ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 13வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பெல்ஜியம், புறுசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி செல்லும் வழியில் நேற்று (08.09.2010) பிற்பகல் Strasbourg இல் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதிகளை சந்தித்து மனிதநேய கோரிக்கைகள் கொண்ட மனுவை கையளித்தனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இவ்வாண்டுக்கான அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் நாளான நேற்றையதினம் எமது இந்த நடைப்பயணிகளை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
சிறீ லங்கா அரசின் பொய்முகம் தமக்கு தெரியும் என்றும், அங்கு நடைபெற்றுவரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்த பிரதிநிதிகள், தமிழ் மக்களால் முன்னெடுக்கபடும் இவ்வாறான அமைதி வழியிலான ஜனநாயக போராட்டங்களை தாம் மதிப்பதாகவும் தெரிவித்துள்னர்.
நேற்று பிரான்ஸிலிருந்தும், யேர்மனியிலிருந்தும் குறிப்பிட்டளவு தொகையான பொதுமக்களும் வந்து கலந்துகொண்டனர். தொடர்ந்து பெல்ஜியம் நோக்கிய நடைபயணத்துக்கு முழு அளவிலான ஆதரவை வழங்குவதற்கு பிரான்சிலும், யேர்மனியிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது.
• இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
• எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
• மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து ஓகஸ்ட் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனிவாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
செல்லும் வழியெங்கும் சேர்ந்து நடவுங்கள். 0033601094027 இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டும்,
www.walk-for-justice.org என்ற பிரத்தியேக இணையப்பக்கத்திலும் பாதை விபரங்களை உடனுக்குடன் அறிந்து பிரதேசவாரியாக ஆதரவளியுங்கள்.