மீண்டும் விக்கினேஸ்வரன்:இந்தியா அழுத்தம்?

வடக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக மீண்டும் சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்த கூட்டமைப்பிற்கு சர்வதேச ராஜதந்திரவட்டாரங்கள்  அழுத்தங்கொடுக்க தொடங்கியுள்ளன.

தற்போதுள்ள சூழலில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி  புதிய கூட்டொன்றிற்கான சந்தர்ப்பம் ஒருங்கிணைந்துவருகின்றது.அதிலும் இந்தியா மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி வருவதுடன் இரா.சம்பந்தனின் எதிர்கால பயணத்திற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினை இணைந்து பயணிக்கவும் இந்திய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் வடக்கிற்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று கூடி தீர்மானித்த பின் அறிவிக்கும் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வடக்கு மாகண முதலமைச்சராக உள்ள சீ.வி.விக்கினேஸ்வரனையே அடுத்த மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம் முடிவினை அறிவிக்கும் எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மகாணம், மற்றும் கிழக்கு மகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளர்கள்; தொடர்பில் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்கவில்லை. அப்படி கட்சியால் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பின் அது எனக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். 

எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது எதிர்வரும் மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுவருவதாகவும், விரைவில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளவர்களின் பெயர்விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments