பலாலிக்கு விமான சேவை - இந்திய நிறுவனங்களுடன் பேச்சு


தென்னிந்தியாவில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு விமான சேவைகளை நடத்தக் கூடிய விமான நிறுவனங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்,

சிறிலங்காவுடன் எமக்கு பாரிய தொடர்புகள் உள்ளன. சிறிலங்கன் விமான சேவை, நிறுவனம்  இந்தியாவின் 14 நகரங்களுக்கு தனது சேவையை மேற்கொள்கின்றது.

அதுபோல, சிறிலங்காவின் உட்கட்டமைப்பு  மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இந்தியா பங்காளராக இருக்கிறது.

சிறிலங்காவின் தொடருந்து பாதைகளை மேம்படுத்தும் நோக்கில் 1.3 பில்லியன்  டொலர்களை  உதவியாக வழங்கியுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் 70 வீதமான கொள்கலன் மாற்றீடுகளுடன் இந்தியா தொடர்புபட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்தியா கடனுதவி வழங்கியுள்ளது.  அது எதிர்காலத்தில் சிறந்த வணிகத் துறைமுகமாக இருக்கும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையின் படி, பலாலி விமான நிலையத்திலிருந்து  விமான சேவையை முன்னெடுக்கும் நோக்கில் சில இந்திய விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments