புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

வடக்கு – கிழக்கிற்கு ஒரு இலட்சத்து 67 ஆயிரம் வீடுகள் தேவை – மீள்குடியேற்ற அமைச்சு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. 30 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அவர்களை மீள்குடியேற்றும் செயற்பாடு இடம்பெற்றதுடன், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,66,906 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

அதற்காக 40,000 மில்லியன் ரூபா தேவையென அரசாங்கத்திடம் கோரிய போதிலும், இந்தத் திட்டத்திற்கு 7000 மில்லியன் ரூபாவே கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
2018 ஆம் ஆண்டு முதல் வீடொன்றை நிர்மாணிக்க தலா 10 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு சுட்டிக்காட்டியது.

அத்துடன் வடக்கு, கிழக்கில் 27,418 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவற்றைப் புனரமைக்க 625 மில்லியன் ரூபா தேவைப்படுகின்ற போதிலும் 400 மில்லியன் ரூபாவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்தது.

வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டம் 2020 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6000 பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்த போதிலும் அரசியல் வாதப்பிரதிவாதங்களால் அந்தத் திட்டம் இழுபறியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகளின் இவ்வாறான இழுத்தடிப்புகள் காரணமாக தாம் தொடர்ந்தும் குடிசை வீடுகளிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

முகப்பு
Selva Zug 2