புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேட முடிவு? களம் இறங்குகிறது அமெரிக்க நிறுவனம்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச். 370), கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றபோது, நடுவானில் திடீரென மாயமானது.
missingflight
இந்த விமானத்தை தேடும் பணியை மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் நடத்தின. இந்தியப் பெருங்கடலில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு தேடியும், மாயமான அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்காரணமாக அந்த விமானத்தைத் தேடும் பணி கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி நிறுத்தப்பட்டது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகி விட்டதாக நம்பப்படுகிறது. இவர்களில் சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 5 இந்தியர்களும் அடங்குவர்.

ஆனால் அவர்களது குடும்பத்தினர், மாயமான விமானத்தை தேடும் பணியை தனியார்வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் கடற்படுகை ஆய்வு நிறுவனமான ஓசியன் இன்பினிட்டி, மாயமான மலேசிய விமானத்தை தேட முன்வந்துள்ளது.

இதை மலேசிய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனம் குறிப்பிடுகையில், “ இந்த வாய்ப்பின் விதிமுறைகள் ரகசியமானவை. ஆனால் நாங்கள் முன்வந்திருப்பதை உறுதிபட தெரிவிக்கிறோம். பொருளாதார இடர்களை பொருட்படுத்தாமல், இந்தப் பணியை மேற்கொள்ள முன் வந்துள்ளோம். நாங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்துகிறோம். எங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறோம்” என கூறி உள்ளது.

இது தொடர்பாக மலேசியா விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2