வந்து சேர்ந்த பாதைக்கு திரும்பிய நல்லாட்சி?


சர்வதேசத்தை ஏமாற்ற முன்னைய மஹிந்த அரசினால் தொடங்கப்பட்ட விசேட நீதிமன்றங்களை இழுத்து மூட நல்லாட்சி அரசு தயாராகிவருகின்றது.
அவ்வகையில் நவநீதம்பிள்ளையின் விஜயத்தை முன்னிட்டு அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றங்களை மூட நல்லாட்சி அரசு திட்டமிட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைவாக விசேட நீதிமன்றங்களில் கடந்து ஜந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளது வழக்குகளை மீண்டும் அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு அரசு மாற்றஞ்செய்துள்ளது.

தம்மீதான வழக்குகளை இலங்கை அரசு திட்டமிட்டு இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டி அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 2012ம் ஆண்டின் ஓகஸ்ட் மாதமளவில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர்.அவ்வேளையில் ஜநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் வருகை தந்திருந்த நிலையில் அப்போதைய அரசு அவசர அவசரமாக அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றொன்றை திறந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
அத்துடன் அனுராதபுரம் மேல்நீதிமன்றில் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளது ஜந்து வழக்குகள் குறித்த விசேட நீதிமன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஜந்து வழக்குகளும் கடந்த ஜந்து வருடங்களிற்கு மேலாக விசேட நீதிமன்றிலும் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் தொடர்ந்தும் சிறையினில் அடைத்தே வைக்கப்பட்டுள்ளர்.குறித்த விசேட நீதிமன்றம் அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த திறக்கப்பட்ட போதும் அதனை கைவிட்டு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான 400 இற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் எந்த அனுராதபுரம் மேல்நீதிமன்றிலிருந்து விசேட நீதிமன்றிற்கு மாற்றஞ்செய்யப்பட்டதோ அதே அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு மீளவும் அரசியல் கைதிகளது வழக்குகள் விசேட நீதிமன்றிலிருந்து வந்து சேர்ந்துள்ளது.
ஜநா மனித உரிமைகள் ஆணையாளரது வருகையின் போது திறக்கப்பட்ட விசேட நீதிமன்றினையே நல்லாட்சி அரசு இழுத்துமூட முடிவுசெய்து வழக்குகளை முன்னர் விசாரிக்கப்பட்ட அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு திருப்பியுள்ளது.

அரசியல் கைதிகளென எவருமில்லையென சர்வதேச தரப்புக்களில் வாதிட்டுக்கொண்டு மறுபுறம் அவர்களது விசாரணைகளை முடக்கி விடுதலையை தாமதிப்பதில் அரசு மும்முரமாக உள்ளமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளதாக அரசியல்கைதிகளது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.    

No comments