வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

ஆகஸ்ட் 11 2006 ; சிக்கித்தவித்த யாழ் குடா!

25349-11_8_118200730730123_11நல்லூரில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த காலம் அன்று.

மாலை 6.30 மணி இருக்கும், நீண்ட நாட்களுக்கு பின்னர் செல் அடிக்கும் சத்தமும், அது கூவிக்கொண்டு போகும் சத்தமும் , வீழ்ந்து வெடிக்கும் சத்தமும் கேட்க தொடங்கின.

நீண்ட நாட்களுக்கு பின்னர் செல் சத்தம் கேட்டது. அப்போது நாங்கள் நினைக்கவில்லை சண்டை தொடங்கி இருக்கும் என்று.

நல்லூரில் நின்றவர்கள் யாரும் பெரியளவில் பதட்டமும் அடையவில்லை. எல்லோரும் வழமை போன்று திருவிழா முடிந்து கடைத்தெருக்கள் சுற்றி பார்த்துவிட்டே சென்றனர்.

நாமும் கடைதெருக்கள் சுற்றி களைத்து போய் கோயில் வீதியில் இருந்து இளைப்பாறி வீட்ட போக இரவு 10 மணி இருக்கும். இரவு முழுவது ஒரே செல் சத்தம்.

அதிகாலை வழமை போன்று 5.30 மணிக்கு மீண்டும் நல்லூருக்கு போனோம் வீதிகளில் பெரியளவில் ஆட்களை காணவில்லை

செல் சத்தமோ கேட்ட வண்ணமே இருந்தது.

ஆலய வீதியும் வெறிசோடி காணப்பட்டது. பிரதட்டை அடிப்பவர்களில் பலரை காணவில்லை. மிக மிக குறைவானவர்களே பிரதட்டை அடித்தார்கள்.

நாம் வந்து கோயிலுக்கு சென்று உள் வீதி சுற்றி கும்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் உள் வீதியில் இருந்து விட்டு வெளியே வந்தால் வெளியில் பெரும் பரபரப்பு. என்ன என்று விசாரித்தால் ‘பீல்ட் பைக்’காரர்கள் வந்து ‘ஊரடங்கு சட்டம் போட்டிருக்கு எல்லோரும் வீட்ட போங்கள்’ என மிரட்டி விட்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

அவர்களின் மிரட்டலை அடுத்து அனைவரும் கோயில் வீதியில் இருந்து கலைந்து சென்று இருந்தனர். நாமும் பயத்துடன் வீடுக்கு வந்து சேர்ந்துட்டோம்.

ஊரிலே நீண்ட நாட்களுக்கு பிறகு யாழ்.எப்எம் இணை பலரும் கேட்க தொடங்கினார்கள்.

யாழ்.குடாநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

அன்றைய தினம் ஊரடங்கு அதனை தொடர்ந்து வரும் நாட்கள் எமக்கு நரகமாக மாற போவதை அறியாமல் அன்றைய தினம் கழிந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது, பலரின் வீட்டு கிணறுகளுக்கு கப்பிகள் பூட்டப்பட்டன. குழாய் கிணறுகளுக்கு குழாய் பம் பூட்டப்பட்டன.

கைதொலைபேசி அலைவரிசைகள் துண்டிக்கப்பட்டன, மீண்டும் தொலை பேசி நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது வியாபாரிகள் பொருட்களின் விலைகளை மூன்று மடங்கினை விடவும் அதிகரித்த விலைக்கு விற்றனர்.
அதுவரை காலமும் யாருமே திரும்பி பார்க்காத சங்க கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காவல் நின்றனர், பெற்றோல் செட்களில் மக்கள் வரிசையில் நின்றனர்.

ஊரடங்கு தளர்த்தப்படும் ஒரு மணி நேரத்தில் பலர் தமது தேவைகளை பூர்த்தி செய்ய வெளியில் சென்று வந்தனர்.

சிலர் சிலரை வேட்டை யாட தொடங்கினார். மாறி மாறி வேண்டப்படாதவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஒரு மணி நேர இடை வெளியில் வேட்டையாடப்பட்டவர்கள் மறுநாள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஒரு மணிநேரத்தில் சடலமாக மீட்கப்பட்டனர்.

யாழில் இருந்து தப்பிசெல்ல ஒரு கூட்டம் முனைந்தது. அதற்காக கப்பலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் காத்திருந்து இடம் பிடித்து கொடுப்பதையே சிலர் தொழிலாகவும் செய்தனர்.

பின்னர் வந்த நாட்களில் தப்பி செல்ல முனைந்தவர்களுக்கு கிளியரன்ஸ் நடைமுறைக்கு வந்தது. கிளியரன்ஸ் பெற என ஊரெழுவுக்கும் அச்செழுவுக்கும் சென்று பலர் காணாமல் போனார்கள்.

மீண்டும் ரவுண்டப் , தலையாட்டி, பவல் மற்றும் வெள்ளை வான் என்பன அறிமுகம் ஆகின இவ்வாறாக பல ஆகஸ்ட் 11ம் திகதிக்கு பின்னர் நடக்கும் என எதிர்பார்க்காமல் ஆகஸ்ட் 11 கழிந்து போனது.

முகப்பு
Selva Zug 2