5 இலட்சத்தை ஏப்பம்விட்ட தமிழரசுக் கட்சி


தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக இன்று (16) கூட்டப்பட்ட வடக்கு மாகாணசபையின் விசேட அமர்வு பிசுபிசுத்துள்ளது. வடக்கு மாகாணசபையின் ஒரு  அமர்விற்கு 5 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் கேலிக்கூத்துக்களினால் இன்றைய அமர்விற்குச் செலவளிக்கப்பட்ட  இலட்சம் ரூபாவும் வீண் விரயமாக்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை ஊழல் குற்றச்சாட்டில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதவி நீக்கியிருந்தார்.  முதலமைச்சரின் முடிவினை செல்லாததாக்க தமிழரசுக் கட்சி சட்டத்தரணிகளில் வழிநடத்தலில் டெனீஸ்வரனினால் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந் நீதிமன்று முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட பதவி நீக்கத்துக்கு இடைக்காலத் தடையும் விதித்தது.

எனினும் முதலமைச்சர் தரப்பு உச்சநீதிமன்றை நாடிய நிலையில் இடைக்காலத் தடையால் எதுவும் செய்ய முடியாது போன தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்கும் வேலைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையிலேயே அதன் ஒரு அங்கமாக இன்று தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களின் கோரிக்கையின்பேரில் விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் தமிழரசின் பங்காளிகளான புளொட் மற்றும் ரெலோ கட்சிகள் இன்றைய அமர்வினை புறக்கணித்திருந்தன. இந்நிலையில் ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்றைய சபை அமர்வினை தமிழரசுக்கட்சி நடத்தி முடித்தபோதிலும் ஏனைய கட்சிகளின் புறக்கணிப்பின் காரணமாக அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை எனக் கூறப்படுகின்றது.

No comments