வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

தமிழினப் படுகொலைக்கான நீதி வேண்டி செயல்பட அழைக்கிறார் – இயக்குனர் வ.கௌதமன்

kavuthaman.JPGபோர்க்குற்ற விசாரணைக்கான கால அவகாசம் என்பது
ஈழத் தமிழருக்கு எதிரான ஒரு சதிவலையாகும்.
ஸ்ரீலங்கா அரசுக்கு கால அவகாசம் கொடுப்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கைக்கூலிகளும், தமிழினத்தின் எதிரிகளும், எதிரியின் அடிவருடிகளும், எதிரியும்தான் காலநீட்டிப்பை ஆதரிப்பார்கள். நீதிமான் என்று சொல்லப்படக்கூடிய எவனும் காலநீட்டிப்பை ஆதரிக்கமாட்டான். இலங்கை அரசின் காலநீட்டிப்பு என்ற சதிவலைக்குள் சிக்கொள்ளாமல் ஐநா பொதுச்சபையிடம் மேற்கொண்டு நடவடிக்கைக்காக போர்க்குற்ற விசாரணைகளை ஒப்படைக்க வேண்டும்.
இனப்படுகொலை நிகழ்ந்தமைக்கான பக்கசார்பற்ற, தெளிவான, உறுதியான ஆதாரங்களை ஐநா சபையும், சேனல்-4 தொலைக்காட்சி ஆவணப்படங்களும் தந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் இலங்கையில் இனப்படுகொலைதான் நிகழ்ந்தது என்பது இலகுவாகவே நிரூபிக்கப்பட முடியும். அவ்வாறு நிரூபிக்கும் பொழுது தமிழீழம் பிரிந்து தனியரசாக ஆவதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த ஐநா விதிகளின் படி இடமுண்டு. ஆதலால் போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் இலங்கை அரசுக்கு வழங்குவது என்பது அதன் சூழ்ச்சிக்கு ஒருபுறம் இரையாவதுடன் மறுபுறம் தமிழ் மக்களுக்கு நேரடியாக துரோகம் செய்வதாகவும் நீதிக்கும், நியாயத்திற்கும், உண்மைக்கு எதிராக செயற்படுவதாகவும் அமைகிறது.

ஒரு பொதுமகன்கூட கொல்லப்படாமல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை தமது இராணுவம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்று சிங்கள அரச தரப்பிலிருந்து திரும்பப் திரும்ப கூறப்பட்டாலும் வகை தொகையின்றி 1,50,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுவிட்டனர் என ஈழத் தமிழர் அமைப்புகள் உலகெங்கும் பறைசாற்றின.
இதன் விளைவாக ஐநா பொதுச்செயலாளர் பான்-கி-மூனால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இலங்கையில் நிகழ்ந்த இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக முதல் முறையாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐநா உள்ளக விசாரணைக்குழு இதைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் மூலம் 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை கூடவே உறுதிப்படுத்தியது.
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இறுதியில் வேறுவழியின்றி ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தின் முன் சர்வதேச கலப்பு விசாரணை ஒன்றை மேற்கொள்ள சிறிசேன-ரணில் அரசாங்கம் ஒப்புக்கொண்டு அதற்கு ஒரு வருட கால அவகாசம் ஐநா-வால் வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு அதற்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இப்போது இலங்கை அரசு மேலும் இரண்டு ஆண்டுகால அவகாசம் கோரி நிற்கின்றது. இது ஈழத் தமி;ழரை மட்டுமன்றி ஐநாவையும் ஏமாற்றி இறுதியில் இனப்படுகொலை குற்றவாளிகளையும், சிங்கள அரசையும், சிங்கள இராணுவத்தையும் தப்ப வைப்பதற்கான தந்திரமாக இந்த கால அவகாசத்தை சிறிசேன-ரணில் அரசாங்கம் கோருகிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐநா உள்ளக விசாரணை அறிக்கையின் படி 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அதாவது குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியோர்கள் என வகைதொகையின்றி சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளமை பக்கசார்பற்ற வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லண்டனில் இருந்து வெளியாகும் சேனல்-4 தொலைக் காட்சி வெளியிட்ட நேரடி கொலைக்கள காட்சிகளைக் கொண்ட கொலைக்களம் என்கின்ற – முடைடiபெ குநைடன என்ற தலைப்பிலான மூன்று ஆவணப்படங்களும் படுகொலை, இளைஞர்களை-இளம்பெண்களை நிர்வாணப்படுத்தல், அவ்வாறு நிர்வாணப்படுத்திய நிலையில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்படுதல், இசைக்கலைஞரும் ஊடகவியலாளருமான இளம்பெண் இசைப்பிரியா போன்ற பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுதல், சிறுவன் பாலச்சந்திரன் போன்ற சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருத்தல், பீரங்கிக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டு தாக்குதல்களால் பொதுமக்கள் பெருந்திரளாகக் கொல்லப்படுதல், இவற்றுடன் கூடவே மொத்தத்தில் பாரீய இடப்பெயர்வு, உணவின்மை, மருந்தின்மை, தங்க வீடின்மை போன்ற பெரும் மனிதப் பேரவலங்களுக்கு தமிழ் மக்கள் உள்ளாகியிருந்த களநிலையில் எடுக்கப்பட்ட நேரடி காட்சிகளை மேற்படி ஆவணப்படங்கள் தெளிவாக காட்சிப்படுத்தி உலகின் மனசாட்சியையே உலுக்கியது.
இவை போலியான ஆவணப்படங்கள் என இலங்கை அரசு கூறிய போதிலும் ஐநா தொழில்நுட்ப குழுவினர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் இவை அனைத்தும் போலியானவையோ, ஆள்மாறாட்டத்திற்கு உரியவைகளோ அல்ல என்றும் முற்றிலும் உண்மையானவை என்றும் அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தப்பட்டது.
மேற்படி ஐநா உள்ளக விசாரணை அறிக்கை, சேனல்4ன் மூன்று ஆவணப்பட ஆதாரங்கள் அவை உண்மையானவை என்று ஐநா தொழில்நுட்பக் குழு அதனை ஆதாரப்படுத்தியமை போன்ற இவ்வாதாரங்கள் மட்டும் போதுமானவை இனப்படுகொலை  நிகழ்ந்ததற்கான குற்றச்சாட்டுகளை நிருபிப்பதற்கு.
இதன்படி அன்றைய ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், அன்றைய பதில் பாதுகாப்பு அமைச்சரான  இன்றைய ஜனாதிபதி சிறிசேனவும், அன்றைய இராணுவத் தலைமைத் தளபதியும் இன்றைய அரசால் ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவருமான சரத் பொன்சேகாவும், அத்துடன் களநிலை ரெஜிமெண்ட்டுகளின் தளபதிகளும் இனப்படுகொலை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனைக்கு உரியவர்கள் என்பது உண்மையாகும்.
அவ்வாறு மேற்படி மறுக்கப்பட முடியாத ஆதரங்களின் அடிப்படையில் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் நிலையில் தமிழீழம் பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தலாம் என ஐநா முடிவெடுத்து அதன் அடிப்படையில் ஐநாவே பொதுவாக்கெடுப்பை நடத்தவும் முடியும்.
இந்த உண்மைகள் தெரிந்த நிலையில் இதற்கான சர்வதேச விசாரணைகளை தவிர்க்கும் நோக்கில் ஸ்ரீலங்கா அரசு கால அவகாசம் என்ற தந்திரத்தை மேற்கொள்கிறது.
இப்பொழுது எமது தேவை ஒருநாள்கூட மேலும் கால அவகாசம் வழங்கப்படாமல் இப்பிரச்சனையை ஐநா மனிதஉரிமைகள் ஆணையமானது ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது ஐநா பொதுச்சபை இதனை நேரடியாக ஐநா பாதுகாப்புச் சபையிடம் ஒப்படைக்கும். ஐநா பாதுகாப்புச் சபை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னோ அல்லது அதையொத்த சர்வதேச நீதி விசாரணை மன்றம் ஒன்றை  உருவாக்கி அதனிடமோ விசாரணைக்கு ஒப்படைக்க முடியும். சிலவேளை பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடொன்று “வீட்டோ” எனப்படும் ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி அதனை நிறுத்தினாலும் அது முடிந்த கதையாகாது மேலும் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்று சர்வதேச அரங்கில் தொடர் வளர்ச்சியடைந்து இறுதியில் ஒருநாள் அது விடுதலையில் முடிவடைய வாய்ப்புண்டு.
ஆதாலால் காலநீட்டிப்பு என்ற சொல்லுக்கே இடமிருக்கக் கூடாது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தனக்கு அண்டையில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அன்று தடுக்க முடியாது போன இந்திய அரசானது இன்றாவது நீதியின் பேராலும், இந்தியாவிற்கு இருக்கக்கூடிய ஜனநாயக நாடு என்ற முகத்தின் பேராலும் இதனை செய்ய வேண்டும். அத்துடன் கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை ஸ்ரீலங்கா அரசை 2 ஆண்டுகளாக ஆதரித்து பயனற்றுப் போனது போல் இனியும் ஆதரிக்காது ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக ஐநா மனிதஉரிமைகள் ஆணைத்தின் முன் காலநீட்டிப்பிற்கு எதிராக செயற்பட வேண்டும். இதுவிடயத்தில் உலகத் தமிழர்களும் தமக்கிடையே காணப்படக்கூடிய அனைத்து உள்வேறுபாடுகளையும் மறந்து ஒருமனதாக காலநீட்டிப்பிற்கு எதிராக செயற்பட வேண்டும்.
நம் தமிழீழ விடுதலைக்காக இதுவரை மூன்றரை இலட்சம் நமது தமிழ் உறவுகளை பலிகொடுத்த நிலையில் உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்களாகிய நாம் தனித் தனியாக நின்று போராடாமல் தமிழீழத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் வாழ்கின்ற நம் உறவுகள் ஒரே நேரத்தில் நம் ஆயுத எழுத்தைப் போல (ஃ) ஒற்றுமையோடு நின்று போராட வேண்டும். முன்னோடிகள் வழியில் குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும் போராட வேண்டும். அறுந்து போகாத நம்பிக்கையோடு தொடர்ந்து போராட வேண்டும்.
வெல்வோம் – தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் –

முகப்பு
Selva Zug 2