இனஅழிப்பினை தடுக்க பாடுபடவில்லையென்ற கவலை உண்டு?

முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத்  தடுத்திருக்கமுடியும் என்றஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிஅவர்களின் மறைவையொட்டி வடக்கு முதல்வரின் அஞ்சலிக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமானகலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்திகேட்டுத் தமிழ்க் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 94வது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகியுள்ளார். எனினும் அவர் தமிழ் மக்களின் கருத்தியலிலும்,தமிழக அரசியலிலும்,தமிழ்க் கலை இலக்கியத்திலும் ஆற்றிய மகத்தான பணிகளும் நிகழ்த்திய சாதனைகளும் அவரை மறக்க முடியாத மனநிலைக்கு எம்மை ஆழ்த்தியுள்ளன. 

கலைஞர் கருணாநிதி அவர்கள் சுமார் 60ஆண்டு காலம் தொடர்ந்துமக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தவர். 5 தடவைகள் முதலமைச்சராகப் பதவிவகித்துள்ளார். இது சாதாரணமான ஒரு நிகழ்வல்ல. நவீன இந்திய அரசியல் வரலாற்றில் இவருக்கு தனித்துவமான ஒருவரலாறு அமையும் என்று எதிர்பார்க்கலாம். 

கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் சமூகரீதியின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்கிக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அரசுப் பணிகளில் பெண்களுக்கென இட ஒதுக்கீடு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்று நம்புகின்றேன். இந்தியாவில் முதன் முறையாக பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர் அவர்கள். தன்னால் இயன்ற அளவு மத்தியின் ஆதிக்கத்தை மாநிலத்தில் நிலைகொள்ளவிடாது தடுப்பதற்காக அவர் உழைத்தார். தொழில் துறையில் மத்திய ஆதிக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய–மாநில–தனியார் கூட்டு முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கினார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்று மாநிலஅரசின் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து இந்திய நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார். 

தமிழ் மொழி மீது தீராப் பற்றுமிக்க கலைஞர் கருணாநிதி அவர்கள்,தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டவர்களுக்குப் பணி நியமனங்களில் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். தமிழுக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததோடு,செம்மொழித் தமிழ் ஆய்வுக்காகச் சென்னையில் மத்தியநிறுவனம் ஒன்றையும் உருவாக்கவழிவகுத்தார். இணைய உலகில் தமிழ் முன்னே நிற்க விதைபோடும் நிகழ்ச்சியாக உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கூட்டினார். கேட்கும் தோறும் உணர்வுமுறுக்கேறும் “நீராடும் கடலுடுத்த”என்ற மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக்கியவரும் இவரே. 

கலைஞர் கருணாநிதி அவர்கள் 1956இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடமுன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் “இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும்”என்ற தீர்மானத்தைப் முன்மொழிந்திருந்தார். அன்றில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்காக அவர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.எனினும்,முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத்  தடுத்திருக்கமுடியும் என்றஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு. 

தன் வாழ்வைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாகப் பதிவுசெய்துவிட்டுமறைந்துள்ளகலைஞர் மு. கருணாநிதிஅவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் அவரது இலட்சோப இலட்சம் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கன்னியாகுமரியில் வானுயர அமைந்திருக்குந் திருவள்ளுவர் சிலைபோன்று அவர் பெயரும் காலாகாலத்துக்கும் நிலைத்திருக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments