புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

பனாமா நாட்டுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா “டிரம்பின் கீழ் வேலை செய்ய முடியாது”என அறிவிப்பு!

பனாமா நாட்டுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர், ஜான் பீலி. இவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஜனாதிபதி டிரம்பின் கீழ் இனியும் பணியாற்ற முடியாது என்பதால் அவர் பதவி விலகி உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதவி விலகல் கடிதத்தில், “ஒரு இளம்நிலை வெளியுறவுத்துறை அதிகாரியாக நான் பதவி ஏற்றபோது, சில குறிப்பிட்ட அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லை என்றாலும்கூட, அமெரிக்க ஜனாதிபதிக்கும், அவரது நிர்வாகத்துக்கும் கீழே உண்மையாக பணியாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு உள்ளேன். அந்த உறுதிமொழியை காக்கிற விதத்தில் நான் பணி புரிய இயலாத பட்சத்தில் கவுரவமாக பதவி விலகி விட வேண்டும் என்று என் வழிகாட்டிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். அதற்கான வேளை இப்போது வந்து விட்டது” என்று கூறி உள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு டிசம்பர் மாத இறுதியில் வந்து உள்ளது.

எனவே தற்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அங்கு குடியேறி உள்ள வெளிநாட்டினர் மீது தகாத வார்த்தைகள் பேசியதாக எழுந்து உள்ள சர்ச்சைக்கும், ஜான் பீலியின் பதவி விலகலுக்கும் தொடர்பு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.இவர் வரும் மார்ச் 9-ந் தேதி பதவியில் இருந்து விடைபெற்றுச்செல்வார் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவர் கடற்படையில் ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நைரோபிக்கான அமெரிக்க தூதர் எலிசபெத் ஷாக்கல்போர்டும் கடந்த மாதம் ராஜினாமா செய்து விட்டது நினைவுகூரத்தக்கது.

முகப்பு
Selva Zug 2