வடக்கின் கடற்பகுதி சீனாவுக்கு ?


நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த சீன கப்பல் தொடர்பாக அதன் எச்சங்களையும் சான்றுகளையும் மீட்கும் பணிகளானது யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதனை இலங்கை மத்திய கலாச்சார நிதியமும் சீன அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தின் கரையோர பகுதிகளான ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கரையோர பகுதிகளிலும் சீனாவின் பண்டைய கால எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அதனை மீட்பதற்காகவே இவ்வாறு சீனாவிற்கு அப் பகுதிகளை வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.சுமார் ஜந்து வருடங்களுக்கு இவ்வாறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இலங்கை அரசுடன் சீன அரசு ஒப்பந்தமொன்றை செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 இருந்த போதிலும் அவ்வாறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதாயின் சீனப் பல்கலைகழகமோ அல்லது சீன தொல்லியல் திணைக்களமோ நேரடியாக இலங்கை தொல்லியல் திணைக்களத்துடன் அல்லது பல்கலைகழகத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.இந்நிலையில் இவ்வாறு வடக்கின் கரையோர பகுதிகளை , குறிப்பிட்ட கால ஆண்டிற்கு தொல்லியல் ஆய்விகளை மேற்கொள்வதற்கு வழங்குவதானது இந்தியாவுக்கு எதிரான பாதுகாப்பு சார்ந்த விடயங்களுக்கான சீனாவின் செயற்பாடக அமையலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments