நல்லூரை இழுத்து மூடுகின்றதா நிர்வாகம்?


யாழ்.குடாநாட்டின் அடையாளங்களுள் ஒன்றாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி  சுற்றாடலை மூடிவைக்க மீண்டும் ஆலய நிர்வாகம் முற்பட்டுள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் 500 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை(07) யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வளாகத்தில்; அடையாள உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒரு கட்டமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை வெளிப்படுத்தித் தருமாறு முருகப்பெருமானிடம் கோரி 50 தீச்சட்டிகளைத் தம் கைகளில் ஏந்தி ஆலய முன்றலில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 
இந்நிலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை முதல் நல்லூர் ஆலய முன்றலில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது திடீரென அப்பகுதிக்கு வந்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் நீங்கள் இங்கே போராட்டம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினர்.


இதற்குப் பதிலளித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாங்கள் எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டி முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செய்து வழிபடுவதற்குத் தீர்மானித்தே இப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளோம் என்றனர். நீங்கள் நேர்த்திக்கடனை விரைவில் செய்துவிட்டு வெளியே செல்லுங்கள் என ஆலய நிர்வாகத்தினர் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இருவரில் ஒருவரை நோக்கி நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? எனக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வினாவிய போது எனது பெயரை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக் குறித்த நிர்வாகத்தவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.


நிர்வாகிகளின் உதாசீனமான செயற்பாட்டால் கொதித்தெழுந்த அங்கு கூடியிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் “தமிழனுக்கு கேட்பதற்கு உரிமையிருக்கிறதென உரத்த தொனியில் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆலய நிர்வாகிகள் என தெரிவித்தவர்கள் அங்கிருந்து ஆலயத்திற்குள் தப்பியோடினர்.

;முருகன் மீது நேர்த்தி வைத்து வழிபாடு செய்ய வந்த எங்களை வெளியே கலைக்குமாறு முருகன் இவங்களுக்குச் சொன்னவாரா? இப்படியொரு நிர்வாகம் எங்களுக்குத் தேவையா? எனவும் கண்ணீருடனும், கவலையுடனும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சாரமாரிக் கேள்வியெழுப்பினர்.

ஏற்கனவே நல்லூர் ஆலயத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு மக்கள் ஒன்று திரளாது முட்டுக்கட்டை போடப்பட்டுவருவது தெரிந்ததே.

No comments