கதிரைச்சண்டை: டெலோவுக்குள் பிளவு!


பதவி ஆசையில் டெலோ கட்சியின் தலைவர்கள் பறந்தோட அக்கட்சி மீண்டும் பிளவுகளிற்குள்ளாகியுள்ளது.அக்கட்சியின் ஊடகபிரச்சாரங்களிற்கு பொறுப்பாக இருந்த கணேஸ் வேலாயுதம் அக்கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

டெலோ அமைப்பில் வீரச்சாவடைந்த போராளி விக்கியின் சகோதரனான அவர் கொல்லப்பட்ட சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதத்தின் சகோதரருமாவார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த அவர் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட தனது தாய் கட்சியான டெலோவுடன் இணைந்து பயணித்திருந்தார்.

நாடாளுமன்ற குழுக்களது தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையாரது மரணத்தின் போது அவரது இறுதிக்கிரியைகளை நடத்தும் செலவினை பொறுப்பேற்றுக்கொள்வது வரை அவரது அரசியல் பயணத்தில் பணத்தை சுரண்டிக்கொள்வதில் மட்டும் டெலோ தலைமை கவனம் செலுத்தி வந்திருந்தது.

இந்நிலையில் அவரது வளர்ச்சி வடமராட்சியில் தனக்கு போட்டியாகிவிடுமென மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவரை வெட்டியோடத்தொடங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தலின் போது கூட அவர் புறக்கணிக்கப்பட்டிருந்தார்.

நெல்லியடியில் குறித்த நிகழ்வு நடைபெற்ற போது தனது அலுவலகத்தில் அவர் காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை தான் டெலோ கட்சியிலிருந்து வெளியேறுவதை கணேஸ் வேலாயுதம் அறிவிக்கவுள்ளார்.யாழ்.நகரில் குறித்த அறிவிப்பினை விடுப்பதற்கு ஏதுவாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே டெலோவின் ஒருசாரார் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்த மற்றொரு சாரார் அமரர் செல்வநாயகத்தின் மகனான சந்திரகாசனை முன்னிறுத்த முற்பட்டுள்ளதால் பிளவு மேலும் உச்சம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments