வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட வேளையில் தமிழரசுக் கட்சி அதில் இடம்பெறவில்லை! பனங்காட்டான்

TNA-Sampanthan-Sumanthiran2001ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டபோது, தமிழரசுக் கட்சி அதில் இருக்கவில்லை. இன்றுவரை கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக தலைவர் என எவரும் நியமிக்கப்படவும் இல்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவே இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுச் செயற்படுகிறார்.

இலங்கைத் தமிழர் அரசியலுக்கு மாற்றுத்தலைமை ஒன்றுக்கான காலம் வந்துவிட்டது என்ற பேச்சு அண்மைக்காலமாக வீச்சுப்பெற்று வருகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிகழ்காலப் போக்கில் சலிப்பும் ஏமாற்றமும் கொண்ட பெரும்பாலானவர்கள், விரும்பியோ விரும்பாமலோ இக்கருத்தை பகிரங்கமாக வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாகி பதினாறு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதில் செயற்பாட்டுக் காலத்தை 2001 முதல் 2009 வரை என்றும், 2009 முதல் 2017 வரை என்றும் வகைப்படுத்திப் பார்க்கையில், கீரைக்கடைக்கு எதிர்க்கடை தேவையென்ற நிலையே இங்கும் காணப்படுகிறது.

அப்படியென்றால் மாற்றுத் தலைமை எங்கிருக்கிறது? அதனைக் கண்டுபிடித்து அரசியலரங்குக்குக் கொண்டு வரப்போவது யார்? தமிழ் மக்களின் ஏழு தசாப்த அரசியல் ஏமாற்றத்தை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது?

இப்படியான கேள்விகளுக்குப் பதில் காணப்பட்டு, அதன்பின்னர் அவை அறிவியல் ரீதியில் பரிசீலிக்கப்பட்டு, உரிய முறையில் சரியான தலைமை அடையாளம் காணப்படும்வரை மாற்றுத் தலைமையென்பது வெறும் பேசுபொருளாகவே இருந்துவிட்டுப் போகலாம்.

மறுபுறத்தில் கூட்டமைப்புக்குள் இழுபறி, மோதல், பிளவு என்றவாறான செய்திகள் பரவலாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

நல்லாட்சி என்று சொல்லப்படும் மைத்திரி – ரணில் கூட்டமைப்பில் சம்பந்தன் குழுவினர் நம்பிக்கை கொண்டு எழுதாத ஒப்பந்தம் செய்து பதவிகளைப் பெற்றதன் விளைவுகளை, தமிழ் மக்களின் மேற்சொன்ன கேள்விகள் ஊடாக பார்க்க நேர்ந்திருப்பது பெரும் சோதனை.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலிருந்து, இந்த வாரத்துப் புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய வரவு செலவு திட்டம் வரையான அனைத்திலும் கூட்டமைப்புக்குள் பிய்ச்சல் பிடுங்கல் நன்றாகவே இடம்பெறுகிறது.

இனிவரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிடப் போவதில்லையென ஈ.பி.ஆர்.எல்.எவ். அறிவித்துள்ளது.

ஆனால், தேர்தல் சின்னம் எதுவுமில்லாத கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். விலக மாட்டாதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஜனவரி பிற்பகுதியில் நடைபெறவுள்ள உள்;ராட்சித் தேர்தல் வேட்பாளர் நியமனத்தின்போது உண்மையான நிலைவரம் பகிரங்கமாகிவிடும்.

இந்த மாதம் 9ம் திகதி வெளியான அரசின் புதிய வரவு செலவுத் திட்டம் தொடர்பாகவும் எதிர்மாறான கருத்துகள் கூட்டமைப்புக்குள்ளிருந்து வந்துள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டம் நல்லதென்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு ஓரளவாவது நன்மை கிடைக்க வேண்டுமென்றால், இந்த வரவு செலவுத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியுள்ளார்.

ஆனால், வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் பயக்கவில்லையென்றும், தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் மற்றொரு பங்காளியான புளொட் தரப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளிவரவில்லை.

இதற்கிடையில், கூட்டமைப்பு எவ்வாறு ஒன்றாக இயங்க வேண்டும் என்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஓர் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

கூட்டமைப்பு அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளை வைத்துக் கொண்டும், பிரிந்துபோன கட்சிகளை உள்வாங்கியும் முன்செல்ல வேண்டுமென்பது இவரது ஆலோசனை.

அங்கம் வகிக்கும் கட்சிகள் என்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் என்றும், பிரிந்துபோன கட்சிகள் என்பது தமிழ் காங்கிரஸ் மற்றும் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி என்றும் அர்த்தம் கொடுக்கிறது.

மரணம் நிகழ்ந்திராத ஒரு வீட்டிலிருந்து கடுகு பெற்று வந்தால் இறந்த பிள்ளையை மீட்டுத் தர முடியுமென்று ஒரு தாயிடம் புத்தர் தெரிவித்தது போன்றதுதான் முதலமைச்சரின் ஆலோசனை.

இவரது ஆலோசனையை கூட்டமைப்பின் தலைமை ஏற்க மறுத்தால், மாற்றுத் தலைமையை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே தமிழரின் விருப்புக் கலந்த ஆலோசனையாகவுள்ளது.

தமிழரின் அரசியல் களம் இவ்வாறு சுற்றிச் சுழன்று சுழிமாறி ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், அரசியல் நன்கறிந்த கனடா வாழ் அன்பர் ஒருவரிடமிருந்து சில நாட்களுக்கு முன்னர் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

உங்களின் ஞாபகசக்தியை சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு கேள்வி கேட்கிறேன் என்ற பீடிகையுடன் தமது கேள்வியை வீசினார்.

கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் தலைவராக யாரை நியமித்தார்கள் என்பது அவரது கேள்வி.

ஒருவரையும் தலைவராக நியமிக்கவில்லை என்று பதிலளித்த நான், அப்போது தமிழருக்கு ஒரேயொரு தலைவர் மட்டும்தான் இருந்தார் என்று சற்றுக் கூடுதலாக விளக்கம் கொடுத்தேன்.

அப்படியென்றால் இரா.சம்பந்தன் எப்போது தலைவராக நியமனம் ஆனார் என்பது அவரின் அடுத்த கேள்வியாக வந்து வீழ்ந்தது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக மட்டுமே அவர் நியமிக்கப்பட்டார். 2009ம் ஆண்டின் பின்னர் இது கூட்டமைப்பின் தலைவர் என்று எவ்வாறோ எவருக்கும் தெரியாமல் திரிபு பெற்று மாற்றத்துக்குள்ளாகி விட்டது.

இப்படியாக கூட்டமைப்பின் உருவாக்கம், பிறப்பு, தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக பல விடயங்கள் இன்று வசதி கருதி மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டதால், காலத்தின் தேவை கருதி அதனை இங்கு எழுதுவது அவசியமாகத் தோன்றுகிறது.

2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. விடுதலைப் புலிகளின் அனுசரணையில் தமிழர் நலவிரும்பிகள் சிலர் முன்னாள் போராளியும் ஊடகவியலாளருமான தராக்கி சிவராம் தலைமையில் மேற்கொண்ட முயற்சி பலனளித்தது.

தமிழ் காங்கிரஸ், ரெலோ, தமிழர் விடுதலை முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய நான்குமே கூட்டமைப்பு உருவாக்க புரிந்துணர்வில் ஒப்பமிட்ட நான்கு அரசியல் கட்சிகள்.
விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பூரணமாக ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பு அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தது.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் 15 இடங்களில் வெற்றிபெற்றது. கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால் தமிழர் விடுதலை முன்னணியின் உதயசூரியன் சின்னமே தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்பதென்ற முடிவை ஆனந்ததசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்து அது கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை முன்னணியின் இடத்துக்கு தமிழரசுக் கட்சி கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. இதனால் இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் கூட்டமைப்பின் சின்னமானது. இத்தேர்தலில் கூட்டமைப்பு 22 ஆசனங்களைக் கைப்பற்றியது.

2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பு 14 ஆசனங்களை மட்டுமே பெற்றது. இதில் தேசிய பட்டியலூடாக எம்.ஏ.சுமந்திரன் நியமனம் பெற்றார்.

இத்தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சி, இத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டதாயினும், எவரும் பெற்றி பெறவில்லை.

2015ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு மீண்டும் வீடு சின்னத்தில் போட்டியிட்டு தேசிய பட்டியல் உட்பட 16 ஆசனங்களைப் பெற்றது.

2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யுத்தகால இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவையும், 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவையும் கூட்டமைப்பு ஆதரித்தது.

மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த முடிவை கூட்டமைப்பு எடுத்ததாயினும், 2010ல் தோல்வியையும் 2015ல் வெற்றியையும் கண்டது.

மைத்திரியை ஜனாதிபதியாக வெற்றிபெறச் செய்ததின் வெகுமதியாக கூட்டமைப்பின் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாவிடினும், நாடாளுமன்ற நடைமுறையின்கீழ் அதனை நாடாளுமன்றத்தில் தலைமை தாங்கும் நாடாளுமன்ற குழுத் தலைவர் என்னும் பதவியும் சம்பந்தனுக்குக் கிடைத்தது.

நாடாளுமன்ற அமர்வு நாட்களில் ஒவ்வொரு கட்சிக்கும் அல்லது அணிக்கும் வழங்கப்படும் நேரம், பேச்சாளர் பட்டியல் போன்றவைகளில் முடிவெடுப்பது அந்தந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர். அதனால் சம்பந்தனுக்கு இப்பதவி கிடைத்ததே தவிர கூட்டமைப்பின் தலைவராக அவர் நியமிக்கப்படவில்லை.

கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யாமல்,தமிழரசுக் கட்சியின் தலைமையில் அதனை கொண்டு செல்ல வேண்டுமென்ற தமிழரசாரின் பிடிவாதப் போக்கே, பிணக்குகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இன்று பிளவு நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

முகப்பு
Selva Zug 2