திருமுருகன்காந்தி விடுதலைக்கு யாழில் போராட்டம்!


பெங்களுர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரியும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுக்களிற்கு கண்டனத்தை வெளியிட்டும் யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது இந்திய காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில்; 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெர்மனி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து நேற்று காலை அவர் நாடு திரும்பினார். அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய திருமுருகன் காந்தியை தமிழக காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது தமிழக காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்ட அவர் தற்போது சிறையிலடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது விடுதலையினை வலியுறுத்தியும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராட்டகாரர்களை விடுவிக்க கோரியுமே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

அங்கு கருத்து தெரிவித்த முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈழ மக்களிற்காக சமரசமின்றி குரல் கொடுத்துவருகின்ற திருமுருகன் காந்தி தமிழகத்தை தாண்டி காஸ்மீர் வரையுமென பாதிக்கப்பட்ட மக்களிற்காக குரல்கொடுத்து வருகின்றார்.அண்மையில் சுவிஸ் நாட்டில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படவிருந்த போது அவர்களது விடுதலைக்காக தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்களுள் திருமுருகன் காந்தி முக்கியமானவரென தெரிவித்தார். 

No comments