மைத்திரியும் சீனாவிடம் தேர்தல் நிதி வாங்கினார் - அதிர்ச்சித் தகவல்


2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2015 அதிபர் தேர்தலின் போது, சீன மேர்ச்சன்ட் பொறியியல் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் நிதியைப் பெற்றனர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.

இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவும் கூட விசாரணை நடத்தியது என்று அறியப்படுகிறது.

நிறைவு செய்யப்படாத அந்த விசாரணை குறித்த இடைக்கால அறிக்கை, 2016ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது, சிறிலங்காவில் அரசியல் பரப்புரைகளுக்கு நிதியளிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை.

எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்புகளிடம் இருந்தும், எல்லா அரசியல் கட்சிகளும், பகிரங்கப்படுத்துவது அல்லது எந்த ஆபத்தும் இன்றி சட்ட ரீதியாக கொடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்திடம் இருந்து மகிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக 7.6 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றார் என்று நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாாரம் சூடு பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments