புஷ்பா ராஜபக்சவுக்கு சீன நிறுவனம் கொடுத்த நிதி இலஞ்சம் இல்லையாம்


புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, 19.41 மில்லியன் ரூபா காசோலையை கொடையாகவே வழங்கியதாக, சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, அவரது மனைவி புஷ்பா ராஜபக்சவினால் நடத்தப்பட்ட, புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, சீனாவின் கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையங்கள் நிறுவனம், 19,410,000 ரூபாவுக்கான காசோலையை வழங்கியிருந்தது.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத் திட்டம் கையெழுத்திடப்பட்ட பின்னர், லஞ்சமாகவே புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது என்று அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்தக் காசோலையின் ஒளிப்படப் பிரதியும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.


இந்த நிலையில், சீன நிறுவனமான, கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையங்கள் நிறுவனம் இன்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத் திட்டம் கையெழுத்திடப்பட்டு , கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே, இந்த கொடை வழங்கப்பட்டது.

எமது கணக்காய்வுகளில் அது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது இலஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்.

ஏற்கனவே இந்த விடயம் ஊடகங்களில் வெளியாகி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டது என்றும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments