தென்னிலங்கை அரசியலுக்கு விஜயகலா பலி:முன்னணி குற்றச்சாட்டு!


அரச அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் தனது ஆதங்கத்தையே வெளியிட்டுள்ளார்.அவரது உள்ளக்கிடக்கையை தெற்கு புரிந்துகொள்ளவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கெடுத்திருந்த அவர் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மௌனம் காத்துவருகின்ற நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

யாழ்.குடாநாட்டினில் என்றுமில்லாத அளவில் சட்டம் ஓழுங்கு சீர்குலைந்துவருகின்றது.அதனடிப்படையில் அரச அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் யாழ்.குடாநாடு இருந்திருந்த காலப்பகுதியில் இருந்த சட்டமொழுங்கு அதனை அனுபவித்தவர்களிற்கு எவ்வாறான பொற்காலமென்பது தெரியும்.அக்காலப்பகுதியில் அதனை அனுபவித்தவர்களுள் விஜயகலாவும் ஒருவர்.அதனை நினைவு கூர்ந்து தற்போதைய மோசமான சூழலை கருதி அவர் இவ்வாறு கருத்தை வெளியிட்டிருக்கலாம்.

இதேவேளை தென்னிலங்கையின் நிலைப்பாட்டையும் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.அரசும் ஏனைய அரசியல் தரப்புக்களும் விடுதலைப்புலிகளையும் எமது போராட்டத்தையும் பயங்கரவாதமாகவே அடையாளப்படுத்திவருகின்றன.விடுதலைப்புலிகளை முன்வைத்து தெற்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலில் தற்போது விஜயகலா விடயமும் சேர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் விஜயகலாவின் பேச்சிற்கு கைதட்டி தமது ஆதரவை வெளிப்படுத்திய அரச உத்தியோகத்தர்கள் மீது விசாரணைகளை நடத்த யாழ்.மாவட்ட செயலர் பணித்துள்ளார்.இது தொடர்பில் பிரதேச செயலர்களிற்கு மாவட்ட செயலர் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments