காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடையைத் தேடிக் கண்டு பிடித்தால் இறுதிப் போரின் போது குறிப்பாக ஆனந்தபுரத்தில் வீசிய நச்சுக் காற்றின் ரிஷி மூலங்களை கண்டறிந்து கொள்ளலாம்.
அது போல, பாதிப்புற்ற மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டால் இன்னமும் கற்றறிந்து கொள்ள பல விடயங்கள் காத்திருப்பதை உணரலாம். ஆனாலும் இறுதிப் போருக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்பது போலிருக்கிறது இராணுவ தளபதி ஜெயசூரியவின் கூற்று.
நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துணைச் செயலாளர் நிருபமா ராவ் அவர்களிடம், யாழ். பொது நூலகமொன்றில் நடைபெற்ற ஒன்று கூடலில் பேராசிரியர் ஒருவர் துணிச்சலாக வெளிப்படுத்திய கருத்து நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அவர் சாட்சியமளித்தது போலிருந்தது.
யுத்த இறுதி தருணங்களில் இந்தியா செயற்பட்ட விதம் குறித்து தமிழ் மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் கொண்டுள்ளதாகவும் அதேவேளை தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றை வழங்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அப்பேராசிரியர் தெரிவித்திருந்தார்.
அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இலங்கையை வலியுறுத்தும் நிலையில் இந்தியா இல்லை என்பதை இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கிறதென இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வெளிப்படுத்திய எச்சரிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
அதாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது பாதுகாப்பினை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்கிற விவகாரமே இந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கியமான விடயமாக இருக்கிறது.
இவை தவிர கடந்த 24 ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதம மந்திரியைச் சந்திக்கவில்லை என்கிற விவகாரமும் கவனிக்கப்பட வேண்டியது.
வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப்குமார் ஆகிய முக்கிய புள்ளிகளைச் சந்தித்து தமிழக மீனவர் எதிர்கொள்ளும் பிரச்சினை வடக்கின் மீள் குடியேற்றம் குறித்துப் பேசிய பசில் ராஜபக்ஷ, இந்தியாவிலிருந்து சிறப்புப் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றின் வருகையைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் டெல்லிச் செய்திகள் வெளிப்படுத்தின.
ஆனாலும் சர்வகட்சிகளின் சிறப்புக் குழுவிற்குப் பதிலாக முதலில் நிருபமா ராவின் பயணமும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சைச் சார்ந்த உயரதிகாரிகள் மற்றும் தளபதிகளின் விஜயமும் தமிழக முதலமைச்சரின் ஆலோசனையுடன் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வட, கிழக்குத் தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாட்டினை நாடி பிடித்துப் பார்க்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளரின் பயணம் மேற்கொள்ளப்பட்டதென அனுமானிக்கலாம்.
சுமத்தப்பட்ட துயரங்களை இலகுவில் மறந்து விடக் கூடிய மன நிலையில் தமிழ் மக்கள் இல்லையென்பதால் புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் ஊடாக இந்திய எதிர்ப்புணர்வை சீர் செய்து விடலாமென்று இவர்கள் கணிப்பிடுகின்றார்கள்.
ஆனாலும் ஈழத் தமிழினத்தின் ஆதரவுத் தளத்தினை உறுதிப்படுத்த இந்தியா கொள்ளும் கரிசனையை விட சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உள் நுழைவினால் தனது பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுமென்று அச்சப்படுவதில் இந்தியா தனது பார்வையைக் குவித்துள்ளது.
இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்திற்கும் இந்திய இராணுவத் தளபதி வி.கே. சிங் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பிரதீப் குமார் அவர்களின் வருகைக்குமிடையே என்ன உறவு உண்டென்பதைப் புரிந்து கொள்ள விளக்கவுரைகள் தேவையில்லை. இவர்களின் பயணம் எதனடிப்படையில் நடைபெறுகிறதென்பதை இலங்கை ஆட்சியாளர்களும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.
வட பகுதியூடாக விரைவாக நீளப் போகும் இந்தியாவின் அபிவிருத்திக் கரங்கள், புதிதாக முளைத்துள்ள அரச சார்பு அபிவிருத்திச் சங்கங்களையும் வீதிகளை நிர்மாணிக்கக் குவியும் சீனக் கரங்களையும் ஒதுக்கித்தள்ளி,மேலாண்மை நிலையை அடைந்து விடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை ஜூன் மாதம் வரையிலான காலாண்டின் தேசிய உள்ளூர் உற்பத்தியானது 8.8 சதவீதமாக உயர்ந்துள்ளதென இந்தியா அறிவித்துள்ளது.
சீனாவின் 10.3 சதவீதமும் இந்தியாவின் 8.8 சதவீதமும் ஆசிய பிராந்தியத்தில் தமது நீண்ட கால ஆதிக்கத்தை இறுக்கிக் கொள்ள முனையும் மேற்குலகிற்கு பெரும் சவாலாக அமையும்.
இந்தியாவின் படைத்துறை விரிவாக்கம் மற்றும் உலகப் பொருளாதார பின்னடைவையும் உடைத்துக் கொண்டு மேலெழும் பொருண்மிய வளர்ச்சியானது, இலங்கை விவகாரத்தில், புதிய முரண் நிலைகளை தோற்றுவிக்குமென எதிர்பார்க்கலாம்.
சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இராணுவத் தளங்களை அமைக்கும் நகர்வுகள் அமையுமென்று படைத்துறை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இக் கால இடைவெளியில் அபிவிருத்தி நடவடிக்கைகளோடு பாதுகாப்பு ஒப்பந்தமொன்றினை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா முயற்சிப்பது போல் உணரப்படுகிறது. அதுவரை இனப்பிரச்சினை தீர்வு குறித்த அரசியல் விடயங்களை தமிழக சட்ட சபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பேசினாலும் இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகள் யாவும் பிராந்திய பாதுகாப்பு நலனை மையப்படுத்தியே இயங்கும் என்பது வெளிப்படை.
அதேவேளை தற்போதைய இலங்கை ஆட்சியாளர்களும் தமது அதிகாரத்துவத்தை நிரந்தரமாக்குவதற்கு இக் கால இடைவெளியை பயன்படுத்தும் போக்கினைக் காணக் கூடியதாகவுள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையை வலுப்படுத்தி, எந்தத் தனி நபரும் எத்தனை தடவையும் அதிபராகலாமென்கிற சரத்தை உள்நுழைத்து, அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு முனைப்புக் காட்டுகிறது.
இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்தன, விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தலானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்காது என்று திடமாக நம்பினார்.
ஆனாலும் கட்சிகளை உடைத்து மூன்றில் இரண்டைப் பெற முடியுமென்கிற ஜனநாயக முறைமையின் இருண்ட பக்கங்களை அவர் கவனிக்கத் தவறி விட்டார். இரண்டு பக்கமும் பேரிழப்பு ஏற்பட்டாலும் யுத்த வெற்றியானது அதிகாரத்தை நீடிக்கக் கூடிய வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுத் தருமென ஆட்சியாளர்கள் நம்பியிருந்தார்கள்.
ஆயினும் இந்த இடையூறுகளும் அதிர்வுகளும் ஏற்படுவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு திருத்தம் என்கிற கதையாடல் அண்மைக் காலமாக பேசப்பட்டு வந்தது. இதன் எதிர்வினையாக, நிரந்தர ஆட்சியொன்று உருவாக்கப் போகிறதென்கிற கருத்து நிலையால் ஈர்க்கப்பட்ட சிலர் தமது கட்சியை விட்டு வெளியேறி அரசுடன் சங்கமிக்கத் தொடங்கினர்.
அதாவது மனோ கணேசனை தலைவராகக் கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து அவரின் சகோதரர் பிரபா கணேசன் வெளியேறி, உடைவு அரசியலை ஆரம்பித்து வைத்தார்.
இந்த அதிர்ச்சி கொடுத்த மறு தாக்கங்கள் முஸ்லிம் காங்கிரஸிலும் எதிரொலித்ததாக, கொழும்பு பல்கலைக்கழக அரசியல் பீட தலைவர் கலாநிதி கீத பொன்கலன் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சுட்டிக் காட்டியிருந்தார்.
உத்தேச அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் அதேவேளை தொடர்ந்தும் எதிரணி வரிசையில் அமரப் போவதாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தது சுட்டிக் காட்டத்தக்கது. ஆயினும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இந்த ஆதரவுக் கரம் அரசினை நோக்கி நீட்டப்பட்டாலும் எதிர்காலத்தில் அதன் உடைவிற்கான சாத்தியப்பாடுகள் அற்றுப் போகவில்லை என்ற விடயத்தை நிராகரிக்க முடியாது.
அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்தில் தேர்தல் முறையில் மாற்றங்களும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆளுமைக்குள் கொண்டு வரக்கூடிய திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள வேண்டுமென்கிற விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்த விடயமல்ல.
இருப்பினும் பரவலாக பேசப்பட்ட நிறைவேற்று அதிகாரமுடைய பிரதம மந்திரி என்கிற பதவிக்கு மாற்றீடாக இந்த 3 மாதத்திற்கொரு முறை நிகழும் ஜனாதிபதியின் பிரசன்னம் அமையலாமெனவும் கருத இடமுண்டு.
இவை தவிர அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆகக் குறைக்கப்படுகிறது. 17 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஆணைக்குழு நியமனங்கள், இறுதியில் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்கு விடப்படும் என்று சொல்லப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழுவின் அடிப்படை ஜனநாயகப் பண்பு, இதன் மூலம் மறுக்கப்படுவதாக எதிரணிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனாலும் இதுவரை திருத்தங்களுக்குத்தான் சர்வசன வாக்கெடுப்பு நிகழ்த்தப்படுகிறது. முழுமையான அரசியலமைப்பு சட்டமானது மக்களின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படாத விடயங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதாக கூறுவதற்கு அந்த மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்தும் அரசியலானது ஜனநாயகமாகாது.
வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாஷை, ஜனநாயக உரிமை போன்றவற்றை புறக்கணித்து, கட்சி மாறுவது கூட, மக்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகவே கருத வேண்டும்.
அரச ஊழியரை மரத்தில் கட்டி வைப்பதை நியாயப்படுத்தும் போக்கும், தமிழர் தாயக மக்கள் பிரதிநிதிகளை,
பார்வையாளராக்கி அந்நியப்படுத்தும் நிகழ்வும், கட்சிகளை உடைக்கும் புதிய ஜனநாயக மரபும் மக்கள் ஜனநாயக விழுமியங்களை சரிவு நிலைக்கே கொண்டு செல்லும். சிறுபான்மை இனமென்று ஒன்று இல்லை என்று கூறுவதன் ஊடாக தேசிய இனங்களின் தனித்துவ பண்புகளை முழுமையாக நிராகரிக்கும் போக்கினையே இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டுள்ளார்கள்.
கடந்த சில வருடங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்துலக காணாமல் போனோர் நினைவு தினத்தன்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. காணாமல் போகடிக்கப்பட்டோருக்கென பிரத்தியேகமாக நினைவு தினம் வைக்குமளவிற்கு உலக ஜனநாயகம் சீர்குலைந்து போயுள்ளது. உலகின் வளங்களைப் பங்கு போடப் போராடும் வல்லரசாளருக்கு இது எங்கே புரியப் போகிறது.
நன்றி: வீரகேசரி.