Sep 6, 2010
/
பகுதி: உலக வலம்
/
பிரிட்டனில் பொருளாதார சீரழிவு : அடகு கடைகளுக்கு கிராக்கி
உடனடி பணத் தேவைகளுக்காக பிரித்தானிய மக்கள் தற்போது அடகு கடைகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் அடகு பிடிப்போரின் தொழில் வளர்ச்சி உச்ச கட்டத்திற்கு சென்றுள்ளது. அடகு கடைகளும் 2003 இல் இருந்ததை விட இரு மடங்கு அதிகமாக பெருகியுள்ளது.
வங்கிகள் மக்களுக்கு எளிதான கடன்களை கொடுக்க ஆரம்பிக்காத வரை தங்களுடைய தொழில் அபரிமிதமான வளர்ச்சி காணும் என ஆருடம் சொல்கிறது தேசிய அடகு பிடிப்போர் கழகம்.
20 வருடங்களுக்கு முன்னால் அழிந்து விடும் என நம்பப்பட்ட அடகு கடைகள் தற்போது புற்றீசல் போல் பெருகி அசுர வேகத்தில் வளர்ந்து வருவதோடு இளம் தலைமுறையினரையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.
10 வருடங்களுக்கு முன்னால் லீமிங்டன் ஸ்பாவில் அடகு பிடிக்கும் தொழிலை ஆரம்பித்த பால் காக்கல் என்பவர் தொழிலில் தற்போது பத்து மடங்கு வளர்ச்சி காணப்படுவதாக கூறுகிறார்.
அதே போல் அடகு கடை நடத்தும் பலரும் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டு உடனடியாக பணம் கொடுக்க முடிவதால் தங்கள் தொழில் நல்ல நிலையில் போய்க் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.