தமிழ் மக்கள் எழுச்சி:அச்சத்தில் கோட்டா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்த போதிலும், வடக்கு கிழக்கு மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்க முடியாது போய்விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளாராம்.
இதனாலேயே வடக்கு கிழக்கில் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளும், அவர்களுக்கு சார்பான சுவரொட்டிகளும் பரவலாக ஒட்டப்பட்டு வருவதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடைந்திருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

“யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் நாம் ஆட்சியில் இருந்தோம். அந்தக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் கையில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் கூட ஒட்டப்பட்டிருக்கவில்லை. எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவில்லை. இதற்கான அர்த்தம் அவற்றை மேற்கொள்வதற்கு அங்கு சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தமை அல்ல. முப்பது வருடங்களாக இந்த நாட்டில் யுத்தம் நீடித்திருந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களின் மனங்கள் மாற்றப்பட்டிருந்தன.

குறிப்பாக தற்கொலைதாரிகளாக மாற்றக்கூடிய அளவிற்கு தமிழ் சமூகத்தின் மனங்கள் மாற்றப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் வடக்கு கிழக்கில் இயல்பு நிலை திரும்புவதற்கும் அந்த சமூகத்தின் மனங்கள் மாறுவதற்கும் குறிப்பிடத்தக்க காலம் தேவைப்படும்.

இவ்வாறான நிலையிலேயே நாம் உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு புனர்வாழ்வு அளித்த சமூகத்தில் இணைத்திருந்தோம். ஆனால் பொது மக்களையும், சரணடையாதவர்களையும் புனர்வாழ்வு அளிப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை.

எனினும் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்தப் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு காலம் தேவை. ஆனால் நாம் அவர்களின் சுதந்திரத்தை தடுக்க முற்படவில்லை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஓன்பதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஏராளமானோரின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக தமிழினப்படுகொலை நாள் அனுட்டிக்கப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூறிய இந்த நிகழ்வை மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியாக அடையாளப்படுத்தியிருந்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த யூலை ஐந்தாம் திகதி கரும்புலிகள் நாளை வடக்கு கிழக்கில் அனுஸ்டித்திருந்ததற்கும் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்ததுடன், மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கே இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்றும் கூறியிருந்தார்.


அதேவேளை நாட்டில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகி வருவதாகவும் இதனால் மீண்டுமொரு பிரிவினைவாத யுத்தம் வெடிக்கும் என்றும் எச்சரித்திருந்த நிலையிலேயே மீண்டும் அதே எச்சரிக்கையை கோட்டாபய முன்வைத்திருக்கின்றார்.


நாம் அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது எந்தவொரு வீதிச் சோதனைச் சாவடிகளும் இருக்கவில்லை. இராணுவம் எந்தவொரு படை நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. எவ்வாறாயினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கோ, அவர்களுக்கு சாதகமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கோ இடமளிக்காது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எம்மால் முடிந்திருந்தது. ஆனால் இன்று ஊடகங்களில் காணக் கிடைக்கும் சம்பவங்கள் நல்லதல்ல. இவற்றுக்கு எதிராக இராணுவமும், புலனாய்வுத் துறையினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று நான் நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments