கிருசாந்தி குமாரசாமி- செம்மணி படுகொலை


 1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன. அந்த மாணவி அந்த வாரம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றாள், இன்னும் சில மணிநேரங்களில் அவள் இரசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.

 அந்த மாணவியின் பெயர் கிருசாந்தி குமாரசுவாமி, யாழ்ப்பாணத்தின் பிரபல மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி. அன்று காலை தாயார் அவசர அவசரமாக உணவு தயாரித்துக் கொடுத்தார். பாடசாலைக்குச் செல்லும் அவசரத்தில் அவள் முழுமையாக அதனை உண்ணவில்லை. அதன் பின்னர் சிறிது நேரம் படித்துவிட்டு, காலை 7.15 மணிக்கு அவள் தனது சிவப்பு சைக்கிளில் பாடசாலைக்குப் புறப்பட்டாள். தாயார் கிருசாந்தியை வாழ்த்தி வழியனுப்பிவைத்தார். மகளின் சைக்கிள் மறையும் வரை தாயார் பார்த்துக்கொண்டிருந்தார். கிருசாந்தியின் தாயாரின் பெயர், ராசம்மா குமாரசுவாமி, 59 வயது, இந்திய பல்கலைக்கழக பட்டதாரி, அவர்கள் வசிக்கும் கைதடியில் உள்ள பாடசாலையொன்றில் அவர் துணை அதிபராக பணிபுரிந்தார், மூத்த மகள் பிரசாந்தி கொழும்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார், இரண்டாவது கிரிசாந்தி. கடைசி, மகன் பிரணவன், சாதாரணதரப் பரீட்சை முடிவுகளிற்காக காத்திருந்தார்,

ராசாம்மா 1984 இல் தனது கணவரை இழந்தவர், அவரது வாழ்க்கை என்பது பிள்ளைகளை மையப்படுத்தியதாக காணப்பட்டது. மகள் பாடசாலை சென்ற பின்னர் ராசம்மா, கோவிலிற்கு சென்றார், சனிக்கிழமை என்பதால் சக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறிதுநேரம் உரையாடினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது காலை 8.15 இருக்கும்.

சனிக்கிழமை விரதம் என்பதால் மதியம் பிள்ளைகளுடன் உணவு உண்பதற்காக தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த மகன் மற்றும் பரீட்சைக்குச் சென்றிருந்த மகள் வரும்வரை காத்திருந்தார். தனது மகளின் பரீட்சை 9.30 க்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது அவரிற்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார். எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்திற்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத்தொடங்கினார். வீட்டுக்கும் வீதிக்கும் இடையே நடந்துகொண்டே இருந்தார். அவர் தனது சகோதரி சிவபாக்கியத்திடம் விடயத்தை தெரிவிக்க, அவரும் கவலையடையத் தொடங்கினார்.

 இருவரும் வீட்டு வாசலில் வந்துபார்த்துக்கொண்டு நின்றனர். அவர்கள் மனதில் பல கவலைகள் சூழ்ந்துகொண்டன. அந்தவேளையே அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக வந்து அவர்கள் கேள்விப்பட விரும்பதா அந்த செய்தியை தெரிவித்தார், கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தி. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததும், நேரத்தை வீணடிக்காமல் ராசம்மா தனது மகளை தேடிச்செல்ல தீர்மானித்தார். கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக்கொண்டார். அந்நேரம் பார்த்து வீடுதிரும்பிய மகன் பிரணவன் நிலைமையை அறிந்து தாய் ராசம்மாவை தனது சைக்கிளின் பின் இருக்கையில் உட்கார வைத்து மயான பகுதியில் உள்ள அந்த காலரண் நோக்கி புறப்பட்டான். கிருபாமூர்த்தியும் தன்னுடைய சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்

. ஆனால், அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடுதிரும்பவில்லை. மறுநாள் காலை கிருசாந்தி குடும்பத்தின் இரு உறவினர்கள், யாழ்ப்பாண தலைமை தபாலதிபராக இருந்த கோடிஸ்வரனை நாடினர். நிலைமையை புரிந்துகொணட அவர் அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு செல்லவேண்டும் எனத் தீர்மானித்தார். கோடீஸ்வரனும் வேறு இருவரும் புங்கங்குளம் இராணுவமுகாமிற்குச் சென்றனர். கிருசாந்தியும் குடும்பத்தினரும் காணமற்போயுள்ளதை அறிவித்தனர். கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இது இடம்பெற்றது. கிருசாந்திக்கும் அவரது குடும்பத்தினரிற்கும் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு கோடீஸ்வரனும், ஏனையவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். முகாம்கள், முகாம்களாக அலைந்தனர்.

 ஆனால், படையினரோ தங்களுக்குத் தெரியாது என கைவிரித்துவிட்டனர். தபாலதிபரின் உறவினர் ஒருவர் கிருசாந்தியின் சகோதரனின் சைக்கிள் ‘செயின் கவர்’ ஒன்றை செம்மணி இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள கடையொன்றில் கண்டிருந்தார். இது குறித்தும் அவர்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவர்கள் காணமற்போன வேளை யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. யாழ். குடாநாடு மிகநெருக்கமான சோதனைச் சாவடிகளையும், காவலரண்களையும் கொண்டிருந்தது. ஒரு மாதத்திற்கு மேல் படையினர் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர் என்பது மர்மமாக காணப்பட்டது. இலங்கையின் தேசிய பத்திரிகைகள் இந்தச் சம்பவம் குறித்து மூச்சு விடவில்லை. தேசிய ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை படையினரிற்கு எதிராக எழுதுவது என்பது தேசப்பற்றற்ற செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.

 யாழ்ப்பாணத்திலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் கொழும்பைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி பூபாலன் இந்தச் சம்பவம் குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவ்வேளை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் மூலம் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். பூபாலன் ஜனாதிபதி சந்திரிகாவிடம் இது குறித்து தெரிவித்தார். இது குறித்து அறிந்ததும் சந்திரிகா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளிற்காக லெப். கேர்ணல் குணரட்ண தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றது.

கிருசாந்தி காணாமற்போன தினத்தன்று செம்மணி காவலரணில் பணியாற்றியவர்கள் வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் அனைவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அவர்கள் தாங்கள் கிருசாந்தியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை ஏற்றுக்கொண்டனர். கிருசாந்தியையும் ஏனையவர்களையும் கொலைசெய்ததையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கிருசாந்தி காணமற்போய் 45 நாட்களிற்கு பின்னர் உள்ளூர் நீதவான் ஒருவர் முன்னிலையில் செம்மணி புதைகுழியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டன.

கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்ட காவலரணிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் இந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவ்வேளை அங்கு பணியாற்றிய அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். திரட்டப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து சட்டமா அதிபர் மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிமால் திசநாயக்க, அன்ரூ சோமவன்ச, காமினி அபயரட்ண ஆகியவர்கள் அடங்கிய டிரையல் அட்பார் விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், ஆதாரங்கள் வெளியாவதை தடுப்பதற்காக அவர்கள் ஏனைய மூவரையும் கொலைசெய்ததும் தெரியவந்தது. இலங்கை படையினர் தங்கள் குற்றங்களை மறைப்பதற்காக இந்த தந்திரோபாயத்தை பின்பற்றி வந்துள்ளனர். ஏழு மாதங்கள் நீடித்த குழப்பம் மிகுந்த விசாரணைகளின் பின்னர் நீதிபதிகள் ஐந்து படையினர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடித்தனர். அவ்வேளை சில அரசியல்வாதிகள் இது அரசாங்கத்தின் மனித உரிமை கொள்கைக்கு, சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும், ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் தலையிட்டிருக்காவிட்டால் இது சாத்தியமாகியிராது என்பதே உண்மை. இதேவேளை, கிருசாந்தி படுகொலைக்கு ஆறு மாதங்களிற்கு முன்னர் இடம்பெற்ற குமாரபுரம் படுகொலைகள் உரிய முக்கியத்துவத்தை பெற்றிருக்கவில்லை. செம்மணி படுகொலை இரண்டு வருடங்களில் முடிவடைந்த அதேவேளை, குமாரபுரம் படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு 20 வருடங்கள் பிடித்தது.

இது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை நினைவுபடுத்துகின்றது. இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் மறைக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டோரிற்கான நீதி, நியாயங்கள் முற்றாக மறுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் பல்வேறு வடிவிலான ஆவணப்படுத்தல்களை இந்த விடயம் தொடர்பில் தயாரித்து வைத்திருக்கின்றன. ஆனால் அவை தமிழ் இன அழிப்பின் இறுதிக் கட்டத்தில் சேமிக்கப்பட்டவை. இந்த இன அழிப்புக்கு திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருப்பதையும், பல்வேறு காலகட்டங்களிலும், பல வடிவங்களில் இன அழிப்பு அல்லது இன சிதைப்பு மேற்கொள்ளப்பட்டதென்பதையும் அந்தத் தரவுத் தேட்டங்கள் காணத்தவறியிருக்கின்றன.

ஓர் இன அழிப்பின் முதல் இலக்கு ஆண்கள் என்றால், அதன் இரண்டாம் இலக்கு பெண்கள் தான். ஆயிரம் ஆண்களைக் கொன்று வீசுவதால் எழும் அதிர்வைவிட, ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிக் கிழித்துப்போடுதல் பேரதிர்வை ஏற்படுத்தும். இன அழிப்புக்குள்ளாக்கும் மக்களின் உளவியலை மோசமாக மிரட்சியடையச் செய்யும். கிருசாந்தி தொட்டு, இசைப்பிரியா வரை அதனை அவதானித்திருக்கிறோம். அனுபவித்திருக்கிறோம். அதில் முக்கிய இனவழிப்பு ஆவணமாக யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தியின் படுகொலையும், அதற்குப் பின்னரான செம்மணி புதைகுழியும் பதிவுசெய்யப்படல் வேண்டும். செம்மணி ஓர் இனத்தின் மீது நடத்தப்பட்ட கூட்டு இனப்படுகொலையின் அடையாளம். ஆனால் அது விரைவாகவே மறக்கப்பட்டாயிற்று. இங்கு பிரயோகமாகும், தாமதிக்கப்படும் நீதி வழங்கலானது, அநீதிக்கு சமமானதாக மாறிவிடுகின்றது. தமிழர்கள் மனங்களிலிருந்து என்றும் அகலாத படுகொலை நினைவுகளுக்குள் செம்மணியும் உள்வாங்கப்படல் வேண்டும்.

600க்கும் மேற்பட்ட தமிழ் உயிர்கள் புதைக்கப்பட்ட அந்த வெளி ஒரு படுகொலையில் காட்சிப் படிமமாக நிறுவப்பட்டால் அது தெற்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரும் சுற்றுலாவிகளுக்கு நம் இனத்துயர் செய்தியை அறிவிக்கும். இதில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். வெறுமனே இனப்படுகொலை நடக்கின்றது என்பதை ஒரு சம்பவக் குறிப்பாக மட்டும், ஒரு வரியில் குறிப்பிட்டுத் தீர்மானம் வெளியிடல் போதாமைகளைக் கொண்டதாகக் கணிக்கப்படும். இங்கு நடந்தது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க ஆதாரபூர்வமாக, சம்பவக் கோர்வையாக அவற்றை தொகுத்து வெளியிடவேண்டும். உலகளவில் அநீதிக்குள்ளான இனங்கள் அதனையே செய்திருக்கின்றன. அவ்வாறு செய்தலே அது ஆரோக்கியமுள்ள அரசியல் பயணமாக அமையும். உள்ளே யாழ்ப்பாணம் வரவேற்கின்றது, இப்போது புதிய வடிவம் பெற்றுவிட்டது. ஒருவித அபிவிருத்தியின் மெருகூட்டலுடன் அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

 ஈழத்தமிழர் மறந்துபோன வரலாற்றுப் பக்கங்களில் முக்கிய இரு சம்பவங்களை இந்த மையம் வைத்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பரில் இந்த இடத்தில்தான் கிருசாந்தி தொலைக்கப்பட்டாள். 2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட படையியல் நடவடிக்கை இந்த வளைவு வரை விரிந்திருந்தது. இந்த இரு சம்பவங்களும் தமிழர்களால் மறக்கப்பட முடியாதவைதான். ஆனால் மறதியின் அரசியல் அனைத்தையும் மூடச் செய்திருக்கின்றது. விரும்பியோ, விரும்பாமலோ மறந்துபோவதை விரும்புகின்றோம். அப்படியான காலத்தில்தான் கிருசாந்தியை மறதியின் அடுக்குகளிலிருந்து மீண்டும் கிளறியெடுக்க வேண்டியிருக்கின்றது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி ஒரு விபத்து நடந்தது. சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த மாணவியொருவரை இராணுவ வாகனம் மோதிக்கொன்றது. இராணுவத்துக்கு எதிராக மூச்சுக்கூட விடுவதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் மாணவிகள் அமைதியாக சாவு வீட்டைக் கடைபிடித்தனர்.

வெள்ளைச் சீருடைகளுக்கு தனியான மரியாதையுண்டு என்ற பொது மதிப்பீட்டின் அடிப்படையில் தனியாகவும், சேர்ந்தும், தம் லேடீஸ் சைக்கிள்களில் நாவற்குழியிருக்கும் அந்த செத்த வீட்டிற்கு சென்றுவந்தனர். அந்த நம்பிக்கையை கையில் பிடித்துக்கொண்டு தன் சைக்கிளில் இறுதிச் சடங்கிற்குப் போன கிருசாந்தி தனியே வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். வெட்டைக்காற்று பேயென அடித்துக்கொண்டிருந்தது. எப்போதாவது கடக்கும் வாகனங்கள் அவளைக் கடந்துபோய்க்கொண்டிருந்தன சிலர் அவளை அவதானித்துமிருந்தனர். Chemmani5அவர்கள் அவதானித்தவேளையில் இராணுவத்தினர் அவளை “யாழ்ப்பாணம் வரவேற்கிறது“ வளைவுக்கு அருகில் நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் அவளுக்கு என்ன நடந்தது என்ற விடயம் ஆறு வாரங்கள் கழித்து வந்த பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் செய்தியாக வெளிவந்தது. செய்தி “அச்சமயம் அங்குள்ள கொட்டகை ஒன்றுக்குள் இருந்த கோப்ரல்ஒருவர் மாணவியை உள்ளே கொண்டுவருமாறுகட்டளையிட்டதை அடுத்து சோதணைக் கடமையில் ஈடுபட்டிருந்தபடையினர் மாணவியை உள்ளே கொண்டு சென்றனர். மகள் பாடசாலையிலிருந்து திரும்பாததால் தாயாரும், தம்பியாரும் அவளைத் தேடிப் புறப்பட்டனர். அவர்களும் அதே சோதணைமுகாமை அமைந்தனர். அங்கு ஒரு மணித்தியாலம் வரைகாத்திருந்தனர்.

அவர்களும் வீடு திரும்பாததையிட்டு அயலவர் ஒருவரும் அந்தச் சோதணை முகாமுக்கு தேடிச் சென்றனர். ஏற்கனே வீடு திரும்பாத மூவர் குறித்து சம்பந்தப்பட்ட அயலவர் விசாரித்தபோது அவரும் உள்ளே கூட்டிச் செல்லப்பட்டார். அவர்கள் இராணுவத்தினரின் தங்கும் அறையின் பின்புறத்தில்கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டநிலையில் வைக்கப்பட்டனர். மாணவி கிருசாந்தி வேறிடத்தில் வைக்கப்பட்டிருந்தாள். பின்னர் இரவு பத்து மணியளவில் கிருசாந்தி தவிர்ந்த மூவரும் கழுத்தியில்கயிற்றால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் ஒரு குழியிலும், மற்றொருவர் இன்னொரு குழியிலுமாக புதைக்கப்பட்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் மாணவி கிருசாந்தியைபதினொரு பேர் வன்புணர்வு செய்து கொலை செய்தனர்” உதயன் (27.10.1996) 1996 ஆம் ஆண்டு கிருசாந்தியின் படுகொலை யாழ்ப்பாணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இலங்கை நாடாளுமன்றத்திலும், சர்வதேச அரங்குகளிலும் முக்கிய பேசுபொருளாக இந்தவிடயம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தம் மீது விழுந்த குற்றச்சாட்ட போக்குவதற்கு உடனடி விசாரணையை இராணுவத்தரப்பு ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக ஏழு இராணுவத்தினரும், இரண்டு பொலிசாரும் கைதுசெய்யப்பட்டனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் அளித்த வாக்குமூலம் கீழே பதிவிடப்படுகின்றது.

 வாக்குமூலம் 1996 ஆம் ஆண்டு அரியாலை துண்டிப் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் சிவில் நிர்வாகப் பகுதியில் கட்டளை அதிகாரியான கப்டன் லலித் ஹோவுக்கு கீழ் பணிபுரிந்தேன். அரியாலை, துண்டுப் பகுதியில் வீடுகளில் உள்ளவர்களின் விபரங்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களின் விவரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணியை மேற்கொண்டிருந்த சமயம் புலனாய்வுப் பிரிவு வேலையும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. புலனாய்வுப் பிரிவு வேலைகளுக்கு கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தன ஆகியோர் உட்பட சில வீரர்கள் இந்தப் பிரிவில் இருந்தனர். அவர்களின் கீழ் நான் செயற்பட்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில் அரியாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை இராணுவத்தினர் நடத்தனர். அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த சகலரையும் வெளியே அழைத்து வந்து நெடுங்குளம் எனும் இடத்தில் ஒன்றுசேர்த்து விசாரித்தோம். அந்த சந்தர்ப்பத்தில் இங்கு மேஜர் வீரக்கொடி, மேஜர் குணசேகர ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். அவர்கள் முகமூடி அணிந்த இருவரை அழைத்து வந்து அங்கு நின்ற பொதுமக்கள் முன்நிறுத்தினர்.

அந்த இரு முகமூடி நபர்களும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனத் தெரிவித்து ஐம்பது பேரை அடையாளம் காட்டினார்கள். அங்கு ஐம்பது பேரும் வீடியோ படம் எடுக்கப்பட்டதுடன் எம்மிடமிருந்த பெயர் பட்டியலுடன் அவர்களின் பெயர் விபரங்கள் ஒப்பிட்டும் பார்க்கப்பட்டன. பின்னர் அவர்களின் வீட்டு முகவரிகள் பெறப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிச் சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க அந்த முகவரியின் படி முயற்சிகள் எடுக்கப்பட்டன. அரியாலைப் பகுதியில் மக்கள் எவ்வாறு கைதுசெய்யப்பட்டார்கள்? எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? எங்கு புதைக்கப்பட்டார்கள்? என்ற விவரங்களை என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். chemmani6அரியாலைப் பகுதியில் முதலில் கைதானவார்கள் தபால்கட்டுச் சந்தியில் 7 ஆவது காலாட் படையணிப் பிரிவில் தடுத்து வைக்கப்படிருந்தனர். கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா தலைமையில் இயங்கிய “சி” பிரிவிலும், அரியாலையில் உள்ள கட்டடத்திலும் பலர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். மற்றொரு தடுப்பு முகாம் தபால்கட்டை சந்தியில் இருந்து செல்லும் பாதையில் பாடசாலைக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் அமைத்த முன்னைய அலுவலகத்தில் இயங்கியது.

கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றும் செல்வரத்தினம் என்பவரைக் கைது செய்து “சி” பிரிவு முகாமில் தடுத்து வைத்திருந்தனர். அவரைக் கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தன, லெப்டினன்ட், துடுகல்ல ஆகிய மூவரும் சேர்ந்து கைதுசெய்தனர். அவரை விடுவிக்குமாறு அவரது மனைவி, பிள்ளைகள், என்னிடம் கேட்டனர். இதனையடுத்து அந்த முகாமுக்கு சென்ற சமயம் செல்வரத்தினம் என்னைக் கண்டதும் தான் விடுதலைப் புலிகளுடன் தொடர்பற்றவர் எனத் தெரிவித்து தன்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்றாட்டமாகக் கேட்டார். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதவர் என்பதால் அவரை விடுவிக்குமாறு கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா ஆகியோரிடம் கோரினேன். அவரை விடுவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அன்று இரவே அவரைக் கொலை செய்து விட்டார்கள். மறுநாள் நான் போனபோது அங்கு 10 சடலங்கள் கிடந்தன. சித்திரவதை மற்றொரு சம்பவத்தில் யோகேஸ்வரன் என்பவர் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் தயா கட்டடத்தில் உள்ள முகாம் படையினர் அவரைக் கைதுசெய்தனர். அடுத்தநாள் “சி” வதைமுகாமுக்கு கொண்டு சென்றனர். இந்தமுகாம் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்தது.

பிரஸ்தாப நபரை விடுவிக்குமாறு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவை அந்த முகாமுக்கு எடுத்துச் சென்றேன். அங்கு அவர் தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தார். பிளேட்டினால் அவரது உடலில் வெட்டிக் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெப்டினன்ட் துடுகல்ல, உதயமார ஆகியேரே இந்தச் சித்திரவதையை செய்துகொண்டிருந்தனர். அந்த சித்திரவதை முகாமில் பாவித்த பொருள்கள் இப்போதும் அங்கிருக்கின்றன. (வாக்குமூலம் கொடுக்கப்பட்ட காலம்) அந்த முகாமில் இருந்த நபர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்து அங்குள்ள வீடு ஒன்றில் முன்னால் புதைத்தார்கள். பாஸ் பெற வந்தோருக்கு ஏற்பட்ட கதி அரியாலையைச் சேர்ந்த பார்த்தீபன், சுதாகரன் என்ற இரு இளைஞர்கள் கைதடி சென்று வியாபாரம் செய்ய பாஸ் பெற்றுத் தருமாறு என்னிடம் கேட்டார்கள். இது குறித்து கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனாவிடம் கேட்டேன். அவர்களை முகாமுக்கு வருமாறும், அங்கு வைத்து பாஸ் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தகவலை அந்த இளைஞர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் முகாமுக்கு சென்றனர்.

மறுநாள் அந்த இளைஞர்களின் உறவினர்கள், அந்த இளைஞர்கள் இருவரும் இன்னும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர் அந்த இளைஞருக்கு. கைதடியில் வியாபாரஞ் செய்ய அனுமதிக் கடிதம் வழங்குவதாகத் தெரிவித்த கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெட்டினன்ட் துடுகல்ல ஆகியோர் அந்த இளைஞர்கள் இருவரையும் தலைகீழாகக் கட்டித் தூக்கிவிட்டுத் தாக்கியதைக் கண்டேன். மறுநாள் இரு இளைஞர்களும் இறந்துவிட்டனர். அரியாலை முகாமில் பணிபுரிந்த அப்துல் நஷார், ஹமீத் சமரசிங்க ஆகியோர் நன்றாகத் தமிழ் கதைப்பார்கள். அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றைக் காட்டுமாறு என்னிடம் கேட்டார்கள். இரவு நேரத்தில் அந்த வீட்டைக் காட்டினேன். அங்கு ஓர் ஆணும், பெண்ணும் இருந்தார்கள். “அந்த வீட்டின் சொந்தக்காரர் எங்கே?” என்று அவர்களிடம் கேட்டோம். “முன்வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பதில் அளித்தனர். அதையடுத்து கப்டன் லலித் ஹோவகேயும், அப்துல் நஷார் ஹமீத்தும் அந்த வீட்டுக்கு சென்றனர்.

அங்கிருந்த இளம் தம்பதியினரைக் கைதுசெய்தனர். அவர்களை முதலில் “சி” சித்திரவதை முகாமுக்குக் கொண்டுசென்றனர். பின்னர் இருவரையும் செம்மணியில் உப்பளப் பகுதிக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு அவர்களைக் கூட்டிச் செல்லும்போது மண்வெட்டியை எடுத்துவரும்படி என்னிடமும், ஏ.எஸ் பெரேராவிடமும் கப்டன் லலித் ஹேவகே தெரிவித்தார். அதன்படி நாம் இருவரும் துப்பாக்கியுடன் மண்வெட்டியையும் கொண்டு சென்றோம். நான் செல்லும்போது கப்டன் ஹேவகே அந்தப் பெண்ணுடன் தனிமையில் நிற்பதைக் கண்டேன். அச்சமயம் அந்தப் பெண்ணின் உடலில் ஆடைகள் எதுவும் இருக்கவில்லை. பின்னர் அந்தப் பெண்ணின் கணவன் இருக்கும் இடத்துக்குப் பெண்ணை அழைத்துவந்தனர். என்னிடம் இருக்கின்ற மண்வெட்டியை வாங்கிய கப்டன் ஹேவகே இருவரின் தலையிலும் அடித்தார். அவருடன் இருந்த அப்துல் நஸார், ஹமீத், சமரசிங்க ஆகியோர் பொல்லுகளால் அவர்களைத் தாக்கினர். இருவரும் கீழே விழுந்துவிட்டனர். இருவரின் சடலங்களையும் எம்மை புதைக்கும்படி கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். நாம் அந்தச் சடலங்களைப் புதைத்தோம். அந்த இடத்தை என்னால் அடையாளம் காட்ட முடியும். அரியாலைப் பகுதியைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அங்குள்ள மக்களுடன் நன்றாகப் பழகியதால் என்னைப் பற்றி மக்கள் நன்றாகச் சொல்வார்கள்.

எனக்கு தமிழ் தெரியாததால் எனது சிவில் நிர்வாகப் பணிகளுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் என்பவரைப் பயன்படுத்தி வந்தேன். அரியாலைப் பகுதிக்கு நான் கடமைக்கு வர முன்பு அங்கு 50 பேர் காணாமல் போயிருந்தனர் என்று அறிந்தேன். அவர்கள் “சி“ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்படுகின்றது. கல்லூரி மாணவியான கிருசாந்தியின் சடலம் என்னிடம் புதைக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்பட்டபோது அந்தச் சமயம் அது கிருசாந்தியின் சடலம் என்று எனக்குத் தெரியாது. வழமையாக உயர் அதிகாரிகள் பொதுமக்களைக் கொலைசெய்துவிட்டு சடலத்தைப் புதைக்கும்படி என்னிடம் தருவார்கள். நான் அவற்றை புதைக்க ஏற்பாடு செய்வேன். கிருசாந்தி கொலையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, சடலத்தைப் புதைத்ததைத் தவிர. இந்தக் கொலை தொடர்பாக உயர் அதிகாரியின் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் இதனையே கூறினேன். கிருசாந்தி கொலை வழக்கில் முறைப்பாட்டுக்காரர்களின் வாக்குமூலங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. ஆனால் எதிரிகளின் வாக்குமூலங்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. கொலைப் பயமுறுத்தல் செம்மணியில் புதைகுழி இருப்பதாக நான் சாட்சியம் அளித்தால் எனது குடும்பம் கொலைசெய்யப்படும் என்று அச்சுறுத்தல் கடிதங்கள் வந்தன.

 அவற்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளேன். செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை நான் அடையாளம் காட்டுவேன். தூக்குத் தண்டன் விதிக்கப்பட்ட ஏ.எம். பெரேரா ஐந்து இடங்களைக் காட்ட இருக்கின்றார். அதில் ஒன்றில் மட்டும் 25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு கைதியான ஜெயதிலகவும் சில புதைகுழிகளைக் காட்டத் தயாராக இருக்கின்றார். என்னால் சடலங்கள் புதைக்கப்பட்ட மூன்று இடங்களைத் தற்சமயம் அடையாளங்காட்டமுடியாது என்று நினைக்கிறேன். இந்த சம்பவங்கள் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வாக்குமூலம் அளித்து ஒரு வருடமாகிவிட்டது. ஆனால் அங்கிருந்து எலும்புகள் எடுக்கப்பட்டதாக அறிகிறேன். இதற்காகவே மண் மாதிரிகளை எடுக்குமாறு கோரினேன். படையினரையோ, நாட்டைக் காட்டிக்கொடுக்க நான் வாக்குமூலம் அளிக்கவில்லை. எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், சில இராணுவ அதிகாரிகளின் செயல்களை அம்பலப்படுத்தவுமே இந்த வாக்குமூலத்தை அளிக்கிறேன். எனக்கு இந்த நீதிமன்றத்தால் நீதி கிடைக்காமல் போனாலும் சர்வதேச நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்கும் என நினைக்கிறேன். சோமரத்ன ராஜபக்ச சாட்சியாளர்கள் பற்றி எப்போதும் அதிகாரத் தரப்பினரின் குற்றங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

அவர்களின் குற்றங்களைச் சுமக்க ஒரு தொகுதி தரப்பினர் தகுதி பெற்றவர்களாக இருக்கின்றர். கிருசாந்தி படுகொலையிலும் அதுவே நடந்தது. கிருசாந்தி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற விடயம் தெரியவந்தவுடன் யார் தலையிலாவது அந்தக் குற்றத்தை கட்டிவிட வேண்டிய தேவை அப்போது அதிகாரத்திலிருந்தவர்களுக்கு எழுந்தது. அதில் முதலில் சிக்கியவர் சோமரத்ன ராஜபக்ச. அவரளித்த வாக்குமூலங்களில் தன்னை ஒரு கீழ்நிலை துருப்பினனாகவும், தமிழர்கள் படும் இன்னல்களைப் புரிந்துகொண்டவராகவும் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதிலிருக்கின்ற உண்மை, பொய்களுக்கு அப்பால் ஒரு சிங்கள துருப்பினன், நடந்து முடிந்த படுகொலையின் சாட்சியமாக மாறியிருந்தமை வரலாற்றில் குறிப்பிடவேண்டிய ஒன்று. அதனால்தான் என்னவோ சோமரத்த ராஜபக்ச ஏனைய துருப்பினர் போலல்லாமல் அதிக தண்டனையை அனுபவிக்க வெண்டிய நிலையை எதிர்கொண்டார்.

 சோமரத்ன ராஜபக்ச கொடுத்த வாக்குமூலத்தின் பின்னர் அவர் எதிர்கொண்ட பாதிப்புகள் அதிகம். சிறைக்கூடத்துக்குள்ளேயே தாக்குதலுக்கு இலக்கானார். அவரது குடும்பம் துப்பாக்கி குறிகளுக்கு முன்னதாக நிறுத்தப்பட்டது. இவ்வளவு அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு சாட்சிசொன்னார் அந்தச் சிங்களவர். ஆனால் ஒரேயொரு சாட்சியத்தோடு அடக்கி வாசிக்கப் பழகிக் கொண்டார். இவருடன் சேர்ந்து மேலும் எட்டுப் படையினர் கைதாகியிருந்தனர். ஜெயசிங்க, பிரியதர்சன பெரேரா, அல்விஸ், முத்துபண்டா, ஜெயதிலக, இந்திரகுமார நிஸாந்த என்பர்களே கைதுசெய்யப்பட்டிருந்தனர். இதில் இருவர் தப்பியோடியிருக்க அல்விஸ் மூளை மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அத்தோடு கைதுசெய்யப்படவர்கள் இனங்காட்டிய இராணுவ உயரதிகாரிகள் பின்னர் விசாரிக்கப்பட்டார்களா என்பதற்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. அதில் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் போரில் இறந்துவிட்டனர் என்றும் காயப்பட்டனர் என்றும் செய்திகள் வந்தன.


பெரேரா, ஜெயசிங்க போன்றோர் ஏனைய இடங்களிலும் மனித புதைகுழிகள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அவர்களிடமும் இந்தப் படுகொலை தொடர்பிலான ஆதாரங்கள் இருந்தன. ஆனால் அவர்களின் கதைகள் பெரியளவில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. சோமரத்ன ராஜபக்ச காட்டிய இடங்களும், அவர் கொடுத்த வாக்குமூலத்துக்கு அமைவாகவுமே புதைகுழிகள் தோண்டப்பட்டன. இங்கு கைதாகிய இராணுவத்தினர் அரியாலைப் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே. இந்தப் பகுதியில் நடந்த காணாமல் போதல், கைதுகள் தொடர்பிலான ரகசியங்கள் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ஏனைய பகுதிகளில் பரவலாக நடத்தப்பட்ட சட்டவிரோத கைதுகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் பற்றிய தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவர் கொடுத்த வாக்குமூலத்திலேயே இவ்வளவு தொகையானவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியவந்தது என்றால் அந்தக் காலத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துருப்பினருக்கும் எத்தனை குழிகள் தெரிந்திருக்கும்அங்கு என்ன நடக்கின்றது என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இவர்களின் கைதுகளும் குற்ற ஒப்புதல்களும் இலங்கை இராணுவத்தின் மெய்வடிவத்தை வெளிச்சமிட அப்போது போதுமான செய்தியாக இருந்தது. ஆனாலும் வழமைபோலவே இலங்கையின் அரச தரப்பு இராணுவத்தின் குற்றங்களை உடனடியாக ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. கால நீடிப்பின் ஊடாக அநீதியை வழங்கிவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையில் செயற்பட்டது. அது சாத்தியமும் ஆனது. 1996 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட செம்மணி விவகாரம் 1999 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை இழுபட்டது. இந்த மனிதப் புதைகுழியில் கிட்டத்தட்ட 400 பேர் புதைக்கப்பட்டிருந்தனர் என்று குற்றமிழைத்தவர்கள் ஒப்புக்கொண்டனர். அந்தக் காலப்பகுதியில் யாழில் 600 பேர் காணாமல் போயிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை இன்றுவரை அறியமுடியவில்லை. சிலருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. மிகுதியான இளைஞர், யுவதிககைளத் தேடும் பணியை அவர்களின் பெற்றோர் இன்னமும் கைவிடவில்லை.


இந்தக் கைதுகளுக்கும் காணாமல் போதல்களுக்கும் பின்னணியில் சொல்லப்படும் காணரம் புலிகள் அல்லது புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்பதே. ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெறும் அப்பாவிகள் என்பதை ஊரும், உறவுகளும் அறிந்தே வைத்திருக்கினர். 1996 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட யாழ்ப்பாணத்தினுள் பெருமளவிலான விடுதலைப் புலிகள் ஊடுருவி விட்டனர் என்ற சந்தேகம் இளைஞர் கைதுகளுக்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்த சந்தேகம் பொய்யானதாக இருந்தபோதிலும் அந்த ஆண்டில் முல்லைத்தீவில் இழக்கப்பட்ட 1200 உயிர்களுக்கு பதிலீடு யாழ்ப்பாணத்தில் சரிசெய்யப்பட்டது என்பது தமிழர்களுக்குத் தெரிந்தே இருந்தது. யாழ்ப்பணத்தை இழந்த புலிகள் உடனடியாக ஓர் இராணு வெற்றியை அடைய முயன்றனர். முல்லைத்தீவு இராணுவத் தளம் மீதான தாக்குதல் யாழ்ப்பாண இழப்பைச் சமன்செய்தது. அத்துடன் இராணுவத்தரப்பிற்கு ஆளனி மற்றும் படையப் பொருள்கள் ரீதியிலான பேரிழப்பையும் இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியது. அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் தனது வேட்டையை இராணுவம் ஆரம்பித்தது. இனப்படுகொலையை ஒத்த இந்த வகை பலியெடுப்பு யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்தது. அதன் விளைவே செம்மணி மனிதப் புதைகுழி. புதைகுழிகள் அடையாளம் காட்டப்பட்ட பின்னரும் அப்போதிருந்த இலங்கை அரசு பெருங்கால நீடிப்பை திட்டமிட்டு உருவாக்கியிருந்தது. உள்நாட்டு அரசியல் கட்சிகளும், பாதிக்கப்பட்ட மக்களும், மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச மன்னிப்புச் சபையும் முன்வைத்த கோரிக்கைகளுக்கும், போராட்டங்களுக்கும் நீண்டகாலமாக அரசு பதிலளிக்கவில்லை.

விசாரணை, நீதிமன்றத்தீர்ப்பு, குற்றவாளிகளின் உடல்நிலை பாதிப்பு, சரியான நிபுணர்கள் இல்லை, தோண்டுவதற்குரிய காலநிலை இன்னும் வரவில்லை எனப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. ஆயினும் சர்வதேச மன்னிப்புச் சபையும், பிற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் பிரயோகித்த அழுத்தத்திற்கு இலங்கை அடிபணிந்தது. அதைவிட கிருசாந்தியின் சார்பில் வழக்கை முன்நின்று நடத்திய குமார் பொன்னம்பலம் போன்ற சட்டத்தரணிகள் அப்போதைய ஆளுந்தரப்பிடம் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களான இருந்தனர். நேரடித் தொடர்புகளை கொண்டிருந்தவர்களாக இருந்தனர். அரசிடம் அவர்களுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாகவும் இந்த விடயத்தை மூடிமறைக்க முடியவில்லை. விசாரணை குழுக்கள் தொடர்ச்சியாக இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் கூட்டு அழுத்தங்களின் விளைவாக 1999 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிகளைத் தோண்டும் பணி ஆரம்பமாகியது.

அமெரிக்க நிபுணர்கள், சர்வதேச மன்னிப்புச் சபை. ஏசியா பௌண்டேசன் அதிகாரிகள், துறைசார்ந்த பேராசிரியர்கள், பொதுமக்கள், உள்ளூர் அதிகாரிகள், அமைப்புகள், சர்வதேச ஊடகங்கள் கவனிப்பில் முன்னிலை வகித்தன. சோமரத்ன ராஜபக்ச முதலில் ஒரு புதைகுழியைக் அடையாளம் காட்டினார். முதல் கட்டமாக அவர் காட்டிய இடததிலிருந்து 2 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் ஒன்றில் கைகள் இரண்டும் கட்டப்பட்டிருந்தன. மற்றைய எலும்புக் கூடு சேதம் அமைந்திருந்தததால் கைகள், கண்கள் கட்டபட்டிருந்தனவா என்பதை அறிய முடியவில்லை. கண்கள், கைகள், கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டின் மண்டையோட்டுப் பகுதியில்காணப்பட்ட ஆழமான சிதைவுகள் அடித்துத் தாக்கப்பட்டதால் ஏற்பட்டவையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டனர். இரண்டு எலும்புக்கூட்டிலும் அடி காயங்கள் தாராளமாகக் காணப்பட்டன. ஒரு எலும்புக் கூடு நிமிர்ந்தும் மற்றையது பக்கவாட்டிலும் படுத்திருப்பது போன்று போடப்பட்டிருந்தன.

 இரண்டு எலும்புக் கூடுகளுக்கும் நடுவில் சிலிப்பர் கட்டைகள் காணப்பட்டன. இந்த எலும்பு மீட்பு சுவாரஸ்யங்கள் நீடிக்கவில்லை. இரண்டு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதோடு புதைகுழி தோண்டும் படலம் இடைநிறுத்தப்பட்டது. தமது பிள்ளைகளின் எலும்புகளைத் தேடி செம்மணி புதைகுழிக்கு வந்திருந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த எலும்பு ஆதாரங்கள் யாழ்ப்பாணத்தை மனிதப் புதைகுழியின் நகராக்கியது. தென் ஆசியாவிலேயே அதிகளவாக மக்கள் கொன்று புதைக்கப்பட்ட இடமாக செம்மணி புதைகுழியை ஊடகங்கள் அடையாளப்படுத்தின. புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளுக்கு மறுநாளே உரிமைகோரல்களும் யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியிருந்து எழுந்தன. அரியாலையில் இருந்த இயந்திர திருத்தகம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில் காணாமல் போன இரு இளைஞர்களின் எலும்புகளாக அவை இருந்தன. 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இருவரும் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இராணுவத்தால் கைதாகிப் பின்னர் காணாமல் போயிருந்தனர். அதன்பின்னர் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பற்றிய அறிக்கைகள் அடிக்கடி வெளியாகின. பல்வேறு தரப்பட்ட அரசியல் கட்சிகளும், உள்ளூர், சர்வதேச அமைப்புகளும் அதில் அடக்கம். ஏனைய சிப்பாய்களையும் செம்மணிக்கு கூட்டிவந்து மனிதப் புதைகுழிகளை அடையாளம் காட்டச் செய்ய வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. பக்கச்சார்பற்ற, நீதியான, விசாரணைகளை மேற்கொள்வதோடு, அனைத்துப் புதைகுழிகளையும் தோண்டி உண்மையைக் கண்டறியுமாறு செம்மணி வந்து திரும்பிய சர்வதேச பிரதிநிதிகள் கொழும்பில் அறிக்கைவிட்டனர்.

அதன் பின் அவர்களும் வாய்திறக்கவில்லை. பின்னைய நாள்களில் இந்தச் செய்திகளின் சூடு எப்படியோ குறைந்தது. விசாரணைக் குழுக்கள் அடிக்கடி வருவதாகவும், செம்ரெம்பர் 6 ஆம் திகதி மறுபடியும் தோண்டப்படும் எனவும் ஓர் அறிக்கை அரச தரப்பிலிருந்து விடப்பட்டது. அதன்படி குறித்த திகதியில் மீண்டும் தோண்டும் பணிகள் ஆரம்பமாகின. அமெரிக்க பிரதிநிதிகள் எலும்பு மீட்புப் பணிகளைக் கண்காணிக்க வந்திருந்தனர். இறுதியில் முடிவுகள் எதுவும் காட்டாமலேயே இந்த விவகாரம் மந்தமாகியது. பின்னர் எதிராளிகளின் வேண்டுகோளுக்கிணங்க வழக்கு விசாரணை அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் நடந்த புதைகுழி தோண்டலில் அதிகளவில் சேதமடைந்திராத எலும்புக்கூடுகள் இரண்டை மறுபடியும் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். சாட்சியாளர்கள் காட்டி சில இடங்களில் எலும்புக் கூட்டுத் தடயங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவை யாருடையவை என்பதை அடையாளம் காண முடியவில்லை. மூன்றாம் நாள் கண்டி வீதி- நல்லூர் நாயன்மார்கட்டு சந்திவீதி மூலையில் இருந்த இராணுவக் காவலரணின் பின்புறத்தில் மூன்று எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. அருகருகே புதைக்கப்பட்ட நிலையில் ஆடைகள் ஏதுமற்ற நிலையில் ஓர் இளம் பெண் மற்றும் ஆண் ஆகியோரின் எலும்புக் கூடுகளாக அவை இருந்தன. கொழும்புத் துறை பகுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட தம்பதியினரின் எலும்புக்கூடுகளாக இவை இருக்கலாம், அவற்றின் மண்டையோடுகள் பிளந்து காணப்பட்டன.

 தலையில் அடித்துத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட வெடிப்பாக அவையிருக்கலாம் என சட்ட மருத்துவத்துறை நிபுணர் பேராசிரியர் நெரியெல்ல குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து புதைகுழி தோண்டும் பணிகள் நடந்தன. 20 பேரை புதைத்தனர் என்று சோமரத்ன ராஜபக்ச தெரிவித்திருந்த இடமும், கிணறும் தோண்டப்பட்ட போதிலும் அங்கு எலும்புக் கூடுகள் எவையும் இருக்கவில்லை. இதனால் சோமரத்ன மறுபடியும் செம்மணிக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது அவர் சொன்ன பதிலோடு, தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. “செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் உள்ள சரியான இடங்களையே நான் அடையாளம் காட்டினேன். அந்தப் புதைகுழிகளை தோண்டியபோது அங்கு சடலங்கள் காணப்படாததையிட்டு நான் அதிர்ச்சியடைகிறேன்” அதுவரையில் செம்மணியில் இருந்து 15 வரையிலான சடலங்களின் எலும்புகள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. அதே வருடத்தில் டிசம்பர் 6 ஆம் திகதி இதுவரையில் செம்மணியில் நடத்தப்பட்ட புதைகுழி ஆய்வு தொடர்பிலான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. காலநிலை மாறியது. களநிலை நிலவரங்கள் மாறின. அடித்த மழையிலும், வன்னியில் எழுத்த போர் அலைகளிலும் எல்லாமே மறக்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரான ஆட்சி மாற்றமும் சமாதானமும் இந்தப் பெரியளவிலான மனிதப் படுகொலையை மறக்கச் செய்தன.

சோமரத்னவின் மரணதண்டனை பற்றிய செய்தியோன்று கடந்த வருடத்துக்கு முற்பகுதியில் வெளியான செய்தியொன்றில் படித்ததாக நினைவு. அவரோடு கைதானவர்கள் எங்கே? என்ன நடந்தது போன்ற கேள்விகளும், செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் நினைவைப் போல மறந்தேபோயிற்று. உலகளவில் நிரூபிக்கப்பட்ட இந்தக் குற்றம் அல்லது இனமொன்றை கூட்டுப் படுகொலை செய்தமைக்கான ஆதாரம் செம்மணி புதைகுழிக்குள்ளும் வருகின்றது. இதில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் மன்றங்களில் விசாரிக்கப்படுவதும் தண்டனைக்குள்ளாவதும் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டேயிருக்கின்றது. ஆனால் உலகின் கண்முன்னே, அமெரிக்காவின் கண்முன்னே சாட்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட செம்மணி மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இது இலங்கையில் இடம்பெற்ற உள்ளக விசாரணையொன்றின் நம்பிக்கைத் தன்மையினையும், பொறுப்புக்கூறும் போக்கையும் எடுத்துக்காட்டவும் கைவசமுள்ள சிறந்த ஆதாரங்களில் ஒன்று.

 (பிற்குறிப்பு) அன்புள்ள அம்மா. நீங்கள் அனுப்பிய கடிதத்தை வாசித்தேன். கடிதத்தின்படி யாழ்ப்பாண மக்களின் மனவேதனைகளை என்னால் நன்கு உணரமுடிகின்றது. அதுமாத்திரமல்ல, இதுபோல் காணாமல்போகதாகக்கூறப்படும் பல இளைஞர்கள் பற்றிய விவரங்களையும்நான் அறிவேன். அவர்களுக்கு என்ன நடந்தது பற்றி நானும் என்றுடன் சிறைவைக்கப்பட்டுள்ள உதவியாளர்களும் நன்கறிவோம். இருப்பினும் எனது உதவியாளர்களின் நிலைமையோ கவலைக்கிடம். மேஜர் வீரக்கொடி, கப்டன் லலித் ஹேவா மற்றும் அவர்களுக்கு கீழ்பணியாற்றிய இளைய அதிகாரிகளே இந்த அநியாயங்களுக்கு பொறுப்பானவர்கள். கிருசாந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படுகொலைகளுக்கும் இந்த அதிகாரிகள்பொறுப்பாவார். அம்மா! உங்கள் மகன் காணாமல் போன சம்பவத்திற்கும் கப்டன்ஹேவாவுக்கும் நேரடித்தொடர்பில்லை. உங்கள் மகன் பற்றி நான் எனது நண்பர்கள் மூலமாக விசாரித்தேன். உங்கள் மகன் விரைவில் அளுக்கடை நீதிமன்றதில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.


 உங்களால் முடிந்தால் அனுராதபுரம் சென்று உங்கள் மகனைப் பற்றி விசாரித்தறிய முயற்சிக்கவும். இது தொடர்பாக முடிந்தளவு உதவியை நான் செய்வேன். அத்துடன் நான் தங்களிடமிருந்து ஒரு சிறு உதவியை எதிர்பார்க்கிறேன். அந்த நகைக்கடை பொடியனிடம் நான் நகைகள் வாங்கியது பற்றி கூறி அந்த நகைகளை வாங்கியதற்காக, “பில்”ஒன்றுப் பெற்று எனக்கு விரைவில் அனுப்பிவையுங்கள். அவரது தந்தையிடம் முழுவிவரங்களையும் கூறுங்கள். கடந்தகாலங்களில் இடம்பெற்ற பல விடயங்கள் குறித்துமனவேதனையடைவதுடன் அவற்றுக்காக மன்னிப்புக்கோருகின்றேன். தங்களின் சம்பத் (குறிப்பு – இந்தக் கடிதத்தில் சோமரத்ன ராஜபக்ச “சம்பத்” என ஒப்பமிட்டுள்ளார். அவரை அவரது வீட்டில் செல்லமாக “சம்பத்” என்றே அழைப்பார்களாம்.


செம்மணியில்இருப்பதாக நம்பப்படும் பெரும் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக “யுக்திய“ வார இதழில் வெளியான கடிதத்தின் தமிழாக்கம். கிருசாந்தி குமாரசுவாமி வன்புணர்வு, கொலை வழக்கின் முதலாவது குற்றவாளியும், செம்மணி மனிதப் புதைகுழிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டவருமான சோமரத்ன ராஜபக்ஷ 1997 ஓகஸ்ட் மாதத்தில் காணாமல் போன மகன் ஒருவரின் தாய்க்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதம்- கடித உதவி, உதயன் )

No comments