ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

சாவுக்கு துணிய வேண்டும். பயம் கூடாது! – சுப. உதயகுமாரன்

panmuga alumaiகடந்த 1986-87 கால கட்டங்களில் உலக சமாதான ஆய்வு குறித்த சர்வதேச மாநாடுகளில், பயிற்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் பிரிட்டன், ஃபிரான்சு, ஜெர்மனி, நார்வே போன்ற பல நாடுகளுக்குப் பயணம் சென்றேன். எத்தியோப்பிய நாட்டில் ‘சமாதானக் கல்வி’ (Peace Education) குறித்து நான் செய்துவந்த சில பரிசோதனைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதும், உலகின் பல பகுதிகளில் இந்த விடயம் குறித்து இயங்கிக் கொண்டிருப்போரின் அனுபவங்களைக் கேட்டறிவதுமே என் நோக்கங்களாக இருந்தன.

மேற்கண்ட நாடுகளில் நான் சென்ற இடங்களில் எல்லாம் ஈழத்தமிழ் இளைஞர்களை சந்தித்தேன். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும், அது எனக்கோ, நான் சந்தித்த தமிழீழத் தோழர்களுக்கோ ஒரு பிரச்சினையாக, தடையாக இருக்கவில்லை. சந்தித்தத் தருணத்திலேயே நண்பர்களாகி ஈழத்து நிகழ்வுகளை, நிலைமைகளை அலசுவோம், மீண்டும் சந்திப்போம், இன்னும் பேசுவோம், நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவோம்.

எங்களுக்கிடையே நடந்த இரண்டு முக்கிய விவாதங்கள்:
[1] மக்கள் விடுதலைக்கு உகந்தது அறவழிப் போராட்டமா அல்லது ஆயுதப் போராட்டமா?
[2] விடுதலைக்குப் பிறகு தமிழீழத்துக்குத் தேவை சனநாயகக் குடியரசா அல்லது மார்க்சிய-லெனினிய கம்யூனிச அரசமைப்பா?
அகிம்சை மற்றும் சனநாயகம் பக்கத்தில் நின்று ஆவேசமாக விவாதித்தேன் நான். புலம்பெயர்ந்த தோழர்களில் பெரும்பாலானோர் ‘விடுதலைப் புலிகள்’ அமைப்பை ஆதரித்தார்கள்; சிலர் இயக்கத்தின் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர். இவர்களில் நிறைய பேர் கம்யூனிச அரசமைப்பை விரும்பி ஆதரித்தனர்.

மங்கிஸ்து ஹைல மரியம் எனும் ஒரு கொடூரமான இராணுவ அதிகாரியின் ஸ்டாலினிச அரசின் கீழியங்கிய எத்தியோப்பியா நாட்டிலிருந்து நான் போயிருந்ததால், இராணுவத்துவம், ஸ்டாலினிசம் போன்றவற்றைப் பற்றிய யதார்த்த அனுபவங்களின் அடிப்படையில் நான் பேசினேன். ஈழத்துத் தோழர்கள் விழுமியங்களின் அடிப்படையில் பேசினார்கள்.

உணர்வார்ந்த தமிழன் என்கிற முறையிலும், உரத்த ஈழப் போராட்டத்தின் ஆதரவாளர் என்கிற வகையிலும், எனது தந்தையார் மேற்கொண்ட சிறுசிறு ஈழ ஆதரவு நடவடிக்கைகளால் கவரப்பட்டவன் என்பதாலும், ஈழப் போராட்டம் என்னை மிகவும் பாதித்திருந்தது. ஈழ விடுதலைக்காகப் போராடிய பல இயக்கங்களைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தேன். விடுதலைப் புலிகளின் வீரத்தை, உறுதியை, அர்ப்பணிப்பை, கடமையுணர்வை, போர்த்திறனை, நிர்வாகத் திறனை, தியாகத்தை எல்லாம் உளமார மெச்சினாலும், அவர்களை எந்தவிதமான விமரிசனத்துக்கும் உட்படுத்தக்கூடாது எனும் சிலரின் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை.

ஈழ வரலாற்றைப் பெருமளவு அறிந்திருந்ததால், தமிழீழ மக்கள் பல்வேறு சிங்களத் தலைவர்களால் பலமுறை ஏமாற்றப்பட்டதையும், இன வேற்றுப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதையும், தந்தை செல்வா, பெரியவர் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களின் தலைமையிலான அறவழிப் போராட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டதையும், வேறு வழிகள் ஏதுமின்றி அடுத்தத் தலைமுறை ஆயுதப் போராட்டத்தை ஏற்றெடுக்க வேண்டி வந்ததையும், சிங்களப் பேரினவாதம்தான் வன்முறையை தமிழ் மக்கள் மீது வலிந்து திணித்தது என்பதையும் நான் நன்கு அறிந்திருந்தேன்.

ஆனாலும் வன்முறை ஒருகட்டத்தில் பயன்படுத்துகிறவரை முழுக்க முழுக்க ஆட்கொண்டுவிடும், உபாயமாக இருக்கும் விடயம் உயிரோட்டமாக மாறிவிடும் என்பதுதான் எனது பெரும் அச்சமாக இருந்தது. வெறும் சுத்தியலை மட்டுமே ஒருவன் உபகரணமாகக் கொண்டிருந்தால், எதிர்கொள்ளும் சிக்கல்களை எல்லாம் அடித்து மட்டமாக்கத்தான் முயல்வான் என்பதுபோல, வரைமுறையற்ற வன்முறை சில நேரங்களில் நம்மையே, நம்மவரையே பலிகொள்ளும் என்பது எனது கலக்கத்தின் முக்கிய காரணமாக இருந்தது.

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
எனும் வள்ளுவனின் எளிய இலக்கணத்தை புரிந்துகொண்டு வன்முறை வன்முறையைத்தானே வளர்த்தெடுக்கும் என்று தயங்கினேன்.

தமிழகத்தில் நிறைய “புரட்சியாளர்களை” நாம் பார்க்கிறோம். “ஆயுதப்புரட்சி ஒன்றுதான் வழி, அதை நடத்த மாவோயிசம்தான் கதி” என்று முழங்குவார்கள். “நாம் எடுக்கவேண்டிய ஆயுதத்தை நமது எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்று வீரவசனம் பேசுவார்கள். “எதிரியை அடித்து நொறுக்கு, போலீசை வெட்டு” என்றெல்லாம் ஆர்ப்பரிப்பார்கள். வாய்ச்சொல் வீரர்கள் இவர்கள்! கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு இடிந்தகரையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினோம். அதில் உரையாற்றிய ஒரு நண்பர் “போலீசைக் கண்டால் வெட்டு” என்று இளைஞர்களுக்கு இலவசமாகப் புரட்சி ஆலோசனைகள் சொல்லி, வீர முழக்கமிட்டு அமர்ந்தார். அடுத்ததாகப் பேசிய நான் “எனக்கு முன்னால் பேசிச்சென்ற நண்பர் இதுவரை எத்தனை போலீஸ்காரர்களை வெட்டியிருக்கிறார்? இங்கேப் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கும் போலீஸ்காரர்களை ஏன் வெட்டவில்லை?” என்று கேட்டேன். அந்த நண்பர் இன்றுவரை என்னோடு பேசமாட்டார்.

மேற்குறிப்பிட்டவை போன்ற எண்ணவோட்டங்கள் பல என்னுள் இயங்கிக் கொண்டிருந்தாலும், மாவீரன் பிரபாகரனை அவனது உண்மைக்காக, நேர்மைக்காக, வீரத்துக்காக, ஒழுக்கத்துக்காக, உறுதிக்காக, சேவைக்காக, தொண்டுக்காக, தியாகத்துக்காக நான் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் நினைத்திருந்தால் தனது மனைவி, மக்கள் பெயரில் உலகில் பல நாடுகளில் சொத்துக்கள் வாங்கிப் போட்டிருக்கலாம். அவர்களுக்கு மேல்நாடுகளில் ஒரு சொகுசான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். அவரேகூட நார்வேயிலோ, ஸ்வீடனிலோ சுகமாக பாதுகாப்பாக வாழ்ந்தவாறே இங்கே ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.

அவர் வழிநடத்திய ‘விடுதலைப் புலிகள்’ இயக்கமும் கம்போடியாவின் “கெமர் ரூஜ்” இயக்கம் போன்ற கொலைவெறிக் கூட்டமாக இருக்கவில்லை. இயக்கத்தின் துவக்கக் காலகட்டத்தில் பெரும் உயிரிழப்பு இல்லாமல் துல்லிய தாக்குதல் நடத்தியதாக இருந்தாலும் சரி, பிற்காலத்தில் சரணடைந்தவர்கள், பிடிபட்டவர்களைக் கொல்லாமல் பாதுகாத்ததிலும் சரி, பல வழிகளில் அகிம்சைப் போற்றப்பட்டது. அரச இலக்குகளை மட்டுமே குறிவைத்துத் தாக்குவது, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அல்லது தேவைகளுக்காக மட்டுமேத் தாக்குவது என்கிற போர் அறங்களும் இயக்கத்தால் போற்றப்பட்டன. ஒரு கட்டத்தில் வன்முறையைக் கைவிட்டு மென்முறையை ஏற்றெடுத்து இயக்கத்தின் சார்பில் தம்பி திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தது, சிங்களப் பேரினவாதக் குள்ள நரிகளோடுகூட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது என இயக்கத்தின் அகிம்சைக் கூறுகள், கொள்கைகள், நடவடிக்கைகள் பலவுள்ளன. இது குறித்து யாராவது விரிவாக ஆய்வு செய்வது மிகுந்த நலம் பயக்கும்.

இந்த ஒப்பற்றத் தலைவன் தன் மக்களோடு மக்களாக வாழ்ந்தான். தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளைக்கூட மரணத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக யாரோடும் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளவில்லை அவன். தன் கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கவில்லை, விலை போகவில்லை. பணம், பதவி, பட்டங்களுக்கு விழவில்லை.

இந்த அரும்பெரும் தலைவனைப் பற்றி ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதியிருக்கும் இந்த நூல் முற்றிலும் வேறுபட்டது, மிக முக்கியமானது. பெரும் தலைவர்கள் பற்றி வாழ்க்கை வரலாறு நூல்கள் (Biography) எழுதப்படுவதுண்டு. அந்தத் தலைவர்களே தங்களைப் பற்றிய தன் வரலாற்று நூல்கள் (Autobiography) எழுதுவதுமுண்டு. மேற்குறிப்பிட்ட முறைகளைத் (genre)  தாண்டி, தன் பயண அனுபவங்களின் ஊடாக தலைவர் பிரபாகரனின் ஆளுமை, தலைமைத்துவம், தனிப்பட்ட குணநலன்கள், ஆட்சி முறை பற்றியெல்லாம் அழகாக, விறுவிறுப்பாக படம்பிடித்துக் காட்டுகிறார் ஓவியர் புகழேந்தி. இது ஒரு புதிய போற்றத்தக்க  அணுகுமுறை.

தலைவர் பிரபாகரன் அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறுகள் மற்றும் வரலாற்று நாவல்களை விரும்பி வாசித்தார்; இழப்புக்களையும், துன்பங்களையும் கண்டு அவர் துவண்டு விடுவதில்லை என்பதையெல்லாம் அழகாக விளக்குகிறார் ஓவியர் புகழேந்தி. “முடியும் என்ற நம்பிக்கையுடனான செயற்பாடே வெற்றிக்கு வழி” (பக். 74), “முதலில் சாவுக்கு துணிய வேண்டும். பயம் கூடாது” (பக்.170) என்பன போன்ற தலைவரின் விழுமியங்கள் அவரின் குணநலன்களை சுட்டிக் காட்டுகின்றன. தான் கையாளும் ஒரு விடயத்தைப் பற்றி சம்பந்தப்பட்ட பலரிடம் கருத்துக் கேட்பார் என்பது தலைவரின் சனநாயகத் தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

