பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கார்டிப்பில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தலைவர் கொலிங்வுட், முதலில் களதடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹசன் 21, முகமது யூசுப் 26, பவத் ஆலம் 20 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். பின்னர் பொறுப்புடன் ஆடிய உமர் அக்மல் (35, அணி தலைவர் அப்ரிடி 16 ஓட்டங்களை பெற்றனர்.
பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 126 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து சார்பில் சுவான் 2, பிரஸ்னன், யார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கீஸ்வெட்டர் 6 ஓட்டங்களுடனும் மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்டீவ் டேவிஸ் 33 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்நதனர்.
பின்னர் வந்த ரவி போப்ரா 11, அணி தலைவர் கொலிங்வுட் 4, லுக் ரைட் 0 ஓட்டங்களை பெற்றனர். அடுத்து களமிறங்கிய மார்கன் 38, மைக்கேல் யார்டி 35 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் அக்தர், அப்ரிதி தலா 2, உமர் குல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இங்கிலாந்து மைக்கேல் யார்டி தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை கார்டிப்பில் நடக்கிறது. ,