புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

இந்த யுகத்தின் தன்னிகரில்லா தளபதி பிரிகேடியர் பால்ராஜ்!

பிரிகேடியர் பால்ராஜ் என்றும் வீர வேங்கை காற்றோடு காற்றாகி வருடங்கள் ஓடிவிட்டன. நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமைமிக்கது என்று போற்றப்படும் உலகு அந்த வீரனின் நினைவுகளை தன் உடலில் பச்சை குத்திக்கொண்டு மாற்றமின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.palraj (22)

அத்தோடு மனிதர்கள் வடித்த கண்ணீர், கவலை, கவிதை, வீர அஞ்சலிகள் என்று பெற வேண்டிய மரியாதைகள் யாவும் பெற்று அந்த வீரன் போகாமல் போனதையும் நாம் பார்த்துவிட்டோம். இப்போது மனதில் மலையாக உயர்வு பெற்று நிற்கும் வீரன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவலைகள் மனத்திரையில் ஓடை நீராய் சலசலத்து ஓடுகிறது.palraj (21)

ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனின் மரணமும் வேறு வேறானது. அவனுடைய வாழ்க்கையை ஆழ்ந்த அறிவோடு, சரியான கோணத்தில் எடுத்துரைப்பதுதான் விடுதலைப் போராட்டத்திற்கு வீறு கொடுக்கும் செயலாகும். ஏனென்றால் விடுதலை என்பது புத்துணர்ச்சி கொண்டது, அதன் ஒவ்வொரு கணமும் புதுமையானது. அதை புதிய கோணத்தில் எடுத்துரைக்க வேண்டும், தினமும் தினமும் அந்தப் புதுமை நம்மிடையே பூத்துக் குலுங்க வேண்டும்.palraj (20)

எந்தப் போராட்டமாக இருந்தாலும் அப்போராட்டம்பற்றிய உரைகளும், கவிதைகளும் நீர்த்துப் போய் ஒரேமாதிரியாக இருந்தால் அவை விடுதலைப் போராளியின் சிறப்பையும் அப்படைப்புக்கள் போலவே நீர்த்துப் போக வைத்துவிடும் என்று ஐரோப்பிய போராட்ட வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவைபற்றி இனியும் நாம் சிந்திக்காவிட்டால் நமது வீரம் செறிந்த வாழ்வை உலகத்தரமான இலக்கியமாக்க முடியாது என்பதை முன்னரே பலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.palraj (19)

பிரிகேடியர் பால்ராஜ் சிறந்த போர்முனைத் தளபதி, அவனுடைய தலைமையில் படைகள் வந்தால் எதிரிகளே நடுங்குவார்கள். கடினமான போர்க்களங்களை எல்லாம் குறைந்தளவு படைகளுடன் சென்று வெற்றிவாகை சூடியவர் அவர் என்பதை அதிகமாக எல்லோரும் ஒரே குரலில் கூறிவிட்டார்கள். ஆனால் பால்ராஜின் சாதனையை இலங்கை வரலாற்றோடு யாரும் ஒப்பிட்டு அடையாளம் காணவில்லைpalraj (18)

இலங்கைத் தீவின் வரலாறு என்பது மன்னர்களுடையது என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் கூட, கூர்ந்து கவனித்துப் பார்த்தால் கடந்த பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றை போரினாலேயே நகர்த்தியிருப்பவர்கள் இலங்கைத் தீவில் ஆயுதமேந்திப் போராடிய தளபதிகளே. மேலும் சிங்கள மன்னர்களுடைய பெரிய வெற்றிகளுக்கு பின்னணியில் நின்றவர்கள் தமிழ்த்தளபதிகளே என்பது பலருக்குத் தெரியாது.palraj (17)

சிங்கள அரசன் முதலாம் பராக்கிரமபாகு பர்மாவிற்கு படையனுப்பி அந்நாட்டு அரசன் அலவுங்குசித்தை வெற்றி கொண்டபோது அந்தப் படை நடாத்தலுக்கு தலைமை தாங்கியவர்கள் தமிழ் தளபதிகளே. மறுபுறம் அதே பராக்கிரமபாகு தமிழகத்திற்கு படையெடுத்தபோது தமிழ் தளபதிகள் அதற்கு இணங்க மறுத்ததையும் தமிழக மக்கள் அறிந்திருக்க நியாயமில்லை.palraj (16)

இவை மட்டுமல்லாமல் இலங்கையில் சிங்கள அரசர்கள் பெற்ற எத்தனையோ பெரிய போர்களுக்கு தமிழ் தளபதிகள் தலைமை தாங்கியிருக்கிறார்கள். ஆனால் எந்தவொரு தளபதியும் தமிழருக்கு துரோகம் செய்து சிங்களவருக்கு சேவையாற்றிய துரோகச் செயலைச் செய்ததாக பண்டைய வரலாறுகளில் கூறப்படவில்லை. இது மிக முக்கியமான விடயமாகும்.palraj (15)

இலங்கையின் கடைசி அரசனான சிறீவிக்கிரமராஜசிங்கள் ஒரு தமிழனே. இவன் சிங்களத் தளபதி பிலிமத்தலாவையின் குழந்தையை துண்டு துண்டாக வெட்டி உரலில் போட்டு இடித்த கதை அனைவரும் அறிந்ததே.palraj (14)

அதேபோல கண்டியில் நடைபெற்ற போர்களில் தளபதிகளின் உடல்களை தோலுரித்து, இரத்தம் சீறிப்பாய வீதி வீதிவீதியாக கொண்டு சென்றவர்கள் ஆங்கிலேயர். தளபதிகளை வெல்வதே வெற்றிக்கு வழி கோலும் என்ற கதையை சிங்களப் பாணியிலேயே ஆங்கிலேயரும் கைக்கொண்டே கண்டியை வென்றனர்.palraj (14)

சிங்கள மக்கள் தமது வரலாற்றில் மன்னர்களை விட தளபதிகளுக்கே அதிக முக்கியம் கொடுக்கும் இயல்புடையவர் என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள். தமிழ் தளபதிகள் சிங்களவரை வென்று அனுராதபுரத்தில் இருந்து விரட்டியடித்து தம்பேதெனிய, குருநாகலை, தம்புள்ளை போன்ற இடங்களுக்கு பின்வாங்கச் செய்தபோது அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள் தமிழ் மன்னர்கள் அல்ல தமிழ் தளபதிகளே.palraj (13)

அதனால்தான் சிங்கள அரசியல் தலைவர்களை விட, சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் தளபதிகள் முக்கியமான பாத்திரங்களாக இருந்து வருகிறார்கள். இது தற்செயலானதல்ல இதுதான் சிங்கள வரலாற்று மனம். சரத்பொன்சேகா, காலஞ்சென்ற கொப்பேகடுவ போன்றவர்கள் சிங்களத் தளபதிகளாக இருந்தாலும், அவர்கள் பெறாத புகழை எல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் பெற்றிருப்பவர்கள் விடுதலைப் புலிகளின் தளபதிகளே.palraj (12)

இதுபற்றி நம்மிடையே யாரும் பேசுவதோ எழுதுவதோ இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்ற கோணத்தில் நம்மிடம் பார்வை இல்லை என்ற உண்மைக்கு இது ஓர் உதாரணம்.

நமது தமிழ் தளபதிகளின் வீரமென்ன என்பதற்கான உரைகல்லும் நமது மடியிலேயே இருப்பது நமக்கு மகிழ்வுதரும் என்பதும் உண்மையே. இருப்பினும் எதிரிகள் என்ன கூறுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்ப்பதும் முக்கியமான விடயமே.

இலங்கைத் தீவில் கடந்த காலங்களில் தமிழ் தளபதிகள் என்ன செய்தார்கள், அவர்களுடைய போர்த்தந்திரம் எப்படியானது என்பதை புத்தபிக்குகள் இன்றுவரை மறக்கவில்லை. அவர்களுடைய மதப் பிரச்சாரம் புத்தர் சொன்ன ஜாதக் கதைகளைவிட கூடுதல் பட்சம் தமிழரின் போர்கள் பற்றியதாகவே உள்ளது. பாஞ்சாலைகளில் அவர்கள் நடாத்தும் போதனைகளின் ஜீவ நாடியே தமிழ் தளபதிகளால் தமது இனத்திற்கு உருவாகிய ஆபத்து குறித்ததாகவே இருந்து வருகிறது.palraj (11)

சிங்களப் பகுதிகளில் ஒவ்வொரு இடத்திலும் புத்தபிக்குகளின் போதனைக்காக கூடாரங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கூடாரங்களில் இருந்து நடாத்தப்படும் பிரச்சாரங்கள் போல உலகின் வேறெந்த மதங்களுமே பிரச்சாரம் செய்ய முடியாது.

யாழ்ப்பாண இராட்சியம் எழுச்சி பெற்றிருந்தபோது குருநாகல் தம்புள்ளைவரை சிங்கள மக்களை விரட்டியடித்த தமிழர்களுக்கு ஒரு நாடு வந்தால் நாம் காலிக்கு சென்று கடலில் விழுந்து சாகவேண்டியதுதான் என்று பிக்குகள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அந்தக் காலத்து தமிழ் தளபதிகள் பாணந்துறைவரை சென்று சிங்களவரிடமிருந்து வரி வசூலித்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் மறக்கவில்லை.

இத்தகைய வரலாற்றை மறக்காத பிரச்சாரங்களால் அஞ்சிக்கிடந்த சிங்களப் பாமர மக்களுக்கு விடுதலைப்புலிகளின் தளபதிகள் பெரும் அச்சமூட்டும் வீரர்களாகவே இருந்து வந்தது வியப்பான ஒன்றல்ல. சிங்களக் கிராமங்களின் சாதாரண தேநீர்க்கடைகளில் நின்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் விடுதலைப்புலிகளின் அத்தனை தளபதிகளின் பெயர்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் விரல் நுனியில் பாடம் பண்ணி வைத்திருப்பதைக் காண்பீர்கள்.

தமிழ் மக்கள் ஒரு சரத்பொன்சேகாவைப் பார்ப்பதைப் போல சிங்கள மக்கள் தமிழ் தளபதிகளை பார்க்கவில்லை என்பது முக்கிய விடயமாகும். பிரபாகரனைப் போல ஒரு தலைவர், அவருடைய தளபதிகள் போல தளபதிகள் தமக்கும் வாய்க்கவில்லையே என்றும், அப்படி வாய்த்திருந்தால் இந்தநாடு எவ்வளவோ பலம் பெற்றிருக்க முடியுமே என்ற ஆதங்கம் சாதாரண சிங்களக் குடிமக்களுக்கு இருக்கிறது.palraj (10)

சமாதான காலத்தில் சாதாரண சிங்களக் கிராமங்களுக்கு சென்று போராட்டம் பற்றி சிங்கள மக்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்தபோது அவர்கள் கூறிய பல கருத்துக்கள் ஆச்சரியம் தந்தன. பிரிகேடியர் பால்ராஜ் நடாத்திய போர்க்களங்கள் அவருடைய திறமைகள் யாவற்றையும் அவர்கள் ஆச்சரியத்துடன் ஆங்காங்கு தமக்குள் பேசி வருவதைக் காண முடிந்தது. பால்ராஜ்ஜின் படைகள் வந்தால் சிங்கள நாடே பறிபோய்விடுமென்ற அளவுக்கு அவருடைய வீரத்தின் மீது அவர்களுக்கு பிரமிப்பு இருந்தது. இதுதான் பால்ராஜ் எதிரிகளிடமிருந்து பெற்ற வீரத்தின் முத்திரையாகும்.

தம்புள்ளவில் ஒரு யானைப்பாகனுடன் பேசிப் பார்த்தேன். அவன் உலகம் அறியாத சாதாரண குடிமகன் ஆனால் பால்ராஜ் பற்றி அவன் நன்கு தெரிந்து வைத்திருந்தான். அவருடைய சிறப்புக்களை சொன்னால் அருகில் நிற்கும் சிங்களப் போலீஸ்காரனுக்கு பிடிக்காது என்று கண்களை அசைத்தபடியே பால்ராஜின் சிறப்புக்களை அந்த யானைப்பாகன் கூறினான். பால்ராஜ் அரசாங்கம் போல வசதிகள் படைத்த படையணியைக் கொண்டவரல்ல. வசதிகள் இல்லாத நிலையில் கூட இவ்வளவு சிறப்பாக போரை நடாத்தினார் என்பது நினைக்க முடியாத சாதனை என்றும் தெரிவித்தான்.palraj (9)

எல்லாளன் படைத்தளபதியாக இருந்து இலங்கையை 44 வருடங்கள் ஆட்சி செய்தபோது புத்த பிக்குகளுக்கு பெரும் உதவிகள் செய்தான் என்று மகாவிகாரைப் பிக்குகள் எழுதியுள்ளார்கள். போரில் எல்லாளன் மடிந்தபோது அவனுக்காக சமாதி கட்டி, அந்த வழியால் போவோர் வருவோர் அனைவரும் அதற்கு மரியாதை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டவன் துட்டகைமுனு. இன்றும் எல்லாளன் சமாதி முன்னால் வாத்தியங்கள் இசைத்தபடி போக சிங்கள மக்களுக்கு அனுமதி கிடையாது.

அன்றய எல்லாளன் போலவே சிங்களப் பொது மக்களாலும் பாராட்டப்பட்ட தளபதிதான் பிரிகேடியர் பால்ராஜ். சிங்களப் படைகள் பால்ராஜ் வருகிறார் என்றதுமே பயப்பட்டார்கள் என்றால் முழு சிங்கள இராணுவக் கட்டமைவுக்குள்ளும் அவருடைய திறமையின் ஊடுருவல் எப்படி பாய்ந்திருக்கிறது என்பது இன்னொரு பக்கப் பார்வையாக இருக்கிறது.

பால்ரராஜ் என்ற வீரனின் வரலாற்றை நாம் தமிழீழ விடுதலைப் போராட்ட எல்லைக்குள் மட்டுமே பார்த்து மகிழக்கூடாது. தென்னாசியப் பிராந்தியத்திலேயே அவர் பெரும் தளபதி என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். உலகத்தின் பெரும் போர்க்களங்களுக்கெல்லாம் அவரை அனுப்பியிருந்தால் எத்தனையோ போர்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவு செய்திருப்பார்.palraj (8)

இத்தனை திறமைகள் பால்ராஜிற்கு எங்கிருந்து வந்தது என்பது முக்கிய கேள்வி. எல்லோருக்கும் எல்லாச் சிறப்பும் வந்து வாய்க்காது. பால்ராஜிற்கு வாய்த்தது போர்தான். கல்கியின் கதையில் உடம்பில் 64 காயங்கள் பெற்ற பெரிய பழுவேட்டையர் போல பால்ராஜ் பெற்ற பதக்கங்கள் அவர் தாங்கிய விழுப்புண்கள்தான்.

ஆயிரம் வருடங்களுக்கு ஒரு தடவை மகாகவி தோன்றுவான் என்பார்கள். அதுபோல ஆசியாக் கண்டத்தில் தோன்றிய பெரும் போர்வாள் பிரிகேடியர் பால்ராஜ் என்பது மறுக்க முடியாத உண்மை.

விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் .

தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை.

புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 9ம் ஆண்டில் இத்தாவில்  சமர் பற்றிய சில விடயங்களை நினைவு மீட்பது பொருத்தமானது.

ஓயாத அலைகள் எனப் பெயரிட்டு முன்னெடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலின் கட்டம் ஒன்று, இரண்டு நடவடிக்கைகளில் வன்னிப்பகுதியின்; பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை யாழ்குடாநாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது.palraj (7)

ஏறத்தாழ குடாநாட்டின் மொத்த சனத்தொகையின் பத்திலொரு பங்களவிலான இராணுவம், பல இராணுவத்தளங்கள், கட்டம் கட்டமான பாதுகாப்பு வேலிகள், கடற்படைத்தளங்கள், விமானப்படைத்தளம் என  முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாகவே யாழ்குடாநாடு இருந்தது.

குடாநாட்டின் பாதுகாப்பு அரணாக, இரும்புக்கோட்டையாக இருந்தது ஆனையிறவுத்தளம். ஏனைய மாவட்டங்களுடன் யாழ் மாவட்டத்தை இணைத்து நின்ற ஒரே தரைவழிப்பாதையான ஏ-9 வீதியை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த ஆனையிறவுத் தளம் வன்னி பெருநிலப்பரப்பின் உப்பளப் பகுதியையும் உள்ளடக்கியிருந்தது.

ஆனையிறவின் பௌதீக அமைப்பு, நேரடி முற்றுகைத் தாக்குதலுக்கு முற்றிலும் சாதகமற்ற தன்மையைக் கொண்டது. பரந்த வெட்டை, கடல் நீரேரி, சதுப்பு நிலம் என சிங்களப்படைக்கு வாய்ப்பான களமுனையாக அமைந்திருந்தது. 1991ம் ஆண்டு ஆ.க.வெ எனப் பெயரிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்தமைக்கு பிரதான காரணம் ஆனையிறவின் பௌதீக அமைப்புத்தான்.

யாழ்குடாநாட்டுக்கான தாக்குதலின் காத்திரத்தன்மை ஆனையிறவுத் தளத்தின் வீழச்சியில்தான் தங்கியிருந்தது என்பதால், அதன் பௌதீக அமைப்பில் உள்ள சிக்கல்களை உணர்ந்த தலைவர் ஆனையிறவுத் தளத்தின் மீது நேரடியாகத் தாக்குதலை தொடுக்காமல், தனிமைப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்பதனடிப்படையில் மூலோபாயங்களை வகுத்தார்.palraj (6)

ஏனெனில்;, பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொண்ட பலமான தளமாக இருந்தாலும், அதற்கான விநியோகம் சாவகச்சேரி, பலாலி பிரதான தளங்களில்தான் தங்கியிருந்தது. எனவே அந்த உயிர்நாடியை இறுக்கி, இராணுவத்தின் விநியோகத்தை தடுப்பதுதான் தாக்குதலுக்கான பிரதான தந்திரோபாயமாகக் கண்டறிந்தார் தலைவர்.

இந்தச் சூழலில், விநியோகத்தை தடுத்தி நிறுத்தி சண்டையிடக்கூடிய பொருத்தமான இடம் எது என்பதை ஆய்வு செய்த தலைவரும் தளபதியும் ஆரம்பத்தில் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடையில் உள்ள பகுதியில் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டனர்.

இதற்கான சாத்தியப்பாடுகளை மதிப்பிடுவதற்கான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் வேவு அணிகளின் தகவல்கள் திட்டத்தின் சாத்தியமின்மையை வெளிப்படுத்தியதால் அந்த இடம் கைவிடப்பட்டது.

எந்தவொரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கவே செய்யும். அதைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில்தான் வெற்றியின் ரகசியம் தங்கியிருக்கின்றது என்ற கொள்கையுடைய தலைவர், தளபதியுடன் அதற்கான அடுத்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்தார்.

அதன்படி பளைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இருந்த பிரதேசம் பொருத்தமாக இருந்ததால், விநியோகத்தை தடுக்கும் களமாக இத்தாவில் தெரிவாகியது. அதற்கு ஏற்றவகையில், வடமராட்சி கிழக்கின் குடாரப்பு – மாமுனைக் கரையோரம் தாக்குலுக்கான தரையிறக்கத்தைச் செய்வதற்குப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.palraj (5)

எமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 5 கிலோ மீற்றர் கடலால் நகர்ந்து இரண்டு இராணுவ முகாம்களிற்கு நடுவில் இருந்த குடாரப்பு மாமுனையில் தரையிறங்கி, வடமராட்சி கிழக்கையும் தென்மராட்சியையும் பிரித்து நிற்கும் சதுப்புக் கடல் நீரேரியைக் கடந்து பத்துக் கிலோ மீற்றர் தூரம் நகர்ந்து கண்டி வீதியை மறித்து நிற்கவேண்டும்.

அங்கு ஒரு கிலோ மீற்றர் நீளம் அகலத்தைக் கொண்ட பெட்டியமைத்து விநியோகத்தை தடுப்பதன் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.

மிகவும் சவாலானதும் ஆபத்தானதுமான இக்களத்தை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்புக் கொடுத்த தலைவர், ‘ஆனையிறவிற்கான சண்டையை நீதான் நடத்தப்போறாய், நீ பெரிய வீரன், எத்தனையோ சோதனைகளை உனக்கு நான் தந்திருக்கிறன், நான் உனக்கு வைக்கிற முக்கியமான சோதனையிது, உன்னுடன் 1200 பேரையும் குடாரப்பில் சூசை தரையிறக்கி விடுவான்;. சிக்கலென்றால் உங்களை உடன காப்பாற்றி வர ஏலாது,

ஆனால் நீ ஏ-09 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவிற்கு வரும் விநியோகத்தை நிறுத்தவேணும். அதைச் செய்தால் ஆனையிறவு தானா வீழும்;, நான் குடாரப்பில தரையிறக்கி விடுவன், நீ ஏ-09 றோட்டாலதான் வரவேண்டும்’ எனக்கூறி தனது திட்டத்தை விளக்கினார்.

குடாரப்பு – இத்தாவில் பகுதியின் தரைத்தோற்றமானது சண்டையிடுவதற்கு சாதகமான இடமாக கருதமுடியாது. தரையிறங்கும் குடாரப்பு மணற்பரப்புக்களுடன் பனை, சிறுபற்றைக் காடுகளைக் கொண்ட பிரதேசம். குடாரப்பிலிருந்து இத்தாவிலுக்கு இடைப்பட்ட பகுதி சதுப்பு நிலத்துடன் கூடிய கண்டல் மரங்கள் வளர்ந்திருக்கும் நீரேரியைக் கொண்ட பிரதேசம்.

இந்த நீரேரியைத் தாண்டித்தான் இத்தாவிலுக்குள் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் சகிதம் நகரவேண்டும். அது மட்டுமன்றி, காயம், வீரமரணங்களை அப்புறப்படுத்தல் உட்பட அனைத்து விநியோகங்களும் இந்த நீரேரிக்குள்ளால்த்தான் செய்யமுடியும். அப்பகுதிக்கான விநியோகங்களோ,  காயப்பட்டவர்களை வெளியில் எடுப்பதோ, படையணிகளை நகர்த்துவதோ உடனடிச் சாத்தியமில்லாத தரையமைப்பு.

அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தாளையடி முகாமைத் தகர்த்து, விநியோகத்திற்கான தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் வரை அணிகள் கொண்டு செல்லும் வெடிபொருட்கள், உணவு போன்றவற்றை வைத்தே தாக்குதலில் ஈடுபடவேண்டியிருந்தது.

இப்படியான சாதகமில்லாத தரையமைப்பு, சூழலை சாத்தியமான களமாக மாற்றி வெல்லவேண்டும் என்பது மட்டுமல்ல குடாரப்பில் தரையிறங்கி, கவசவாகனங்கள், நவீன விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அதிவல்லமை பொருந்திய படைகள், சிறப்புப்படைகளின் நடுவே, அவர்களின் பிடரிக்குப் பின்னால் நின்று மோதுவது என்பது கற்பனை செய்து பார்க்கமுடியாத செயல்.palraj (4)

சிறிலங்கா அரசபடையின் பலத்துடனும் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளுடன் எதிர்கொள்வது என்பது சாதாரணமானதல்ல என்று கருதினாலும் ஆன்மபலம்மிக்க, போரிடும் தன்மைகொண்ட வீரப்பரம்பரையின் வித்துக்களை வைத்து உறுதியாக சண்டை பிடிக்கலாம், வெல்லலாம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் புலிகள்.

மேலும் ‘இந்த ஊடறுப்பு மறிப்புத் தாக்குதலைச் செய்வதற்கு தரப்பட்ட போராளிகளை வைத்து உனக்குத் தந்த பொறுப்பை நிறைவேற்றவேண்டும். மேலதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே’ எனவும் தலைவர் கூறியிருந்தார்.

எனவே போராளிகளைப் பாதுகாத்து சண்டையிட்டு ஆனையிறவின் வீழ்ச்சிவரை விநியோகத்தை தடுத்து நிற்கவேண்டும் என்பதில் உள்ள கடினம் தளபதிக்குத் தெரியும்.

தாக்குதலுக்கான பயிற்சியின்போது தனது போர் அனுபவங்கள், சிங்களப்படைகளின் பலவீனங்கள், கிளிநொச்சியில் ஊடறுத்து நின்றபோது ஏற்பட்ட அனுபவங்கள், அங்கு இராணுவத்தை எதிர்கொண்ட முறைகள் போன்றவற்றை பகிர்ந்து போராளிகளின் மனவுறுதியையும், மனோபலத்தையும் மேலும் மேம்படுத்தினார்.palraj (4)

ஆனையிறவின் வெற்றி கைகூடுவதின் பிரதான தாக்குதல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து தலைவரின் எண்ணத்தை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்தார்.

தாக்குதலுக்கான திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தியதுடன் சிங்கள இராணுவம் எப்படிப்பட்ட உத்திகளைப் பயன்படுத்துவான், அப்பிரதேசத்தில் எதிரி எப்படிப்பட்ட நகர்வுகளைச் செய்யமுடியும், குறிப்பாக ‘ராங்கிகளின் உதவியுடன் எதிரி நகரும்போது ராங்கியைப்பற்றி கவலைப்படாமல், அதை விட்டிட்டு வரும்படையினரைக் கொல்லுங்கள், ராங்கியால தனிய வந்து ஒன்றும் செய்ய ஏலாது.

அது ஒரு குருட்டுச்சாமான், கிட்டப்போனால் என்ன நடக்கென்று ராங்கியில் உள்ளவர்களுக்குத் தெரியாது, ராங்கியை விட்டிட்டு பின்னால ஏறி குண்டை கழற்றிப்போட்டு ராங்கியை அழிக்கலாம்’ என நம்பிக்கையுடன் நகைச்சுவையாக கதைக்கும் அவரது பாணி எந்த புதிய போராளியையும் சிலிர்த்தெழச்செய்யும். தன்னம்பிக்கையுடன் உத்வேகமாகப் போராடச்செய்யும் தன்மை கொண்டது.palraj (3)

போராளிகளுக்கு சண்டையின் தன்மைபற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறைபற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார்ப்படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது அவரது நம்பிக்கை.

அது இத்தாக்குதலுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அணிகளை தயார்ப்படுத்துவதற்காக உழைத்தார். பயிற்சியின்போது ஒவ்வொரு சிறிய விடயங்களையும் உன்னிப்பாகப் பார்த்து, உலக வரலாறு ஒருகணம் ஸ்தம்பித்துப் பார்க்கப்போகின்ற யுத்தத்திற்காக தலைவரின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு விடயமாக செருக்கிச் செருக்கித் தயார்ப்படுத்தினார்.

26.03.2000 அன்று, இருட்டுப் பரவத் தொடங்கிய நேரம் ஊடறுப்புத் தாக்குதல் படையணிகள் சுண்டிக்குளக் கடற்கரையில் தயாராகிக்கொண்டிருந்தன. பல களமுனை கட்டளைத் தளபதிகளும் வழியனுப்புவதற்காக ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.

எல்லோரது முகத்திலும் ஏதோ ஒரு பரபரப்பு. தரையிறக்குவதற்கு தயாராகிப் புறப்படுவதற்குமுன்  போராளிகளுடன் கதைத்த தளபதி பால்ராஜ் அவர்கள் ‘எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப்போகின்றோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்கு சொல்லிவைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்கு காட்டப் போகின்றோம்’ என்று கூறினார்.

தளபதியின் ஆக்ரோசமான வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு போராளிகள் மிகுந்த சந்தேசத்துடனும் தெம்புடனும் படகுகளில் ஏறி தாக்குதலுக்கு தயாரானார்கள். இத்தாக்குதலில் பங்குகொண்ட தளபதிகளான துர்க்கா, விதுஷா, ராஜசிங்கம் உட்பல பல தளபதிகளும் தங்களது அணிகளுடன் புறப்படத் தயாராகினர்.

சமநேரத்தில், ஊடறுத்து நிற்கும் தாக்குதல் அணிகளுக்கான தரைவழித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை, முக்கியமாக ஊடறுப்புத் தாக்குதலின் தொடர் இருப்பை தீர்மானிக்கும் பிரதான களமுனையைப்  பொறுப்பெடுத்த தளபதி தீபன் தலைமையிலான அணி தாளையடி இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கு தயாராகினர்.

ஏனெனில் தாளையடியை ஊடறுத்து கரையோரப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாலே ஊடறுப்பு அணிக்கான விநியோகங்களை  செய்யலாம் என்பது இந்நடவடிக்கையின் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.

ஆனையிறவு வெற்றியைத் தீர்மானிக்கும் வரலாற்றுச் சமருக்கான அணிகள் தரையிறங்க வேண்டிய இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்த வேவு அணிகள் குடாரப்புக் கரையில் முன்மறிப்புப் போட்டுத் தயாராக இருந்தன. தாக்குதல் அணிகள் சிறிய படகுகளில் தரையிறங்கும் குடாரப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

படகுகளில் அணிகள்; நகர்வதை தாளையடி முகாமிலிருந்த இராணுவம் ராடரில் அவதானித்து கடற்படைக்குத் தகவல் வழங்கியது. தரையிறக்க அணிகளின் படகுகளை தாக்குவதற்கு கடற்படையின் டோறா படகுகள் முயற்சியெடுக்க, கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தளபதி சூசை தலைமையில் கடற்தாக்குதலை ஆரம்பித்தனர்.palraj (2)

இதனால் தரையிறக்கச்சண்டை நடுக்கடலிலேயே ஆரம்பமானது. கடற்புலிகள் தாக்குதலை மேற்கொண்டு டோறாக்களை தடுத்து வைத்திருக்க, முதலாவது தரையிறக்க அணி தளபதி பால்ராஜ் அவர்களுடன் தரையிறங்கியது. முதலில்  தரையிறங்கியவர்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்த்து, தங்களது இலக்கு இடங்களை நோக்கி முன்னேறினர்.

தரையிறங்கிய இடத்தில் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை எதிரி நடாத்திய போதும் விநியோகப்பாதையை தடுக்கும் மூலோபாய நகர்வை சரியாக மேற்கொண்டு, இத்தாவிலில் கண்டிவீதியை மறித்து கிட்டத்தட்ட ஒரு சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவை உள்ளடக்கி நிலையமைத்திருந்தனர்.

பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து அணிகளையும் ஆயுதங்களையும் நிலைப்படுத்தினர். போராளிகள் சண்டையில் நிற்கின்றோம் என்பதை விட தயார்ப்படுத்தல் பயிற்சி செய்வதைப்போல தங்களை தயார்ப்படுத்தினர்.

பால்ராஜ் தலைமையில் படையணிகள் கண்டி வீதியை ஊடறுத்து நிற்கின்றன என்பது சிங்களப் படைத்தலைமைக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் கனரகப்பீரங்கி, ஆட்லறி, பல்குழல் பீரங்கி, விமானப்படை, ராங்கிகள், துருப்புக்காவிகள், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மூன்றுபக்கமும் சுற்றி நிற்க அதற்கு நடுவே, சாகமில்லாத தரையமைப்பிற்குள் முக்கியமாக, நீரேரியால் பிரிக்கப்படும் ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் புலியணிகள் நிலை கொண்டதும் அதற்;குள் பால்ராஜ் நிற்கின்றார் என்பதும் சிங்களப்படைக்கு அதிர்ச்சிக்குரிய விடயமாகவும் மனோதிடத்தை பலவீனப்படுத்தும் விடயமாகவும் இருந்தது.

1998ம் ஆண்டு கிளிநொச்சியில் ஊடறுத்து நின்ற பால்ராஜ் அவர்களின் மறிப்பை உடைக்க முடியாததன் விளைவே கிளிநொச்சி முகாமின் வீழ்ச்சிக்கான அடிப்படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதனால் பால்ராஜின் அணிகள் முழுமையாக நிலைபெறுவதற்கு முன் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பது அவர்களிற்கு பிரதான விடயமாகியது.

சிங்களத்தலைமை ஆச்சரியத்துடன் பார்க்க, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவம் என்று புலியணிகள் தயாராகி நிற்க, இத்தாவில் சண்டைக்களத்தில் புதிய வீர வரலாற்றைப் பதிய ஆயத்தமாகினர்.

இத்தாவில் பெட்டிச்சமரை ஸ்ராலின்கிராட் சண்டையுடன் ஒப்பிடலாமா? அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா? என்றால் அந்த களச்சூழல்களைத் தாண்டி இத்தாவில் பெட்டிச்சமர் தனித்துவமாகவே தெரியும்.

சாத்தியமில்லாத தரையமைப்பில் குறைந்தளவிலான வளங்களுடன்; குறிப்பிட்டளவு போராளிகளையும் வைத்துக்கொண்டு 40000 சிங்களப்படைகளின் நடுவே, அதி நவீன ஆயுதங்கள், முப்படைகளின் தாராளமான உதவிகள், சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள்  போன்றவற்றை தன்னகத்தே கொண்ட படையினரை ஊடறுத்து நிற்பது என்பது புலிகளுக்கு மட்டுமே இருந்த அல்லது தமிழர்களுக்கு இருக்கும் மனோபலத்தின் வெளிப்பாடு.

பால்ராஜ் அவர்களிடம் பலவருடங்களாகத் தோல்வியைச் சந்தித்த சிங்களத் தளபதிகள் பலரும் அந்த களமுனையின் தளபதிகளாக இருந்ததால், பால்ராஜ் அவர்களை வெற்றிகொண்டு பழிதீர்க்க கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்ற மன உணர்விலும்; சிங்களப் படைத்தலைமை தீவிரமான எதிர்த்தாக்குதலை முன்னெடுக்கத் திட்டமிட்டது.

தனது தளபதிகளிடம் கதைக்கும் போது |என்னட்ட அடிவாங்கி ஓடினவைதான் இப்ப ஒன்றாய்ச் சேர்ந்து வந்திருக்கினம், இவையள் இந்தமுறையும் வெல்லிறதைப் பார்ப்பம்| என்று பால்ராஜ் கூறினார்.

இத்தாவிலில் உருவாக்கப்பட்ட போர்வியூகத்தை உடைப்பதற்காகவும் கண்டிவீதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும் கடுமையாகப் போரிட்டது சிங்களப்படை. உக்கிரமான சமர். எதிரி புலிகளின் நிலைகளை உடைப்பதும், அதை புலிகள் மீளக் கைப்பற்றுவதுமாக, நீண்ட நேரமாக தக்கவைப்பதற்காகவும் கைப்பற்றுவதற்கானதுமான சண்டைகள் நடைபெற்றன.

அர்ப்பணிப்பும் உறுதியும் நிறைந்த போராளிகளின் செயல்வீரம், அவர்களின் தீவிரமான போரிடும் ஆற்றல், மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்கள், நிலைகளை விடாமல் தனித்து நின்று சமரிட்ட பண்பு, அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலான செயற்பாடுகள் இத்தாவில் பெட்டியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.

கிட்டத்தட்ட பத்திற்கு மேற்பட்ட பெரியளவிலான படையெடுப்புக்கள், பதினைந்திற்கும் மேற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என முப்பத்துநான்கு நாட்களாகக் கடுமையான பல சண்டைகளை எதிர்கொண்டது புலிகள் சேனை.

