புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

ஜெனீவாவில் காத்திருக்கும் கடிவாளம்!

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் நடந்து கொண்­டி­ருக்கும் போதே, கண்­டியில் இன­வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தா­டி­யுள்­ளன..

இம்­முறை ஜெனீவா கூட்­டத்­தொ­டரைச் சமா­ளிப்­ப­தற்­காக, அர­சாங்கம் அவ­சர அவ­ச­ர­மாக, காணாமல் போனோர் பணி­ய­கத்­துக்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித்­தது. காணாமல் போவதில் இருந்து பாது­காப்பு அளிக்கும் சர்­வ­தேச பிர­க­டன சட்­டத்தை நிறை­வேற்­றி­யது.

இந்த இரண்­டையும் வைத்துக் கொண்டே இம்­முறை ஜெனீவா கூட்­டத்­தொ­டரைச் சமா­ளித்து விட எண்­ணி­யி­ருந்த அர­சாங்­கத்­துக்கு, ஜெனீவா அமர்வு கடு­மை­யான அழுத்­தங்­களைக் கொடுக்­கலாம் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­தி­ருக்­கி­றது.

எதிர்­வரும் 21ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின், இலங்கை தொடர்­பான வாய்­மொழி அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. அதற்குப் பின்னர் இலங்கை குறித்த விவாதம் இரண்டு கட்­டங்­க­ளாக வெவ்­வேறு தலைப்­பு­களின் கீழ் நடக்­க­வுள்­ளது.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில், 30/1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­கா­சத்தைப் பெற்ற பின்னர், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான எந்த முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை.

பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­க­ளுக்­கான கலந்­தாய்வு செய­லணி ஒன்று அமைக்­கப்­பட்டு, அதன் அறிக்கை பெறப்­பட்­டி­ருந்த போதிலும், அந்தச் செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை கவ­னத்தில் எடுத்துக் கொள்ளக் கூட இல்லை.

கடந்த ஓர் ஆண்டில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­க­ளையோ, ஐ.நா. குறிப்­பிடும், நிலை­மாறு கால நீதி செயல்­மு­றை­க­ளையோ முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­காமல், அலட்­சி­ய­மா­கவே அர­சாங்கம் இருந்­தது,

இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் பெற்றுக் கொண்டு விட்­டதால், அது­பற்றி உட­ன­டி­யாகக் கவ­னத்தில் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்ற போக்கு அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் அப்­பட்­ட­மா­கவே தெரிந்­தது.

தமக்கு சார்­பான அர­சாங்­கத்­துக்கு அடிக்­கடி ஜெனீவாவில் அழுத்­தங்­களைக் கொடுத்து தொந்­த­ரவு கொடுக்கக் கூடாது என்­பதால் தான், கோரப்­பட்ட கால­அ­வ­கா­சத்தை விட மேல­திக கால அவ­கா­சத்தை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் வழங்கும் வகையில் கடந்த ஆண்டு தீர்­மா­னத்தை முன்­வைத்­தி­ருந்­தது அமெ­ரிக்கா.

அர­சாங்­கத்­துக்கு அதி­க­ளவு நெருக்­க­டியைக் கொடுக்­காமல் இருப்­ப­தற்­காக நீண்­ட­தொரு கால­அ­வ­காசம் கொடுக்­கப்­பட்­டதால், அர­சாங்கம் அலட்­சி­ய­மாகச் செயற்­படத் தொடங்­கி­யி­ருந்­தது.

கடந்த ஒரு வருட காலத்தில், அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லெண்ண நட­வ­டிக்­கை­களில் எந்தப் பெரிய முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை, எல்­லாமே மிக மெது­வா­கவே தான் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன என்ற குற்­றச்­சாட்டை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் கடந்­த­வாரம் மீண்டும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அது­போல பல்­வேறு நாடு­களின் பிர­தி­நி­தி­களும், பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டு­களில் அர­சாங்கம் போதிய வேகத்தைக் காண்­பிக்­க­வில்லை. அலட்­சி­ய­மா­கவே நடந்து கொள்­கி­றது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

அர­சாங்கம் விரை­வா­கவும், வேக­மா­கவும் செயற்­பட வேண்­டிய கால­கட்­டத்தில், இருந்­தாலும், அர­சியல் நலன்­களைக் கருத்தில் கொண்டு காலத்தை இழுத்­த­டிக்கும்- வழக்­க­மான அர­சியல் தந்­தி­ரோ­பா­யத்­தையே கையாண்டு வரு­கி­றது.

இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்து மூன்று ஆண்­டு­க­ளாகி விட்ட நிலையில் இன்னும் இரண்டு ஆண்­டுகள் கூடத் தாக்குப் பிடிக்கப் போவ­தில்லை. தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தின் ஆயுள் காலம், 2020 ஆகஸ்ட் வரை இருந்­தாலும், 2020 ஜன­வ­ரிக்கு முன்னர் நடத்­தப்­படும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்று எவ­ராலும் எதிர்­வு­கூற முடி­யாது.

ஏனென்றால், ஜனா­தி­பதித் தேர்­தலில், எதி­ரணி வெற்றி பெறு­மானால், பாரா­ளு­மன்றம் உட­ன­டி­யாக கலைக்­கப்­ப­டவோ, அல்­லது இந்த அர­சாங்­கத்தைக் கவிழ்த்து விட்டு புதிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­டவோ வாய்ப்­புகள் உள்­ளன.

எனவே, தற்­போ­தைய அர­சாங்கம் உள்­நாட்­டிலும், சர்­வ­தேச அரங்­கிலும் கொடுத்­துள்ள வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்­று­வ­தற்கு இன்னும் எஞ்­சி­யி­ருப்­பது, 20 மாதங்கள் தான்.

அதற்குள் காத்­தி­ர­மா­ன­தொரு பொறுப்­புக்­கூறல், பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்கு இந்த அர­சாங்கம் எந்த உருப்­ப­டி­யான முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. எனவே, இந்த விவ­காரம், குறித்து முடி­வெ­டுக்கும் பொறுப்பு அடுத்த அர­சாங்­கத்தின் தலையில் கட்­டி­வி­டப்­படக் கூடிய சாத்­தி­யங்­களே உள்­ளன.

தற்­போ­தைக்கு இப்­ப­டியே சமா­ளித்துக் கொண்டு போனால் சரி, அடுத்த அர­சாங்கம் அமைத்த பின்னர் பார்த்துக் கொள்­ளலாம் என்ற அலட்­சிய மனோ­பா­வத்தில் அர­சாங்கம் இருக்­கி­றது.

இத்­த­கை­ய­தொரு சூழலில் தான், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொ­டரை எதிர்­கொள்ளத் தயா­ராகி வந்­தது அர­சாங்கம்.

கேட்­ட­தற்கும் அதி­க­மான கால­அ­வ­கா­சத்தைக் கொடுத்த ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையை இல­கு­வாக சமா­ளித்து விடலாம் என்றும் அர­சாங்கம் கரு­தி­யி­ருந்­தது.

ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்கு முன்னர் உரு­வாக்­கி­யி­ருக்க வேண்­டிய காணாமல் போனோர் பணி­ய­கத்தை, இப்­போது தான் அர­சாங்கம் இயங்க வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கி­றது. இதனைத் தான் பெரிய சாத­னை­யாக, பேர­வையில் முன்­வைக்கப் போகி­றது.

அது­மாத்­தி­ர­மன்றி, காணாமல் போவதில் இருந்து அனை­வ­ருக்கும் பாது­காப்பு அளிப்­ப­தற்­கான சர்­வ­தேசப் பிர­க­டன சட்­டத்­தையும், அவ­சர அவ­ச­ர­மாக கடந்­த­வாரம் நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றது.

இந்த இரண்டும் மாத்­தி­ரமே, இந்­த­முறை ஜெனீ­வாவில் தம்மைக் காப்­பாற்றும் என்று அர­சாங்கம் நம்­பி­யி­ருந்­தது. இந்த இரண்­டையும் காண்­பித்து, அர­சாங்கம் இம்­முறை ஜெனீ­வாவைச் சமா­ளித்து விடும் என்றே, பலரும் நம்­பி­யி­ருந்­தனர்.

ஆனால், எல்­லா­வற்­றையும் மாற்­றி­யி­ருக்­கி­றது கண்­டியில் நடந்த வன்­மு­றைகள். கண்­டியில் வன்­மு­றைகள் ஆரம்­பிக்க முன்­னரே, அம்­பா­றையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. அது அவ்­வ­ள­வாக சர்­வ­தேச கவ­னத்தை ஈர்க்­க­வில்லை.

எனினும், கண்­டியின் வன்­மு­றைகள், உல­கெங்கும், மீண்டும் இலங்­கையை பதற்றம் நிறைந்த நாடாக அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இது­வரை இலங்கை பற்றி அறி­யாமல் இருந்­த­வர்­களைக் கூட திரும்பிப் பார்க்க வைத்­தி­ருக்­கி­றது.

கண்­டியில் நடந்த வன்­மு­றைகள், இன, மத சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இலங்­கையில் காலம்­கா­ல­மாக நடந்து வரும் தாக்­கு­தல்­களின் தொடர்ச்­சி­யாகும்.

தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் மாறி மாறி வன்­மு­றை­க­ளுக்குப் பலிக்­க­டா­வாக்­கப்­பட்டு வந்­துள்­ளமை வர­லாறு.

அர­சாங்­கத்தின் பொறுப்­பின்மை இந்த வன்­மு­றை­க­ளுக்கு முக்­கிய காரணம்.

ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் ராட் அல் ஹுசேன், கடந்த வாரம் கருத்து வெளி­யிட்ட போது, குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்குத் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டாது என்ற துணிச்சல் தான் இது­போன்ற வன்­மு­றை­க­ளுக்குக் காரணம் என்று கூறி­யி­ருக்­கிறார். இதே கருத்து, பல்­வேறு மட்­டங்­களில் இருந்தும் வந்­தி­ருக்­கி­றது.

குற்­ற­வா­ளி­க­ளுக்கு அர­சாங்­கமே பாது­காப்பு அளிக்­கின்ற வகையில் செயற்­ப­டு­கின்ற போக்கின் விளைவு தான் இது. இரா.சம்­பந்தன் கடந்­த­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய போது இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

குற்­றங்­களை மறைக்­கின்ற, அர­சாங்­கமே தவ­று­களை ஏற்­றுக்­கொள்ள மறுக்­கின்ற போக்கு, குற்­ற­மி­ழைப்­ப­வர்­க­ளுக்கு சாத­க­மாக அமை­கி­றது, போர்க்­கால குற்­றங்­க­ளுக்கு முறை­யான தண்­ட­னையை இந்த அர­சாங்கம் பெற்றுக் கொடுத்­தி­ருந்தால் போருக்குப் பிந்­திய காலத்தில் சட்­டத்தை யாரும் கையில் எடுக்கத் துணிந்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

இந்­த­ளவு பெரிய வன்­மு­றைகள் வெடித்­தி­ருக்­காது. ஏனென்றால், குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்ற அச்சம் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், இலங்கை அர­சாங்கம் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான வாக்­கு­று­தி­களைக் கொடுத்­தி­ருந்­தது, ஆனால் அதனை நிறை­வேற்­று­வதில் காண்­பித்த அலட்­சி­யமும், அக்­க­றை­யின்­மையும், ஒரு தோல்­வி­யுற்ற அர­சாங்­க­மாக வெளி­யு­ல­கினால் அடை­யா­ளப்­ப­டுத்தும் நிலைக்கு கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

போர்க்­கால மீறல்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூ­று­வ­தற்கு இழுத்­த­டித்து வந்த அர­சாங்­கத்­துக்கு, கண்டி கல­வ­ரங்கள் கடி­வாளம் போடு­கின்ற நிலையை ஏற்­ப­டுத்தக் கூடும்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையை மேற்­கு­லக ஆத­ர­வுடன், சமா­ளித்து விடலாம், என்று கரு­தி­யி­ருந்த அர­சாங்­கத்­துக்கு, இம்­முறை அமர்வு சோதனை மிக்­க­தாக அமை­யலாம். அதற்­காக, பெரிய நட­வ­டிக்­கைகள் ஏதும் எடுக்­கப்­படும் என்று அர்த்­த­மில்லை.

சர்­வ­தேச சமூ­கத்தின் கடு­மை­யான கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்க வேண்­டி­யி­ருக்கும். வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்­று­வதில் காணப்­படும் இழு­ப­றிக்­கான கார­ணங்­களை விப­ரிக்க வேண்­டி­யி­ருக்கும். பல்­வேறு நாடு­களின் எச்­ச­ரிக்­கை­களை செவி­ம­டுக்க வேண்­டி­யி­ருக்கும்.

அதற்கும் அப்பால், ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான உல­க­ளா­விய சட்­ட­வ­ரம்­புடன் கூடிய நடவடிக்கைக்கு உறுப்பு நாடுகளை ஊக்கவிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

இது மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு விடுக்கப்படும் அழைப்பு. இதற்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு எந்தளவுக்கு கிடைக்கும் என்று கூற முடியாவிடினும், இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும்.

மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் ஜெனீவாவில் எதிர்கொண்ட நெருக்கடிகளைப் போன்றளவுக்கு இல்லாவிடினும், கிட்டத்தட்ட அதற்கு நெருக்கமான அளவு அழுத்தங்கள் அரசாங்கம் மீது கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலஅவகாசம் இன்னமும் இருக்கும் நிலையில், அதுசார்ந்த சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இல்லாவிடினும், கண்டியில் வெடித்த கலவரங்களுக்காக, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறியதற்காக, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தவறியதற்காக ஜெனீவாவில் கூனிக் குறுகிப் பதிலளிக்கும் நிலை அரசுக்கு ஏற்படும்.

ஆனாலும், அது பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஊக்குவிக்குமா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது

முகப்பு
Selva Zug 2