Sep 6, 2010
/
பகுதி: உலக வலம்
/
பாகிஸ்தானில் இன்று தற்கொலை கார் குண்டுத்தாக்குதல் : 17 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் 3 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட குறைந்தது 17 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெஷாவர் நகரின் தெற்கே கைபர் பிராந்திய லக்கிமாவத் நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையமொன்றை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பாடசாலைப் புத்தகங்களும், பை ஒன்றும் கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பலியானவர்களில் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.
வெடி பொருட்களை ஏற்றி வந்த வாகனம், பொலிஸ் நிலையத்தின் சுவரில் மோதுவதற்கு முன் அவ்வழியாகச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றுடன் மோதி வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் நிலையத்துக்கு அருகிலிருந்த கடையொன்றும் பள்ளிவாசல் ஒன்றும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளன. லக்கிமாவத் நகர் கடந்த காலங்களில் பல குண்டுத் தாக்குதல்களைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, புது வருட தினத்தன்று வொலிபோல் விளையாட்டு ரசிகர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 100 பேருக்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
கடந்த வாரம் பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் பலியாகியிருந்தனர்.