செவ்வாய், 17 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

சட்டமா அதிபர் தவறிழைக்கிறார் -வடக்கு முதலமைச்சர்

ஜநாவினில் இலங்கை அரசு உறுதியளித்தது போன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொண்டிருந்தால் அரசியல் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்திருக்குமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் பாணியிலான தானே கேள்வி பதில் விடயத்தினில் அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கப்படுகையினில் ஜெனிவாவில் பல வருடங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே விலக்குவதாக உறுதி மொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச்செய்யவில்லை. அதனைக் கை வாங்கி விட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனே பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யுங்கள் என்று கோருவது இலகுவாய் இருந்திருக்கும். ஏனென்றால் எமது வழக்கமான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணான ~ரத்துக்களே குறித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இது காறும் இருந்துவந்துள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான கைதிகள் இதுவரையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். அதாவது எமது வழமையான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணானவிதத்திலேயே அவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளார்களெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அநுராதபுரத்தில் விளக்கத்திற்காக அநுராதபுரசிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பிரச்சனை. முன்னையது பொது என்றால் இது குறிப்பிட்டகைதிகளோடு தொடர்புடையது.
2009ல் இருவர் கைதுசெய்யப்பட்டு 2012 வரையில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தொடர்ந்து மறியலில் வைத்திருக்கப்பட்டார்கள். மூன்றாம் நபரைக் கைதுசெய்த பின் 2012ல் குற்றச்சாட்டுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐம்பது தடவைகளுக்கு மேல் வழக்கு தவணை கொடுக்கப்பட்டு ஈற்றில் மூன்றுநாட்களுக்கு தொடர் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டு வழக்கு தொடங்கவிருக்கும் நேரத்தில் அநுராதபுரத்திற்கு மாற்றுமாறு சட்டத்துறை தலைமை அதிபதி ஆணை வழங்கியுள்ளார்கள்.இது ஒரு பொறுப்பற்ற செயலாகத் தென்படுகிறது. உண்மையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி வேண்டா வெறுப்பாகத்தான் உத்தியோகபூர்வ கட்டாயத்தின் நிமித்தம் வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றினார். காரணங்கள் கூறப்படாவிட்டாலும் சாட்சிகள் பயமுறுத்தப்பட்டதாலேயே இவ்வாறு மாற்றியதாகக் கூறப்படுகின்றது.
சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது. சாட்சிகளைப் பொலிசாரே மன்றுக்குக் கொண்டு வந்து திரும்பவும் கொண்டுபோய் அவர்கள் வதிவிடங்களில் சேர்ப்பிக்க முடியும். ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் போது சாட்சிகள் பயந்துவரத் தயங்குகின்றார்கள் என்பது எனக்கு ஒரு நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது.
எனக்குக் கிடைத்த தகவல்களின் படிபோர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்பு பட்டிருந்தார்கள் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்று தெரியவந்துள்ளது. அத்துடன் கைதில் இருக்கும் வேறு சில கைதிகள் அரசசாட்சிகளாக மாறி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிகின்றது. அப்படியெனில் அரசசாட்சிகளாக மாறிய இந்த மூன்று தமிழ்ச் சாட்சிகள் பற்றியே அரசுக்கு கரிசனை போலத் தெரிகிறது. இங்கு அரசியல் கலந்திருப்பதைநான் காண்கின்றேன். எப்படியாவது விடுதலைப்புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச்சமனாகப் புலிகளும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும். இதனால்த்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டு வர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது.
சாட்சிகள் வவுனியா வரப் பயப்படுகின்றார்கள் என்றால் யார் யார் என்ன மாதிரியான பயமுறுத்தல் காரணமாக அங்கு வரப் பயப்படுகின்றார்கள் என்று சட்டத்துறைதலைமையதிபதிக்கு சத்தியக் கடதாசிகள் கையளித்துள்ளார்களா என்பதை அவர் வெளிப்படுத்தவேண்டும்.
குறித்த தமிழ் அரசசாட்சிகள் தமிழ்ப் பிரதேசநீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும் போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரசதரப்பு பெற்றுக்கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்திவிடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றியமைக்கான காரணம் என நான் யூகிக்கின்றேன். உண்மை வெளிவந்தால் வவுனியா மேல் நீதிமன்றநீதிபதி வழக்கைத் தூக்கி எறியத் தயங்கமாட்டார் என்பது சட்டத்துறைத் தலைமை அதிபதிக்குத் தெரியும்.
மேலும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் வழமையான சட்டத்திற்குப் புறம்பாக,தருணத்திற்கு ஏற்றவாறுகொண்டு வரப்பட்ட மிகக் கேவலமான சாட்சியம் என்றே உச்சநீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் உள்ளடங்களாக நீதிபதிகள் பலர் கணித்து வந்துள்ளனர். நாகமணி வழக்கில் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் குற்றஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை மட்டுமே சாட்சியமாக வைத்து ஒருவரைக் குற்றவாளியாக்குவதுமிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே குறித்த ஒப்புதல் வாக்கு மூலங்களில் நடந்ததாகக் கூறப்படும் முக்கியவிடயங்கள் சம்பந்தமாக அனுசரணைச் சாட்சியமும் பெறப்படவேண்டும் என்று கூறியிருந்தார். இவற்றை சில நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. புல ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்படி தமிழ் அரசசாட்சிகளின் சாட்சியம் முரணாக இருந்தால்க்கூட வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்து கைதிகளைக் குற்றவாளிகள் ஆக்கிவிடலாம் என்றே அரசுகருதுகின்றது. இதனால்த்தான் வெறும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் வைத்து குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதை உசிதமென அரசாங்கமும் அதன் சட்டத்துறைத் தலைமையதிபதியும் எண்ணுகின்றார்கள் போல் தெரிகின்றதெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2