புதைகுழி அகழ்வுக்குக் காணாமல் போனோர் பணியகம்?

மன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்குக் காணாமல் போனோர் பணியகம் நிதியளிக்குமெனப் பணியகத்தின் தலைவர சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
48 நாட்களுக்கு முன்னர் இந்தப் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இதுவரை 62 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழி அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு நிதி போதாமல் காணப்படுவதாகவும், இதற்கு உதவியளிக்குமாறும் காணாமல் போனோர் பணியகத்திடம் சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து மன்னார்ப் புதைகுழி அகழ்வுப் பணிக்குத் தாம் நிதி வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் உதவத் தயாராகவுள்ளதாகவும் காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தடயவியல் நிபுணர்களின் அகழ்வுப் போக்குவரத்துத் தங்குமிடம், மற்றும் ஏனைய உதவிச் சேவைகளை உள்ளடக்கிய அடிப்படை செலவுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments