துப்பாக்கி சன்னத்தை மட்டுமே துப்பும் என் பேனாவோ சகலதையும் கக்கும் ! -கப்டன் வானதி

ஒரு விடயத்தை மற்றவர் சொன்ன வழியில் சொல்லாது எமக்கென புதுவழி வகுத்துக் கொண்டு சிறப்பாகச் சொன்னால் அது புதுமை. இப்படி தனக்கொரு வழிகண்டு அதை கவியாய் தந்தவள்தான் கப்டன் வானதி.
கப்டன் வானதி யாழ் தொழிநுட்பக் கல்லூரியிலிருந்து தன்னை தமிழீழ விடுதலைக்காக இணைத்துக் கொண்டவர். நெருக்கடிகளில் உறுதியுடன் மனோபலமும் கொண்டு போராடிய கப்டன் வானதியின் கவிதைகள் காலத்தால் அழியாதவை.
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆனையிறவுப் பெருந்தளம் மீது 1991 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமரில் வீர காவியமான கப்டன் வானதி அவர்களின் நினைவினைச் சுமந்து போராளிக் கவிஞரான வானதியை நோக்கினால் அவள் தேடிய புதுமையை அவளுடைய பெயரே தாங்கி நிற்கக் காணலாம். மற்றப் பெண் நதிகளைப்போல சாதாரண வாழ்க்கைக் கடலில் கலக்க மறுத்து, வான் நோக்கிப் பாயும் நதியாவாள் என்பதை அவள் கண்களின் தீட்சண்யத்திலேயே காணலாம்! இல்லாவிட்டால் ;பத்மசோதி சண்முகநாதபிள்ளை என்ற அவளுடைய இயற் பெயரை அழித்து வரலாறு அவளுக்கு வானதியென்று மறுபெயர் சூட்டியிருக்காது.
இயக்கத்தில் சேர்ந்து வானதியென்ற பெயரைச் சூட்டிக் கொண்ட தினத்திலிருந்து ஆனையிறவுச் சமரில் அவள் வீரச்சாவை தழுவும்வரை அந்தப் பெண்புலியின் வாழ்வைச் சீர்தூக்கினால் அவள் வாழ்வே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் புதுமையாகச் சுடர்விடக் காண்கிறோம்.
துப்பாக்கி ஒரு பலம் மிக்க ஆயுதம் ! மறுமுனையில் துப்பாக்கிபோலவே பேனாவையும் ஓர் பலமிக்க ஆயுதம் என்று கூறுவார்கள். இந்தப் பழமொழியின் தாற்பரியம் அறியாதவரல்ல தேசியத் தலைவர். ஆயுதங்களை வழங்கி எத்தனையோ போராளிகளை களமாட வைத்தவர் அவர். ஆனால் பேனா என்னும் ஆயுதத்தை அவர் ஒப்படைக்க தேர்ந்தெடுத்தது இந்த வானதியைத்தான். போர்க்களத்தில் அவளுடைய துப்பாக்கி சன்னங்களாக வெடித்தது. மறுபுறம் படைப்புலகிலோ அவளுடைய பேனா கவிதைத் தோட்டாக்களை சரமாரியாகத் பொழிந்து தள்ளியது.
அவள் பேனாவின் வரிகளை இன்றுள்ள சூழ்நிலையில் பார்ப்பதற்கு முன்னர் புறநானூற்றுக் காலத்திற்குள் ஊஞ்சல் போல ஒரு தடவை முன்புறம் வீசி எடுக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் மற்றவர்களால் அவள் பெருமையை உணர முடியும். புறநானு}ற்றில் ஓர் போர் வீரனைப் பாடவந்த கவிதை தான் பாடவந்த வீரனின் பெருமையை கூறினால் குறைவாகக் கூறியதாக வந்துவிடும் என்று அஞ்சி கூறாமலே விடுவதாகச் சொல்கிறது. புறநானூற்றில் உண்மையை உண்மையாகச் சொன்ன உயிர்க் கவிதை இதுதான். இனி வானதி தலைவரைப் பற்றிப்பாடிய வரிகளைப் பாருங்கள்,
எழுதி … எழுதி ..
எத்தனை எழுதியும்
இவனைப் பற்றி
சொல்ல முடிவது
சொற்பமே !
சொல்லக் கிடப்பதோ
மிச்சம் !
புறநானூற்றுடன் கை குலுக்கும் இந்த வரிகளே போதும் அவள் கவிதையை சீர்தூக்க. தலைவர் கொடுத்த பேனாவைப்பற்றி அவள் கவி பாடும் பொழுது
எனது
பேனா கூரானது
எனது
கைகளில் உள்ள
துப்பாக்கி போல
ஆனால்
துப்பாக்கி
சன்னத்தை மட்டுமே துப்பும்
என் பேனாவோ
சகலதையும் கக்கும் !
என்று எழுதி வைத்தாள். அந்த எழுத்துக்களில் நிறைய அர்த்தமிருக்கிறது. அந்தப் போராளியின் எழுத்துக்கள் வெறும் சொற் கோர்வைகளல்ல. மேலே அவள் சொன்னதுபோல கருத்தைக் கக்கியும் காட்டினாள்,
கேவலப் படுத்தியவர்களை எல்லாம்
கேள்விக் குறி போல
குனிய வைத்து
விமர்சித்தவர்களை யெல்லாம்
வினாவாக்கி வியக்கவைத்து
பெண்ணின் பெருமைக்கு
மெருகேற்றியவளே !
இது வீரமரணம் அடைந்த அனித்தாவுக்காகப் பாடப்பட்ட கவிதையானாலும் அந்த வரிகளில் வாழ்ந்து கொண்டிருப்பவள் வானதிதான் என்பதை அறிவோர் அவள் பேனாவின் பாரத்தைப் புரிவார்.
ஆயுதம் ஏந்திய எதிரியுடன் போராட ஆயுதம் வேண்டும்! அதுபோல எமக்குள்ளே கிடக்கும் இழிமைகளை கண்டித்து செப்பனிட இன்னொரு கையில் பேனாவும் வேண்டும். அந்தப் பேனாவும் தன்னை ஆகுதியாக்க துணிந்துவிட்ட போராளியின் கையில் இருந்தால் அதன் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ? ஆகவேதான் வானதியின் கவிதைகள் காற்று வெளியில் தவழ்ந்து தமிழ் சமூகத்திற்கு ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு செய்தி சொல்லும் வல்லமை பெற்றிருக்கின்றன…
ஆணாதிக்கப் புயலால்
அடுப்படியில்
அகதியாகி
தீயோடு
மௌன யுத்தம் நடத்துபவளே !
புறப்பட்டு வா !
வானதியின் இந்த வரிகள்தான் சாதாரண தமிழீழப் பெண்களுக்கான எதிர்கால விடுதலை முழக்கம். அதை வழங்கிவிட்டு வானோடு வானாகக் கலந்து நின்றாள் அந்த வீராங்கனை !
உண்மையான படைப்பாளிக்கு அச்சமில்லை ! உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் அச்சமடையேன் என்று பாரதி முழக்கமிடுவான். வானதி மட்டுமென்ன பேரிடி முழங்கும் போர்க்களத்திலேயே அரண் அமைக்காது போரிடும் நெஞ்சுரம் கொண்டவள். சிலாவத்துறை முகாம் தாக்குதலின் போதும், ஆனையிறவுத் தளம் மீதான தாக்குதலின் போதும் அவள் காப்பரண்பற்றிய அச்சமின்றி அஞ்சாத நெஞ்சத்துடன் போரிட்டாள். காப்பரண் இல்லாத இடம் திரும்பிவிடு! என்று எத்தனை வேண்டுகோள் விடுத்தும் திரும்ப மறுத்து உயிரைக் காற்றிலெறிந்த மாபெரும் போர்த்துறவி இந்தப் பெண் கவி.
சாவைச் சொல்லவே பயப்படும் உலகில் அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவள் சாவை சரியாககச் சொன்னாள். உலகத்தின் எந்தவொரு கவிஞரும் சொல்லாத செய்தியொன்று அவள் கவிதையில் புதைந்து கிடக்கிறது. வீரச்சாவடைந்த தோழிகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்தாக எழுதிய கவிதையில் வரும் அந்தச் செய்தி.
தமிழீழ விடியலில்
அடுத்த
கிறிஸ்மஸ்
கரோலில்
என்னிடம் நீ
அன்றேல்
உன்னுடன்
நான் !
ஆம் ! இக் கவியில் அவள் விடியலுக்கு நாள் வைத்தாள் ! அந்த நாளுக்குள் அது நடக்காவிட்டால் அவ்விடமே வருவேன் என்றாள் ! விடியலில் வரவில்லை அவள் சொன்னபடி அவ்விடமே சென்றாள். தான் செல்வதை மட்டுமா சொன்னாள் தனது மரணத்தின் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதி வைத்தாள் !தன் எண்ணங்களை எழுத எழுந்துவர முடியவில்லை ஆகவே என் எண்ணங்களை எழுதுங்கள் என்றும் எழுத்துலகின் முன் வேண்டுகோள் வைத்தாள் ! எழுதாத கவிதை என்ற அவள் படைப்பில்
எழுதுங்களேன் – நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்
ஏராளம்… ஏராளம்
எண்ணங்களை – எழுத
எழுந்துவர முடியவில்லை
எல்லையில்
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால்
முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்
கல்லறையில் இருந்து கேட்கும் வானதியின் இந்தக்குரல் ஜீவன் உள்ள ஒவ்வொரு தமிழனின் இதயத்தையும் பிழிந்தெடுக்கும். ஆனால் ஒன்று! உயிரால் கவி எழுதிய வானதியே உன் எழுத்தை தொடர உலகில் எவரால் முடியும் ? உன்னைத்தவிர வானத்தில் போன நதி மழையாக மறுபடியும் நம் மண்ணில் வரும்
இவரின் மாவீரர்கள் என்கின்ற கவிதை களத்தில் காவியமான வீரமறவர்களின் தியாகத்தில் கருவாகியது…
மாவீரர்கள்!
இவர்கள்
வைராக்கிய விருட்சத்தின்
விழுதுகள்!
ஏகாதிபத்தியத்தை ஏப்பம் விட்ட
அக்கினிக் குஞ்சுகள்!
குறைப் பிரசவங்களுக்கும்
கருச்சிதைவுகளுக்கும் மத்தியில்
பூரணமானவர்கள்
சூறாவளியினாலும் புயற் காற்றினாலும்
அசைக்க முடியாது போன
ஆலமரங்கள் !
இரத்தக் கடலிலே
நீச்சலடித்தவர்கள்
இரையாக்க நினைத்துத்
தூண்டில் போட்டவர்களை
தூண்டிலோடு இழுத்தவர்கள்
உயிர் வாயுவை சுமந்து
சுழியோடியவர்கள்!
எலும்புகளும் மண்டையோடுகளும்
இடறும் போது
இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு
துப்பாகித் தடுப்பால் கரை தேடியவர்கள்
உறுதிக்கும் உவமானமாகும்
உண்மையின் உடன்பிறப்புகள்
எம் விடுதலைத் தீயை
உலகெங்கும் கொழுந்து விட்டெரியச் செய்யும்
கொள்கையின்
தீப்பிழம்புகள்
உறங்கிக் கிடந்தவர்களை
தட்டியெலுப்பிய உதய சூரியன்கள்
போராளிகளிப் படைத்துக் கொண்டிருக்கும்
புதிய சிருஸ்டிகர்த்தாக்கள்!
எதிரியை நோக்கி எடுத்து வைக்கும்
ஒவ்வோர் அடியையும் துரிதப் படுத்தி
முன்னேற வைக்கும் வீரத்துக்கு
விரிவுரை நிகழ்த்திடும் விரிவுரையாளர்கள்!
தமிழீழத்தில் புலரும் பொழுதுக்கு
ஒளி கொடுக்கப் போகும்
சூரியக் கதிர்கள்!
இவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல
எம்முள் எல்லாமாய் இருப்பவர்கள்!
விருதுகளின் பெறுமதி..
அங்கும் இங்குமாய்
குவிந்து புகைந்தபடியே
சாம்பல் மேடுகள்.
உடைபட்ட இடிபாடுகள்
உருக்குலைந்த பிணமலைகள்
வீதிகள் எங்கணும்
அந்நியக் காலடிகள்
இவற்றுக்கிடையே
உருமறைப்புகள் மத்தியில்
குறி பார்த்தபடி வேங்கைகள்
பீரங்கிகள் கவச வாகனகள்
எல்லாமே பொடிப் பொடியாக
ஆய்த பலமும் ஆட்பலமும்
மண்டியிட்டபடியே பின்வாங்க..
வீர மரணங்கள் பெற்றுத் தந்த
விருதுகளின் பெறுமதியே
தமிழீழ விடுதலை!

No comments