கூட்டமைப்பு இந்தியாவை விரும்பவில்லை - கல்வீட்டையே விரும்புகிறது


வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல, ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளானது எமது மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதானதாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போது மக்கள் விரும்புகின்ற கல் வீட்டு திட்டத்தினை இந்தியாவே முன்வைத்துள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தமது திட்ட முன்மொழிவுகளை சமர்பித்துள்ளன. இந்நிலையில் இவை இரண்டு நாடுகளிலும் எந்த நாடு வீட்டுத் திட்டங்களை அமைப்பது என்ற சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக அதன் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் வினாவியிருந்தோம்.

சீன நிறுவனமும் 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக தனது திட்ட முன்மொழிவை கொடுத்துள்ளது. ஆனால் அது கல் வீடல்ல. கொங்கீறிட் போன்ற ஒன்றால் அமைக்கப்படும் வீடாகும். ஆனால் இந்தியா அதே பணத்திற்கு கல் வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. எமது மக்களுக்கு கல் வீடே விருப்பம். எனவே, இந்தியாவுடன் பேசி அவ் வீட்டுத் திட்டத்தை செய்யுமாறு அரசாங்கத்திற்கு நாம் தெரிவித்துள்ளோம்.

அப்படியாயின் கூட்டமைப்பு இந்திய வீட்டுத் திட்டத்தையே விரும்புகின்றதா ?
பதில் :  கூட்டமைப்பு கல் வீட்டுத் திட்டத்தை தான் விரும்புகின்றது. இனி நீங்கள் செய்தி எழுதும் போது இந்தியா சீனா என்று எழுதுவீர்கள். அதற்காக தான் மறுபடியும் இந்தியாவா சீனாவா என்று கேட்கின்றீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது கல் வீட்டுத் திட்டத்தை தான் விரும்புகின்றது. அதனை தான் எமது மக்கள் விரும்புகின்றார்கள். எனவே கல் வீட்டுத் திட்டத்தை இந்தியாவோ சீனாவோ இல்லை ரஸ்யாவோ யார் கல் வீட்டினை கட்டினாலும் நாம் ஏற்றுக்கொள்வோம். எமது மக்களுக்கு தேவையான விருப்பமான கல் வீட்டுத் திட்டத்தினை நடமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

இந்நிலையில் தற்போது மக்கள் விரும்புகின்ற கல் வீட்டுத் திட்டத்தினை இந்தியாவே முன்வைத்துள்ளது என்றார்.

No comments