தொடங்கியது அன்னதானம்:புலம்பெயர் பக்தர்கள் படையெடுப்பு!


புலம்பெயர்ந்து வாழும் வடகிழக்கு தமிழ் தரப்புக்கள் மீண்டும் நல்லாட்சி அரசில் அலுவல் பார்க்க படையெடுக்க தொடங்கியுள்ளனர்.அவ்வாறு வருபவர்களிற்கு அன்னதானம் வழங்கி அனுப்பி வைக்க சிங்கள ஆட்சியாளர்கள் தவறுவதுமில்லை.

அவ்வகையில் இம்முறை சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது ஏற்பாட்டில் புலம்பெயர் கும்பலொன்று வருகை தந்து திரும்பியுள்ளது.ஒருபுறம் மைத்திரியின் விசுவாசிகளாக காட்டிக்கொண்டு மறுபுறம் கோத்தபாய முதல் நாமல் ராஜபக்ஸ வரை உறவுகொண்டுள்ள கும்பல்களது ஏற்பாட்டில் இம்முறை அன்னதானம் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நடந்துள்ளது.

இந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர்;, இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து ஜனாதிபதியின் வடக்கு மற்றும் கிழக்குக்கான இணைப்பாளர் டொக்டர் கோல்டன் டாண் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், நண்பர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.செவ்வேள், நோத் லங்கா இன்சுட்ரூட் நிறுவனத்தின் பணிப்பாளர் பா.கோபாலகிருஸ்ணன் யாழ் வரவு லயன்ஸ் கழகத்தின் தலைவர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இவர்களுள் டாண் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், நண்பர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.செவ்வேள், நோத் லங்கா இன்சுட்ரூட் நிறுவனத்தின் பணிப்பாளர் பா.கோபாலகிருஸ்ணன் போன்றவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த நாமல் ராஜபக்சவுடன் திருட்டு உறவில் இருந்தவர்களென ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், ஆஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பாக வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் என்பனவற்றினை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக கேட்டறிந்து கொண்டதாகவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

எதிர்காலத்தில் வடமாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியினை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான முயற்சிகளில் தனது முழு ஆதரவினையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் அவரது அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. 

தற்போது இங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக மிகவும் மன அளவிலும் பொருளாதாரத்திலும் நலிவுற்று காணப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக புலம்பெயர் உறவுகள் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்ற வேண்டும் என்றும். வேலையற்று நிர்க்கதியாக இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக வட மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி அவர்களுக்கு வேலை வாய்பினை வழங்க புலம்பெயர்ந்து வாழும் செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளை சந்திக்காது இதனை சிங்கள ஆளுநரிடம் கேட்டு தமது இன மக்களிற்கு உதவி செய்யப்போகின்றார்களாவென உள்ளுர் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments