்பெயர் தேசங்களில் ஒன்றாகத் தோள்கொடுத்த பலரும் கிளை மாறி, முகம் மாறி இன்னொரு வடிவத்தை எடுத்தபோதும் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான இலட்சிய நெருப்பை நெஞ்சில் சுமந்துகொண்டு, தேசியத் தலைவரது பாதையில் தடுமாறாமல், தடம் மாறாமல் பயணித்த பெருந்தகை.
நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருந்த விடுதலை இலட்சியம் அவருடன் உறக்கம் கொள்ளப் போவதில்லை. அதனை அவரது சந்ததிகள் தமிழீழ விடுதலை வரை முன்னெடுத்துச் சென்று நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அவர்களது ஆத்மாவைக் குளிர வைப்பார்கள்.
நாடு கடந்தும் நாட்டை மறக்காத மண்ணின் மைந்தன் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அவர்களது இழப்பு, அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், வாழும் தமிழர்கள் அனைவரையும் பாதித்து நிற்கின்றது. அவர் எந்த இலட்சியத்துடன் வாழ்ந்து சாவுக்குள் வாழும் நிலையை அடைந்தாரோ, அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் பணியில் அனைத்துத் தமிழர்களுடனும் நாமும் கரம் கோர்த்து நிற்கின்றோம்.
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – ஜனநாயகவாதிகள்