பரீட்சை கடமைகளில் இராணுவம் இல்லை!

இலங்கையில் பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினர் ஈடுபடமாட்டார்களென்ற உறுதி மொழியை தொழிற்சங்க பிரதிநிதிகளிற்கு பரீட்சை ஆணையாளர் வழங்கியுள்ளார்.
இம்மாதம்  நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது தொடர்பாக – பரீட்சை திணைக்களத்தினரால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக பரீட்சை மண்டபங்களில் இலத்திரனியல் கருவிகளது பயன்பாட்டை முடக்க இராணுவத்தின் உதவியை நாட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வாறு இராணுவத்தினரை பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜிதவுடன்  கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தினர் இன்று வியாழக்கிழமை காலை கந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது தற்போது நடைபெறவிருக்கும் பொது பரீட்சைக் கடமைகளில்  மேலதிக பரீட்சை மேற்பார்வையாளர்களாக இராணுவத்தினரை ஈடுபடுத்த தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை உடனடியாக நிறுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான இராணுவமயமாக்கலை அனுமதிக்க முடியாது என தொழிற்சங்க ஒன்றியத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தற்போது இலங்கை பாடசாலைகளில் 41000 ஆசிரியர்களும், 11000 அதிபர்களும் பணியாற்றுகின்ற நிலையில் - பரீட்சைக் கடமைகளுக்கு அண்ணளவாக 3000 பேரே தேவைப்படுவர். இவ்வாறான நிலையில் போதிய ஆளணியினர் உள்ளபோது  இராணுவத்தினரை பரீட்சைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது அவசியமற்றது எனவும் இது இராணுவமயமாக்கல் செயற்பாடு எனவும், இதனை நிறுத்தவேண்டும் எனவும் தொழிற்சங்க ஒன்றியத்தினர் வலியுறுத்தினர்.

இவ்விடயம் தொடர்பான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் – பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதில்லை என – பரீட்சை ஆணையாளர் உறுதிவழங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments