புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

வாங்கியதற்காக கூவினாரா எதிர்கட்சி தலைவர் சி.தவராசா!

thavarasa-epdpதாளையடி கடல்நீரை குடிநீராக்கும் தனியார் ஆலை தொடர்பாக முதலமைச்சர் விதித்த கட்டுப்பாடுகளிற்கெதிராக வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா நேற்றைய அமர்வில் சீறிப்பாய்ந்துள்ளார்.முன்னதாக குடிநீராக்கும் திட்டத்தை ஆரம்பிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பிசுபிசுத்த நிலையில், புலம்பெயர் தமிழரான வர்த்தகர் ராஜன் சுந்தரம்பிள்ளை வடமாகாணசபையினூடாக புதிய முயற்சிகளை ஆரம்பித்துள்ளார். அவரது முயற்சிகளிற்கு வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முன்வந்திருந்தனர்.
இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாதென மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அறிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கு எதிராக மாகாணசபைக்குள் எதிர்ப்பை கிளப்பவும், திட்டத்திற்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவரவும் இரகசிய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.எனினும் இதனை ஊடகங்கள் அம்பலப்படுத்தியதையடுத்து நேற்றைய அமர்வில் சி.தவராசா திட்டிதீர்த்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாணத்தை நோக்கிவரும் வெளிநாட்டு முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்களாக செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்திருந்தார்.
வட மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீட்டிற்கான இரண்டாவது வாசிப்பு மீதான உரையின் போது உரையாற்றிய அவர்; கடல் நீரை நன்னீராக்கி அதனை பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பகுதிகளிற்கு விநியோகம் செய்ய தனியாரினால் எடுக்கப்பட்ட முயற்சி இன்று எமது முதலமைச்சரினால் முடக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது.

32 மில்லியன் அமெரிக்க டொலரில் இந்தத் திட்டம் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில், மருதங்கேணி பிரதேச செயலாளரினால் தடுக்கப்பட்டன. இவ்வாறு நாம் தடையாக இருந்தோமேயானால் ஒரு முதலீட்டாளரும் வடமாகாணத்திற்காக முதலீடு செய்வதற்கு வர மாட்டார்கள்.

வடமாகாணத்தில் தடுக்கப்பட்ட திட்டத்தை அம்பாந்தோட்டையில் மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கு தற்போது அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, எமக்கு கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளைத் தெற்கிற்கு அனுப்பினோம் என்ற சரித்திரம் படைத்த மாகாண சபையாக இந்த மாகாகண சபை அமையப் போகின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன்.
இவ்வாறே எமது பிரதேசத்தை நோக்கிவரும் ஒவ்வொரு முதலீட்டு வாய்ப்புகளையும் சுற்றுச் சூழல், அடிப்படை உரிமைகள் என்று நாங்கள் தட்டிக் கழித்துக் கொண்டு போனால் எமது பிரதேசம் எப்போது அபிவிருத்தி காணப்போகின்றதெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் மதுபான விருந்துடன் இதற்கான முதலாவது இரகசியகூட்டம் நடந்திருந்தது. இதில் ஏழு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். கொக்குவில் தலையாளி பகுதியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடந்த சந்திப்பை சி.தவராசா ஒழுங்கமைத்திருந்தார். சி.தவராசா, ச.சுகிர்தன், இ.ஆனோல்ட், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, இ.ஜெயசேகரம், த.குருகுலராஜா ஆகிய ஏழு உறுப்பினர்களுடன், வர்த்தகர் ராஜன் சுந்தரம்பிள்ளையும் கலந்துகொண்டார்.
தனியார் கடல்நீர் திட்டத்தை முதலமைச்சர் நிராகரித்துள்ள நிலையில், அந்த நிராகரிப்பிற்கு எதிராக மாகாணசபை உறுப்பினர்களை தூண்டிவிட மேற்கொண்ட முயற்சி அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தனது இயலாமையில் திட்டிதீர்த்துள்ளார் சி.தவராசா.

முகப்பு
Selva Zug 2