பொதுவாகவே இராணுவம் காலைவேளைகளில்தான் தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கும். ஒரு தடவை, காலை இராணுவம் தனது நகர்வை செய்யவில்லை. எனவே களமுனைத்தளபதிகளுடன் சண்டை தொடர்பாகக் கதைக்கத் தீர்மானித்த தளபதி மதியமளவில் களமுனைத் தளபதிகளை தனது கட்டளைமையத்திற்கு அழைத்திருந்தார். அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தவேளை (தொலைத்தொடர்பு கண்காணிப்பின் மூலம் எல்லோரும் கட்டளைமையத்தில் இருக்கின்றனர் என அறிந்து), சிங்களப்படை நீரேரிக்கரையால் திடீர் ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு பால்ராஜ்; அவர்களின் கட்டளைமையத்திற்கு அருகில், கிட்டத்தட்ட 25 மீற்றரில் அமைந்திருந்த கட்டளை மையத்திற்கான பாதுகாப்பு நிலையில் சண்டையைத் தொடங்கினான்.

அதிலிருந்து 75 மீற்றரில் ராங்கிகள், பவள் கவசவாகனங்கள், துருப்புக்காவிகள் கட்டளை மையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தன. இராணுவத்தால் |வெலிகதற| எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கையானது இத்தாவில் பக்க கண்டல் நீரேரிக்கரையால் ஊடறுத்து ஒட்டுமொத்த தரைத்தொடர்பையும் துண்டித்து, நிலைகொண்டிருக்கும் அணிகளை அழிக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

கட்டளைமையத்தில் பாதுகாப்பிற்கு நின்றவர்கள் இராணுவத்தைக் கண்டு சண்டையைத் தொடங்க, நிலமையை புரிந்து சுதாகரித்த தளபதி, நிதானமாக களமுனைத் தளபதிகளை அவரவர் இடங்களுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, தனக்கருகில் சண்டை நடக்கின்றது என்பதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், அங்கு நடந்த சண்டையையும், எதிரி ஊடறுத்து வந்த இடங்களை மீளக்கைப்பற்றுவதற்கான கட்டளைகளையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் வழங்கிக் கொண்டிருந்தார்.palraj (1)

இராணுவம் ஊடறுத்து வந்த பகுதியில் விடுபட்ட நிலைகளைத் தவிர ஏனைய நிலைகளைத் தக்கவைத்து அங்கிருந்து தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர்.  ஆர்.பி.ஜி கொமாண்டோஸ் அணிகள் சிங்களப்படையின் துருப்புக்காவிகள், ராங்கிகள் மீது தாக்குதலை நடாத்தினர். ஒரு ராங்கி அழிக்கப்பட்டதுடன் பல ராங்கிகள் சேதமாக்கப்பட்டன. இரண்டு பவள் கவசவாகனங்கள் கைப்பற்றப்பட்டன. உள்நகர்ந்த எதிரியை அழிக்க வகுத்த உடனடித் திட்டத்தில் எதிரி நகர்ந்த இடங்களிலெல்லாம் தாக்குதலுக்குள்ளானதால் திணறிய எதிரி செய்வதறியாது, திரும்பியும் போகமுடியாமல் திண்டாடினான்.

இதில் நடந்த தற்துணிவான சம்பவங்கள் பல, உதாரணமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது ரவை முடிந்துபோய் இருந்த பெண் போராளியின்; நிலைக்குள் பாய்ந்து கொண்டான் ஒரு சிப்பாய். அவனது துவக்கையே பறித்து அவனை சுட்டுவீழ்த்தினார்.

அதுபோல ரவை முடிந்ததும் செல்லால் அடித்து ஒரு எதிரியை வீழ்த்தினார் இன்னுமொரு பெண்போராளி. இதுபோல பல சம்பவங்கள் இந்த சண்டைக்களத்தில் நடைபெற்றன. பிறிதொரு சம்பவத்தில், ராங்கிகள் வந்தபோது அவற்றின் மீது குண்டு வீசி அழித்த பெண்புலிகளின் வீரம் என்பது புறநானுறுக்குப் பின் தமிழ்ப்பெண்களின் வீரத்திற்கான எடுத்துக்காட்டு. இறுதியாக இருட்டு வேளையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பாரிய இழப்புடன் பின்வாங்கியது இராணுவம்.

எப்போதும்; போராளிகளின் உளவுரணை தனது உறுதியான கட்டளை மூலம் தெம்பாக வைத்திருப்பது பால்ராஜ் அவர்களின் குண இயல்பு. ஒரு பெண்போராளி ஒரு பகுதிக்கான தாக்குதலை வழிநடாத்திக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாக இறுக்கமாக சண்டை தொடர்ந்து கொண்டிருந்தபோது தொடர்பு கொண்ட தளபதி ‘எங்கட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் எதிரி நினைக்கிறதை அடைய விடக்கூடாது.

வந்த எதிரிகளுக்கு நாங்கள் யார் எண்டதைக் காட்டிப்போட்டு விடவேணும்’ என்று கூறினார். அப்போராளிகளும் கடுமையாகச் சண்டையிட்டு இராணுவத்தை பலத்த இழப்புகளுடன் பின்வாங்கச் செய்தனர். மற்றும் சண்டைக்கான கட்டளையை வழங்கும் சமநேரத்தில் விநியோகம் சரியாக செல்கின்றதா? காயம், வீரச்சாவடைந்தவர்களை அனுப்புதல் உட்பட களத்தின் சகல ஒழுங்குபடுத்தல்களையும் கவனித்துக்கொண்டிருப்பார்.

சிறிலங்காவின் முப்படைத்தளபதிகளும் பலாலியில் இருந்து இத்தாவில் முற்றுகைச் சின்னாபின்னமாக்க நினைத்தபோதும் அது அவர்களால் முடியாத காரியமாகவே இருந்தது. இந்நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தின் பெருமைமிக்க தளபதிகளான பிரிகேடியர் காமினி கொட்டியாராச்சி, வான்நகர்வு பிரிகேட் கட்டளைத்தளபதி கேணல் றொசான் சில்வா, மேஜர் ஜெனரல் சிசிற விஜயசூரியா உட்பட பல தளபதிகளின் சண்டைத்திட்டங்கள், தந்திரோபாயங்கள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டன.

இறுதியாக ஒரு தடவை பாரிய நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டு, பால்ராஜ் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றுவோம் எனக் கங்கணங்கட்டி மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை கூட தோல்வியில் முடிந்தது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியின் பிரதான பங்கை வகித்த பால்ராஜ் அவர்களின் சேனையை வெற்றி கொள்ள சிறிலங்கா இராணுவத்தின் அனைத்து சிறப்புப் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், அச்சேனையை அவர்கள் வெல்லமுடியாததால் ஆனையிறவுத்தளம் பெரும் சிக்கலுக்குள்ளாகியது. தொடர்ந்து சண்டையை கொண்டு நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் மறுபக்கம் தளபதி தீபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நகர்வையும் தடுக்கமுடியாததால் நெருக்கடிக்குள்ளான இராணுவத்திற்குப் பின்வாங்கி ஓடுவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை.

இத்தாக்குதல் நடவடிக்கையின் கடினத்தை தளபதி பால்ராஜ் விபரிக்கும் போது ‘சண்டையென்றால் இதுதான் சண்டை, குளிக்க ஏலாது, சப்ளை இல்லை, வெட்டி நிற்கும் பங்கருக்குள்தான் சாப்பாடு, தூக்கம் எல்லாமே, வீரச்சாவடைந்தவர்களை வீரவணக்கம் செலுத்தி விதைக்க வேண்டும், காயப்பட்ட போராளிகளை அதே பங்கருக்குள் பராமரிக்கவேண்டும், விமானம், ராங்கி, எறிகணை என அப்பிரதேசத்தை துடைச்சு எடுப்பான், அந்தப்பகுதிக்குள்ளிருந்த சிறு மரங்கூட காயமில்லாமல் இருக்காது அந்தளவிற்கு கடுமையான செல்லடி, சண்டையும் அப்படித்தான்.

இன்று 400 மீற்றர் அவன் பிடிச்சா, நாளைக்கு 600 மீற்றர நாங்கள் பிடிப்பம், 10, 20 ராங்கிகளை இறுமிக்கொண்டு நகர்ந்து சண்டை நிலைகளுக்குள்ளேயே புதைக்கலாமென்று வருவான். நாங்கள் ஆர்.பி.ஜியால அடிப்பம். சில இடங்கள்ல ராங்கை வரவிட்டு நாங்கள் பாய்ந்து குண்டு போட்டு அழிப்பம், சப்ளை துப்பரவாக இல்லாத சமயங்களில ஆமியின்ர ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவம். மேலதிக படையணிகள் கிடைக்காத தருணங்களில் 100 மீற்றர், 200 மீற்றர், சில இடங்களில் 500 மீற்றருக்கு விடக்கூடிய அளவு போராளிகளே இருந்தனர்.

இவ்வாறு விட்டு விட்டு தொடர் ரோந்துகளை விட்டே எதிரியை உள்ள விடாம பாப்பம், சிலநேரங்களில ரோந்து அணியுடன் சண்டை தொடங்கும். உடன பக்கத்திலிருக்கின்ற அணிகளை எடுத்து உடனடித்தாக்குதலை மேற்கொண்டு துரத்திவிடுவம். எதிரிக்கு நாங்கள் பலர் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியதால் எங்களின் படைபலத்தை மிகையாகக் கணிப்பிட்டு நகர்வதற்குப் பயப்பட்டான்’ என்று கூறுவார்.

பால்ராஜ் அவர்களிற்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அதை அக்கறைப்படுத்தாமல் அந்த நோயின் வலியையும் சமாளித்துக் கொண்டே இத்தாவில் சண்டையை 34 நாட்கள் வெற்றிகரமாக நடாத்திக் காட்டினார். அவருடன் நின்ற போராளிகள் ‘அவர் தூங்கிப் பார்த்ததில்லை, இரவில் கூட ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்துகொண்டிருப்பார்.

சிறிய வெடிச்சத்தம் கேட்டாலும் உடனே துள்ளியெழுந்து நிலைமைகளை கேட்டறிந்து உறுதிப்படுத்திய பின்னரே அமைதியாக இருப்பார். சண்டை முடிந்தபின் கூட முகாமில் படுத்திருக்கும் போது சண்டையைப்பற்றி நித்திரையில் புலம்புவார்’ அந்தளவிற்கு தீவிரமான மனநிலையில் இதன் வெற்றிக்காக உழைத்தார்.

இத்தாவில் சண்டை தொடர்பில் பதிவு செய்த உரையாடல் ஒன்றில் தளபதி காமினி கெட்டியாராட்சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ‘40.000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500  போரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா? என்று கடுமையாக பேச அதற்கு பதிலளிதத கெட்டியாராச்சி ‘பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக்கூட சமாளிச்சிடுவன்.

வந்திருப்பது பால்ராஜ். நிலைகொண்டு விட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்’ அத்துடன் ‘நீங்கள் பலாலியில இருந்து கேள்வி கேட்கிறதை விட்டிட்டு, இந்த இடத்திற்கு வந்து பார்த்தால்தான் நிலவரம் புரியும்’ என்றார்.

ஆனையிறவை வீழ்த்திய வெற்றியுடன் தளபதியைச் சந்தித்த தலைவர், இந்த உரையாடல் பதிவை போட்டுக்காட்டினார். தலைவர் தனது அறையில், தரையிறங்கி நீரேரிக்குள்ளால் நகரும் பால்ராஜ் அவர்களின் படத்தை அட்டைப்படுத்தி மாட்டி வைத்திருந்தார். அவரது அறையை அலங்கரித்த படம் அதுவாகத்தானிருக்கும்.palraj (11)

இத்தகைய பெருமை வாய்ந்த தளபதியை நாம் இழந்திருக்கின்றோம். அவர் தமிழினத்தின் போரியல் ஏடு, தமிழர்களின் வீரத்தின் குறியீடு, அவருடைய தலைமைத்துவமும் சண்டைகளும் எப்போதும் ஒரு வழிகாட்டலைக் கொடுக்கும். ஈடில்லாத தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய வீரவணங்கங்களைச் செலுத்துவோம்.

 

 

முகப்பு
Selva Zug 2