அவரது போர்த் தந்திரம்கூட புதுமையானதாக இருக்கிறது. கடந்த 1984-ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பை ஆரம்பிக்கும்போதே வீரர்களுக்கு நீச்சல் பயிற்சியும், படகுக் கட்டும் பயிற்சியும் கொடுக்கப்பட வேண்டும் என்று சிந்தித்திருக்கிறார், செயல்பட்டிருக்கிறார். தலைவர் போரை மட்டும் நடத்தவில்லை, மக்களையும் சரியாக வழி நடத்தினார்; அவர்களின் துன்பங்களை இயன்றவரை தீர்த்து வைத்தார் என்று பதிவு செய்கிறார் நூலாசிரியர். அதற்கான நிர்வாக அமைப்புக்கள் பலவற்றை உருவாக்கியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, விடுதலைப் புலிகள் இயக்கம் மொத்தம் 19 சட்டங்களை வடிவமைத்திருக்கிறது. சீதனத் தடைச்சட்டம், உணவுச் சட்டம், சீட்டுச் சட்டம் என மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை மேலாண்மை செய்யும் சட்டங்கள் பல அவற்றில் அடங்கியிருந்தன.

காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு அரசியல், வரலாறு போன்றவை கற்பிக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கைப் பேணுவதுடன் சமூக விடுதலைக்கான செயற்பாடுகளிலும் அவர்கள் இயங்கி வந்தார்கள். மக்களோடு இணைந்து செயல்படாவிட்டால், காவல்துறையினர் மக்களின் எசமானர்களாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக கருதினார் தலைவர். அதே போல சிறைகள் ஒருவரை நல்வழிப்படுத்துபவையாக இருக்க வேண்டுமே தவிர, நிறைய குற்றச்செயல்களை கற்பித்துக் கொடுப்பவையாக இருக்கக்கூடாது என்று சிந்தித்திருக்கிறார்.

ஓவியர் புகழேந்தி அழகாக விவரிக்கிறார்: “போராட்டக்களத்தில் நின்று கொண்டே, தலைவர் அனைத்து வகை முன்னேற்றச் செயல்பாடுகள் குறித்தும் சிந்திக்கின்றார், அதைச் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆராய்கின்றார், விவாதிக்கின்றார். எல்லாவற்றையும் விட சரியான நபர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து அதற்கேற்றவாறு நடைமுறைப்படுத்த அறிவுறுத்துகின்றார். எது எதை எப்படிச் செயல்படுத்த வேண்டுமோ அதை, அதற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்த உரியவர்களுக்கு உத்தரவு இடுகின்றார். மொத்தத்தில் அனைத்தையும் அவர் கண்காணிக்கிறார்” (பக்.199).

போர் நெருக்கடிகள் சூழ ஆரம்பித்த காலகட்டமான 2005-ஆம் ஆண்டிலும் யூலை மாதம் ‘தமிழீழச் சூழல் நல்லாட்சி ஆணையம்’ என்கிற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். சிங்கள அரசு வடகிழக்கின் இயற்கை வளத்தையும், சுற்றுச் சூழலையும் சிதைக்க, சிங்கள இராணுவம் தமிழீழக் காடுகளை அழித்திருக்கிறது, தென்னை, பனை போன்ற மரங்களை வெட்டி, சிங்கள இராணுவத்துக்கு பதுங்கு குழிகள் அமைப்பதற்கும், அவர்களின் முகாம்களுக்கு பாதுகாப்புத் தடுப்புகள் ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் மேலும் கவனம் செலுத்துவதற்காக இந்த ஆணையத்தை அமைத்திருக்கிறார் தலைவர்.

பன்முகச் சிந்தனையோடும், தொலைநோக்குப் பார்வையோடும் தமிழீழத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டதையும், சிதைக்கப்பட்டதையும் ஆசிரியர் வருத்தத்துடன், வேதனயுடன் குறிப்பிடுகிறார். “அந்த உருவாக்கங்கள் பல ஆண்டுகால கனவுகளோடும் கற்பனைகளோடும் உழைப்புகளோடும் பல்வேறு சிரமங்களுக்கிடையில் உருவாக்கப்பட்டவை” (பக்.237). ஈழப் போரில் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று, தலைவர் பிரபாகரன் தமிழீழத்தின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றிருந்தால், மேற்குறிப்பிட்ட அமைப்புக்களோடும், அணுகுமுறைகளோடும் தமிழீழம் ஓர் அருமையான ஆட்சியைக் கண்டிருக்குமே என்கிற ஆதங்கம் மனதில் எழுகிறது.

தலைவர் பிரபாகரன் ஓர் அரக்கர், வன்முறையாளர், கொலைவெறியர் என்றெல்லாம் சில சக்திகள் ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்பினாலும், ஓவியர் புகழேந்தியின் கண்களின் வழியாக, பயணங்களின், எழுத்துக்களின் வழியாக தமிழினத்தின் மாபெரும் தலைவனைப் பார்க்கும்போது வேறொருத் தோற்றமே உருவாகிறது.

“இலங்கை ஒரு அழகானத்தீவு. எங்கள் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ளலாம். அவ்வாறு பேசித் தீர்த்துக்கொண்டால் (தனித்தனியாக பிரித்துக் கொண்டால்) இரண்டு இனமும் (தமிழ் மற்றும் சிங்களம்) நிம்மதியாக வாழ்வதோடு, இரண்டு இன மக்களும் கெதியாக முன்னேறலாம். இது புரிந்தும் இதுவரை ஆண்ட எந்த ஆட்சியாளர்களும் முயற்சிக்காமல், இனவாத அரசியலுக்கு ஆட்பட்டு, தமிழினத்தை அடக்குவதிலும், ஒடுக்குவதிலுமே கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் இப்போது தமிழினத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டியிருக்கிறது” (பக்.122) என்று தெளிவாகப் பேசியிருக்கிறார் தலைவர் பிரபாகரன்.

தங்கள் நாட்டுப் பிரச்சினைகள், அவற்றின் பின்னணி பற்றி தலைவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

“ஒருவர் மீது மற்றொருவர் ஆதிக்கம் செலுத்தும் போதுதான், பிரச்சினையே உருவாகிறது. ஒருவருடைய உரிமையை மதித்தால் சிக்கலே இருக்காது. சிங்களம், தமிழனுக்குரிய உரிமையை மறுத்த போதுதான் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தமிழர்கள் ஆளானார்கள். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு போல், இங்கே சிங்களத் திணிப்பு இருந்தது. தமிழ் மாணவர்களுக்கு எதிராக தரப்படுத்துதல் கொண்டு வந்தார்கள். சிங்களவருக்கு ஒரு நீதி, தமிழருக்கு ஒரு நீதி என்று செயல்பட்டதன் விளைவாகத்தான் தமிழர்கள் அகிம்சை வழியில் தந்தை செல்வா தலைமையில் போராடினார்கள். அந்த அகிம்சை வழி போராட்டங்கள் மீதும் காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்தது. அதன் பிறகுதான் இனி ஆயுத வழி என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டோம்” (பக்.123).

தலைவரின் இந்தக் கூற்றுக்கள் இன்றைய தமிழகத்தின் சமூக-பொருளாதார-அரசியல் நிலைமை பற்றி ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. கவலைப்பட வைக்கின்றன. தற்காலத் தமிழகம், தமிழீழம், தலைமைத்துவம், தனித்துவ ஆட்சிமுறை பற்றியெல்லாம் சிந்திப்பவர்கள், செயல்படுகிறவர்கள், கனவு காண்கிறவர்கள் அனைவரும் உறுதியாக படித்து பயன்பெற வேண்டிய அருமையான நூல் இது.

முகப்பு
Selva Zug 2