1992ம் ஆண்டின் இறுதியில் தளபதி கேணல் கிட்டுவுடன் தாயகம் நோக்கிச்சென்ற கப்பல் ஒன்றை இந்திய கடற் படை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இடைமறித்து இந்தியாவிற்கு கொண்டுசெல்ல முனைந்தது.
இந்திய கடற் படையினரின் கைகளில் உயிருடன் பிடிபடுவதை விரும்பாத கேணல் கிட்டு உட்பட ஒன்பது போராளிகள் கப்பலை வெடி வைத்துத் தகர்த்து, தங்களையும் அழித்துக்கொண்டனர். இதன்போது மூவர் மட்டும் கடலில் குதித்து உயிர்தப்பினர்.
அவர்களை இந்தியா கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தியது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2001ல் தண்டனை முடிந்ததும், அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியது இந்தியா. பின்னர் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து நியூசிலாந்துக்கு சென்றனர். 2002ல் அவர்கள் நியூசிலாந்தில் அகதி உரிமை கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதனை நிராகரித்த நியூசிலாந்து அரசு, அவர்களில் இருவரை நாடு கடத்தியது. இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து துணிவுடன் மேல்முறையீடு செய்தார்.
அதனை விசாரித்த நியூசிலாந்தின் உயர் நீதிமன்றம் அந்த நபருக்கு மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் நீதியான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அகதி அந்தஸ்து கோரிய நபர், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், தனது செயலை அவரே ஒப்புக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருக்கு இந்திய அரசு வழங்கிய தண்டனை மற்றும் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அகதி உரிமையை மறுத்திருந்தது நியூசிலாந்து அரசு. இதனை விசாரித்த நீதிபதி, சிறீலங்கா அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில், தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை படைத்தவர்களே என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் இந்த விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டார்.
குறிப்பிட்ட அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்றது உண்மையாகவே இருந்தாலும், விடுதலைப் புலிகள் தங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு அத்தியாவசியமான பொருள்
களைத்தான் அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது. இதில் தவறு காண வேண்டியதில்லை. அந்தக் கப்பல் புலிகளுக்குப் போய்ச் சேராத நிலையில் அவர்களாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியல் குற்றமோ, பொதுமக்களுக்கு ஊறு விளைவித்த குற்றமோ இல்லை என்று தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தமது தீர்ப்பில், ‘இறைமை உள்ள ஒரு இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினர்கள். விடுதலைப் புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அங்கீகாரத்தை நியூசிலாந்தின் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது என்றே கொள்ள முடியும்.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் வரித்துக்கொண்டிருந்த நிலையில், விடுதலைப் புலிகளால் எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகாத அவுஷ்திரேலியா விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டபோது, அருகிலுள்ள நியூசிலாந்தும் அதற்கான முயற்சியில் இறங்கியபோதும், தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தைப் புரிந்துகொண்டு தனது திட்டத்தை கைவிட்டது.
இன்றுவரை விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்காத நாடுகளுள் ஒன்றாக இருக்கும் நியூசிலாந்து, இப்போது தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்ப்பொன்றையும் வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்புக்காக தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவதை விடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்காலச் செயற்பாடுகளுக்கான ஆயுதமாக கையிலெடுக்கவேண்டும்.
நியூசிலாந்து நீதித்துறை வழங்கியுள்ள இந்த துருப்புச்சீட்டை கையிலெடுத்து, இதனை ஆதாரமாகக்கொண்டு தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்ட நியாயத்தை இந்த உலக நாடுகளுக்கு புரியவைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. தனியருவரின் எதிர்ப்பு நடவடிக்கையே இவ்வாறான ஒரு தீர்ப்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெற்றுத்தந்துள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இங்கு புரிந்துகொள்ளவேண்டும்.
ஆசிரியர் தலையங்கம் ( 04-10 -செப்டெம்பர் 2010)
நன்றி:ஈழமுரசு